(Reading time: 9 - 18 minutes)

 

இதுவரை

மருத்துவம் பயின்ற க்ரிஷ்ணப்ரியாவும் அவளைவிட இரண்டு வயது இளையவளான வானதியும் ஆசிரம தோழிகள். மனித மிருகங்களினால் வேட்டையாடப்பட்டு ஒரு உயிரையும் பிறப்பிக்கச்செய்து இனி வாழ்வது சாத்தியமல்ல என்று தன் உயிரை துறக்கிறாள் வானதி. 

 

வானதியின் இழப்பு தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த மாணவனும் நந்தன் மருத்துவமனையின் முதலாளியுமான மீராநந்தனின் மேல் கோபமாய் திரும்புகிறது. ப்ரியாவை சமாளித்து அவளது கடைசி தின பயிற்சியையும் நிறைவு பெற வைத்தவன் தன் தந்தையுடன், வானதியின் இறுதி சடங்கையும் முடித்துவிட்டு அவளை தன்னுடனே அழைத்து செல்கிறான். 

 

தன் வீட்டில் நுழைய மறுத்தவளை தாயின் துணை கொண்டு சம்மதிக்க வைக்கிறான். வீட்டில் உள்ள அனைவரின் பாசத்தையும் கண்டு கண்கலங்குகிறாள் ப்ரியா. ப்ரியாவின் வாழ்வில் ஒரு பிடிப்பிற்காக நந்தனின் மருத்துவமனையிலே பணிபுரிய கட்டாயபடுத்தப்படுகிறாள். தனக்கு யாரும் தேவையில்லை தன்னை பார்த்துக்கொள்ள தனக்கு தெரியும் என்ற ரீதியில் நந்தனிடம் மீண்டும் கோபமுறுகிறாள். 

 

வானதியின் மகனையும் தன்னுடன் வளர்ப்பதாய் ப்ரியா கூற, குழந்தையை தனியாளாய் பார்த்துக்கொள்வது சிரமம் என்று மறுத்துவிடுகிறான் நந்தன். மருத்துவமனையில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு கோகுல கண்ணனை (வானதியின் மகன்) கொஞ்சிவிட்டு தாமதமாகவே வீட்டிற்கு செல்லும் ப்ரியாவின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொண்டே தன் இல்லம் திரும்புவான் நந்தன். 

 

இதற்கிடையில் நந்தனின் தங்கை யாழும், அவளது தோழி கொளசியும் தங்களுடைய பேசன் டிசைனிங் படிப்பை முடித்துக்கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பட்டத்துடன் வீடு திரும்புகிறார்கள். வீட்டிற்கு வந்ததில் இருந்து நந்தனிடம் காணும் மாற்றத்தினை உணர்ந்திருந்த யாழ் தன் அண்ணனிடம் பேச பெரிதும் முயன்று கொண்டிருந்தாள். க்ரிஷ்ணப்ரியாவின் ஒரு மாத பயிற்சி காலம் முடிவடைந்திருந்தது. 

இனி

அன்று இரவு மருத்துவமனையில் இருந்து வந்த நந்தனை வரவேற்றது யாழிசை தான். “என்ன யாழ் நீ இன்னும் தூங்காம என்ன பண்ற?” நந்தன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் “வா நந்து சாப்பிட போகலாம்...” என்ற யாழை பார்த்து முறைத்தான். “நான் சாப்பிட்றேன் நீ போய் தூங்கு டைம் ஆச்சு” என நந்தன் சொல்லிக்கொண்டிருக்க “இன்னும் யாரும் சாப்பிடல இன்னைக்கு பொளர்ணமில அது தான் நிலா சோறு சாப்பிடலாம்னு எல்லாரும் மாடில இருக்கோம் நீ ஃப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரம் வா” என்று எங்கோ பார்த்தபடி பதிலளித்தாள் யாழிசை. 

“சரி நீ போ… வரேன்” என்றவன் ஐந்து நிமிடத்தில் மாடியில் அவர்களுடன் அமர்ந்திருந்தான். 

மாடியில் இருந்த ஊஞ்சலில் சக்திவேல் தாத்தாவும், குமரகுரு தாத்தாவும் அமர்ந்திருக்க கீழே வட்டமாய் நந்தகோபாலன், அகல்யா, குருப்ரசாத், அபிராமி, ஆதி, முத்தமிழ், கொளசி, யாழ், நந்தன் என்று அமர்ந்திருக்க தமிழினி குட்டியோ அவளது உலகில் தன் பொம்மைகளுடன் ஐக்கியமாகிவிட்டாள். 

