(Reading time: 4 - 7 minutes)

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.

மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?

நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.

செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது.

சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.

திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர்.

சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி

திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி

செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்

புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்

வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி

வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்

சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி

ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.