(Reading time: 10 - 20 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப் பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார். ஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு கிராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப் பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார். தலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். இன்ஸ்பெக்டர் வியந்தார் ; "கிராமத்தில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்" என்று சொல்லி எழுந்தார்.

  

சந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், "உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்" என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

  

சாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். இன்ஸ்பெக்டர் சிரித்தார். "கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்..." என்று நிறுத்தினார்.

  

"இந்தக் காலத்தில் எப்படி அய்யா நம்புவது? நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது" என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.