 

வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் செலவளிக்கும் அந்த நிமிடம் நந்தனுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. மனதின் ஒரு ஓரத்தில் அவனது க்ரிஷ்ணாவின் நினைவுகளும்…. என்ன தான் ப்ரியா நந்தனை வேண்டாம் என மறுத்தாலும் அவன் மனம் கவர்ந்தவள் அவள் அல்லவா. “ம்மா ரொம்ப பசிக்குது சீக்கிரம் சாப்பாடு கொடுங்க… அது தான் இந்த மங்கூஷ் மண்டையன் வந்துட்டானே” என்று நந்தனை பார்த்தபடியே கேலியாய் யாழ் பேச “ஏன் டி அண்ணனை வம்பிழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதே” யாழை கடிந்தவாறே அகல்யா அனைவருக்கும் உணவை பிசைந்து கொடுக்க அந்த இரவின் குளுமையில் அவரின் கையினால் உண்ட உணவு அனைவருக்கும் தேவாமிர்தமாய் இருந்தது. 

 

குடும்பத்தினரின் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க கடவுளிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார் அகல்யா. நந்தனுக்குமே மனம் இலேசானது போன்ற உணர்வு. அனைவரும் உண்டு முடிக்க சுதா பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி வைத்தார். மணி பதினொன்றை கடந்திருக்க நந்தகோபாலனோ “என்ன முடிவு செய்து இருக்க நந்து?” என்று பேச்சை தொடங்கினார். “எதுக்கு பா?” என்ற கேள்வியை முன்வைத்தவன் “உன் திருமணத்தை பற்றி தான்” என்ற பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

 

ஆதியும் முத்தமிழும் தமிழினி குட்டியை உறங்க வைக்க சென்றுவிட தாத்தாக்களும் உறங்க சென்றுவிட்டனர். அபிராமியும், அகல்யாவும் தோழிகளாய் பேசிக்கொண்டிருக்க யாழும் கொளசியும் இருவரையும் கலாய்த்துக்கொண்டிருந்தனர். 

 

“ப்ரியா கிட்ட பேசனும் பா” என்றதோடு முடித்துக்கொண்டான் நந்தன். 

 

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசு அந்த பொண்ணும் எத்தனை நாளுக்கு தான் தனியாவே இருப்பா” 

 

“சரி பா” என்றவன் மாடியில் ஒரு ஓரத்தில் கைகளை மார்பின் குறுக்கே கட்டியவாறு நின்றுவிட்டான். 

 

அவனருகில் சென்ற யாழோ, “டேய் எதுக்கு இப்போ சோகமா வயலின் வாசிச்சுட்டு இருக்க? மூஞ்சியை பாரு உராங்குட்டான் மாதிரி உர்ர்ர்ருனு” என முனகிக்கொண்டிருக்க அவளது முக பாவனையிலும் பேச்சிலும் சிரித்துவிட்டான். 

 

“டேய் சிரிக்காத கொன்றுவேன்… நான் உன் மேல கொல காண்டுல இருக்கேன்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தவளை கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். 

 

“விடு டா என்னை விடு” என்று சிலுப்பியவளை தலையில் வலிக்காதவாறு இலேசாய் ஒரு முட்டு முட்டி 

 

“விட முடியாது டி குட்டி சாத்தான்” என்றான். 

 

“இப்போ மட்டும் ஏன் டா பேசுர? இருபது நாளா நான் இந்த வீட்டுல தான் இருக்கேன் நினைவு இருக்கா? ஒரு வாட்டி வந்து பேசுனியா” என்று கலங்கிய கண்களோடு நந்தனை பார்க்க அவன் மனதிலோ வீட்டுல எல்லாரையும் ரொம்ப கஷ்டபடுத்திட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது. 

 

ப்ரியா அவனது மருத்துவமனையில் பணிபுரிய சேர்ந்த நாள் முதல் வீட்டில் முகம் கொடுத்து கூட பேசாத தன்னுடைய மடத்தனத்தை அறிந்து குற்ற உணர்ச்சி மேலோங்க 

 

“சாரி டா யாழ் ஏதோ யோசனையிலே இருந்துட்டேன்” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினான். 

 

“எனக்கு உன்னோட சாரிலாம் வேண்டாம்… எப்பவும் ஒன்னு செய்வியே அதை செய்” என்று மிரட்டினாள். 

