பிறகு அவளிடமும் இவனுடைய கதையைச் சொல்லப் போகிறேன்" என்று என்னைப் பார்த்துச் சிரிப்பார். நானும் பதிலுக்குச் சிரிப்பது போல் நடித்து வெட்கப்படுவேன். நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டேன். அந்தக் காலத்தில் பாக்கியம் என்னைப் பார்க்கும்போது புன்சிரிப்புக் கொள்வதோடு நின்றார். தட்டுவதும் பழைய கதையைச் சொல்லிச் சிரிப்பதும் இல்லை. அன்பு கைகளின் அளவில் வரவில்லை; கண்பார்வையளவிலும் புன்சிரிப்பின் அளவிலும் நின்றது. உள்ளத்தில் அன்பு இல்லாமற் போகவில்லை. வீட்டில் எனக்கென்று முறுக்கு முதலிய தின்பண்டங்கள் செய்யாவிட்டாலும், சில நாட்களில் ஏதேனும் சிறப்பான உணவு வகை செய்தால், ஒரு கிண்ணத்தில் வைத்து என் தாயிடம் கொடுத்து. "தம்பி சாப்பிடும்போது மறக்காமல் கொடு அம்மா" என்று சொல்லிவிட்டுப்போவார். அடுத்த ஆண்டில் சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தான். அவன் என்னோடு நெருங்கிப் பழகியதும் அப்போதுதான். சந்திரனும் நானும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், பாக்கியம் எங்களைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வது உண்டு. வரவர, அந்த அன்பு எங்கள் இருவர் மேலும் பொதுவாக இருந்தது போய், சந்திரன் மேல் மிகுதியாக வளர்ந்தது. சில நாள் மாலையில் எங்கள் இருவரையும் அழைத்து உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பார். அப்படிப் பேசும் போதும் சந்திரனைப் பார்த்தே மிகுதியாகப் பேசிக் கொண்டிருப்பார். நானே வலியக் கலந்து கொண்டு பேச வேண்டியிருக்கும். சில நாட்களில் சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவனுடைய தலைமயிரை அடிக்கடிக் கோதுவார்; கன்னத்தைத் தட்டுவார்; கிள்ளுவார்; அவனுடைய கையை எடுத்துத் தன்கையில் வைத்து கொள்வார். அவ்வாறு செய்வன எல்லாம் என்னை அடியோடு புறக்கணிப்பன போல இருக்கும். வேறு யாராவது சந்திரனிடம் அவ்வாறு பழகினால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைக் குழந்தைப் பருவம் முதல் பாராட்டிப் போற்றியவர் இப்படி என்னைப் புறக்கணித்து வேறொருவனைப் பாராட்டத் தொடங்கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.
இந்த நிலையில் வேறொருவனாக இருந்தால் அவனை அடியோடு பகைத்துக் கைவிட்டிருப்பேன். ஆனால் சந்திரனை அவ்வாறு பகைக்க முடியவில்லை. அவன் பாக்கியத்தின் பாராட்டுச் சீராட்டுகளுக்கு மகிழ்ந்து என்னைப் புறக்கணிக்கவில்லை. மேன் மேலும் என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். என்னைப் பிரிந்து ஒரு வேளையும் அவன் பொழுது போக்கியதில்லை. அதனால் அவனுடைய நல்ல பண்பு என் மனத்தை அவனிடம் ஈர்த்து வைத்தது.