(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் பெயர் என்ன? - ஜெப மலர்

மறதி என்பது இறைவன்

தவமின்றி கொடுத்த வரம்...

மறந்து போகும் பல நிமிடங்கள்

வாழ்க்கை பாதையினை

கசப்பின்றி தொடர வழியாய் அமைகிறதே...

காயப்படுத்திய சில உறவுகள் 

கக்கிப் போடும் பல வார்த்தைகள்

சாக்கடையோடு கலந்து சாரமற்றுப்போக

மறதி ஒன்றே மருந்தாய் அமைந்து

மகிழ்ச்சிப்படுத்துகிறது நாட்களை...

மட்டில்லா ஆனந்தம் தந்த மறதியே

அளவில்லா வேதனையும் தருகிறது இன்று..

பெயர் மறந்து போன 

அதிசயம் பூத்தது இங்கே...

பத்து மாதம் சுமந்து

பருவம் வரை கண்களில் நிறைத்து

பார்த்து பார்த்து வளர்த்து

பாசம் நேசம் அனைத்தையும் கொட்டி

பாராட்டி சீராட்டி வளர்த்த

பிள்ளைகளையும் மறந்து விட்ட

கொடுமை நிகழ்ந்து விட்டதே இங்கே...

சுற்றம் உற்றம் பந்தம் பாசம் மறந்திட்டாலும்

பாதியில் துணையாய் இணைந்த என்னை மட்டும்

பாசத்தோடு நினைவில் வைத்து

மூச்சிற்கு முந்நூறு முறை நேசமாய் அழைத்து

என் தோள் சாய்ந்து கொள்வது 

விந்தையிலும் விந்தை அல்லவோ?

மறதி உனக்கு நிரந்தரமானாலும்

துணையாய் உயிருள்ளவரை நானிருப்பேன்

மறந்து விடாதே....

எமனின் பாசக்கயிரானாலும்

என்னை தாண்டியே உன்னிடம் வரும்

உற்ற துணையாய் மட்டுமல்ல

அரணாய் விளங்கிடுவேன் ஆயுளெல்லாம்..

உலகம் மறந்து இன்னல் மறந்து

உயிராய் என்னை சுவாசிக்கும் நிலையில் நீ...

உன் நிலை கண்டு மூச்சிவிட மறந்து

உலகை வெறுத்து யோசிக்கும் நிலையில் நான்....

அல்ஸைமர்ஸ்... இது தான் அதன் பெயரோ?

உச்சரிக்கும் போதே உடலெங்கும்

உக்கிரம் உஷ்ணமாய் ஊடுருவுகிறதே....

யார் அறிவார்? மறதி வரமா? சாபமா?...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.