 

“யாழ் குட்டி அப்போலாம் நாம மட்டும் இருப்போம் இங்க எல்லாரும் இருக்காங்களே… நான் இன்னொரு நாள் செய்யவா?” என பாவமாய் நந்தன் கேட்க 

 

“அதெல்லாம் முடியாது இப்போ சிட்டப்ஸ் போட போறியா இல்லையா?” என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். 

 

“சரி தாயே போடுறேன் கவுண்ட் பண்ணிக்கோ” என்றபடியே யாழின் முன்பாக தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்தான் நந்தன். 

 

பெரியவர்கள் அனைவரும் யாழை கண்டிக்க “அவன் தப்பு பண்ணா இப்படி தான் தண்டனை கொடுப்பேன். என்னை யாரும் கேட்காதீங்க…. உங்க எல்லார் சார்பாவும் தான் இப்போ அவனுக்கு நான் தண்டனை கொடுத்துட்டு இருக்கேன்” என்று அவர்களையும் அடக்கி விட்டாள். 

 

“யாழ் குட்டி போதும் டா கால் வலிக்குது டென் சிட்டப்ஸ் போட்டுட்டேன்” என்று நந்தன் கெஞ்ச “சரி போனா போகுதுனு மன்னிச்சு விடுறேன். மறுபடியும் ஏதாவது தப்பு பண்ண டென், ட்வெண்டி ஆகிடும் ஜாக்கிரதை” என செல்லமாய் மிரட்டிக்கொண்டிருந்தாள். 

 

நந்தனின் இருபுறமும் யாழும் கொளசியும் நின்று கொண்டு “யாரு னா அந்த பொண்ணு?” என்று கொளசி கேட்க “யாரை கேட்குற டா?” என்றான் நந்தன். 

 

“டேய் நடிக்காத நீ இப்படி எரும மாட்டு மேல மழை பேயும் போது நிக்குற மாதிரி அமைதியா பேசுனா உன்னை நாங்க நம்பிடுவோமா ஒழுங்கா சொல்லிடு இல்ல மறுபடியும் சிட்டப்ச் தான்” என்று யாழ் சீண்ட 

 

“அம்மா தாயே…. விட்ரு மா நான் சொல்லிட்ரேன்” என கையெடுத்து கும்பிட்டான் நந்தன். 

 

“அது அந்த பயம் இருக்கட்டும்…. இப்போ சொல்லு யாருனு” என தோரனையாய் கேட்டுக்கொண்டிருந்தாள் யாழ். 

 

இதுநாள் வரை நடந்தவற்றை அவர்களிடம் கூறவும் இருவருக்குமே ப்ரியாவை நினைத்து கவலையாக தான் இருந்தது. 

 

சிறிது நேர அமைதிக்கு பின் யாழே தொடந்தாள் “டேய் நந்து தனியா வளர்ந்த பொண்ணுங்க குழந்தைங்க மாதிரி… என்ன தான் அவங்களை ரொம்ப தைரியமா காட்டிக்கிட்டாலும் அவங்க மனசு ஒவ்வொரு விசயத்துக்கும் ஏங்கிட்டு தான் இருக்கும். எல்லாத்தையும் பகிர்ந்துக்க ஒரு ஆள் இல்லைனு வருத்தப்படுவாங்க ஆனா வெளிய அவ்வளவு சந்தோசமா தன்னை காட்டிப்பாங்க. அவங்களை முழுசா புரிஞ்சிக்கனும். அவங்க வேண்டாம்னு சொன்னா அது அவங்களுக்கு தேவைனு தெரிஞ்சிகனும். அவங்க போட்டு வைச்சு இருக்க கோட்ட தாண்டி அவங்களை கொண்டு வரனும்” என்று விடாமல் பேசிக்கொண்டே போக அதில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவன் விளையாட்டாய் 

 

“என்ன கொளசி உன் தோழிக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கு போல பயங்கரமா பேசுறாங்க” என்று கிண்டலடிக்க 

 

“அண்ணா நீங்க இனி நடந்து போக மாட்டீங்க போல இருக்கே உங்க ஹொச்பிட்டல இருந்து ஒரு ச்ட்ரெட்சர் பார்செல் சொல்லிடவா” என கொளசியும் கேலி பேச எதையோ தேடிய யாழின் கைகளில் ஒரு உருட்டு கட்டை கிடைக்க நந்தனை அடிக்க விரட்டிக்கொண்டிருந்தாள். 

