(Reading time: 14 - 27 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன். அந்தச் சில மாணவர்கள் தாங்கள் புகைத்துக் கெட்டதோடு நிற்காமல், மற்றவர்களையும் கெடும்படியாகத் தூண்டி வற்புறுத்தினார்கள். அதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே பகையாக முற்றுவதற்கு முன்பே, அளவோடு நின்று பழக்கத்தை வரையறை செய்துகொள்வது நல்லது என்று மெல்ல ஒதுங்கினாற்போல் நடந்தேன்.

  

சந்திரன் என்னை அழைத்துச் செல்ல முடியாதபடி கடமைகளில் ஈடுபட்டிருந்தால், நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன். ஒருநாள் அவனுடைய அறையை நெருங்கிச் சென்றபோது, "எங்கே சந்திரா போயிருந்தாய்?" என்று கேட்ட ஒருவனிடம், "வேறு எங்கே! மெரினாவுக்குத்தான்" என்று சந்திரனே சொன்னான். அதைக் கேட்டபோது எனக்கு எப்படி இருக்கும்? என்னை விட்டுத் தனியே கடற்கரைக்குச் செல்லும் அளவிற்கு நட்பு மாறிவிட்டதே என்று வருந்தினேன்.

  

வாலாசாவில் இருந்தபோது எல்லா வகையிலும் என்னைப் போலவே நடந்து, எனக்கு உற்ற தோழனாக இருந்த சந்திரனிடத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு என் உள்ளம் நொந்தது. சிலவற்றைக் கடிந்து திருத்த வேண்டும் என்றும் என்மனம் தூண்டியது. ஆனால், சொல்லிப் பயன்படாதபோது ஏன் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை சாமண்ணா, "நீ அடுத்த ஆண்டில் கல்லூரியில் படிப்பதாக இருந்தால்தான் சந்திரனையும் அனுப்புவேன். இல்லையானால் நிறுத்திவிடுவேன்" என்று என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவனுடைய தந்தை என்னைப் பற்றி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல் என்னளவில் அமைதியாக நடப்பது தகாது என்று என் மனச்சான்று சுட்டிக்காட்டியது. அவ்வாறே சொல்லிப் பார்ப்போம் என்று ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.

  

ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்ததும் அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல் வழியாக என் தலையைக் கண்டதும், "வேலு! என்ன? ஏன் பார்க்கிறாய்?" என்றான். சிறிது அச்சத்தோடு நின்றேன். எழுந்து கதவைத் திறந்து, "வா" என்றான். உள்ளே சென்று உட்கார்ந்தேன். "என்ன! படிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது?" என்று நல்ல மனநிலையோடு கேட்டான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.