 

யாழின் கையில் சிக்காமல் ஓடியவன் “யாழ் குட்டி வேண்டாம் டா மீ பாவம் நீ சொல்றபடியே இந்த அண்ணன் கேட்க்குறேன்” என்று பேசியபடியே யாழின் பின்னால் சென்று இலாவகமாய் அவள் கையில் இருந்த கட்டையை பறித்திருந்தான். 

 

“போடா மங்கூஸ் மண்டையா உனக்கு போய் நான் அட்வைசு செய்தேன் பார்த்தியா என்னை தான் சொல்லனும்” என்று யாழ் சலித்துக்கொள்ள 

 

“சாரி குட்டி சாத்தான் நீ சொன்னதுலாம் எனக்கும் புரியுது அவகிட்ட பேச தான் கொஞ்சம் பயமா இருக்கு” என நந்தன் சமாதானமாய் கூற 

 

“அண்ணா நாங்க வேணும்னா பேசவா” என்று கொளசி எதிர்பார்ப்புடன் கேட்டாள். 

 

“வேண்டாம் டா சாமி. அவளுக்கு நாளைக்கு பிறந்தநாள் வேற நானே நாளைக்கு பேசுறேன். நீங்க போய் எந்த குட்டையையும் குழப்பி விடாம இருந்தா சரி” என்று சலித்துக்கொண்டான். யாழும் கொளசியும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டு “அது அந்த பயம் இருக்கட்டும்” என ஒரே மூச்சாய் எச்சரித்தனர். 

 

இவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியே. யாழ் ஏதோ யோசனை வந்தவளாய் “டேய் நந்து இப்போ டைம் என்ன?” என்று கேட்க 

 

“11.30 டி குட்டி சாத்தான்…. ஆமா இப்போ எதுக்கு நீ டைம் கேட்ட?” என்றவனை நோக்கி “நீ மங்கூஸ் மண்டை மட்டும்  இல்ல டா  சரியான மரமண்டை… 12 ஆக இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு நீ ஷர்ப்பா 12 க்கு ப்ரியாவை பார்க்க போ. அவங்க ஹேப்பி ஆகிடுவாங்க” என்று குதூகலிக்க 

 

“அய்யயோ இந்த குட்டி சாத்தான் எதையோ ப்ளான் பண்ணிடுச்சு போலையே. காலைல அவ கிட்ட திட்டு வாங்கிக்கலாம்னு பார்த்தா இவ இந்த  அர்த்த ராத்திரிலே என்ன க்ளோஸ் பண்ண பாக்குறாளே” என்று தன் மனதினுள்ளே புலம்பியவன் யாழிடம் “காலைல பேசிக்குறேன் யாழ்” என்று கூற 

 

“உனக்குலாம் லவ் செட்டே ஆகாது டா” என தன் தலையிலே அடித்துக்கொண்டாள். 

 

“இப்போ என்ன நான் ப்ரியாவை பார்க்க போகனும் அது தான” என்று நந்தன் கேட்க "ஆமா" என கோரசாய் பதிலளித்தனர் யாழும், கொளசியும். 

 

"மவனே இன்னைக்கு உனக்கு ஆப்பு ரெடியா இருக்கு டி" என்று வாய்க்குள்ளே முனகியவன் தன்னுடைய ராயல் என்பீல்டு வண்டியில் ப்ரியாவின் இல்லம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். 

 

"தட் தட்" என்ற ஒலியை கேட்டதும் திடுக்கிட்டவளாய் மணியை பார்த்தாள் க்ரிஷ்ணப்ரியா. 12 ஆக பத்து நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது. "இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது இதுவரை இது போல நிகழ்ந்தது இல்லையே?" என்ற யோசனையிலே அமைதியாய் அமர்ந்திருந்தாள். 

 

மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்க “யாரது” என்ற அவளது கேள்விக்கு எந்த பதிலுமில்லை. 

 

ப்ரியாவின் வீட்டிற்கு வந்தது நந்தன் தானா? ப்ரியா கதவை திறப்பாளா? நந்தன் தன்னுடைய காதலை ஏற்று கொள்ள வைப்பானா? ப்ரியாவிற்கு ஆபத்தெனில் அவளை நெருங்கும் ஆபத்திலிருந்து விடுவிப்பானா நந்தன்?

 

 

மகிழ்ந்திரு

 

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.