(Reading time: 25 - 50 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 14 - மு. வரதராசனார்

  

தற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை - பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன். அந்தத் திறமை அவனுள் எப்படித்தான் அடங்கிக் கிடந்ததோ என்று வியந்தேன். சிறப்பான கலைத் திறமை எப்படி அவனுள் அடங்கிக் கிடந்ததோ அப்படியே காதலுணர்ச்சியும் அடங்கிக் கிடந்தது போலும் என்று எண்ணினேன். கலைத்திறமை இயல்பாகவே வெளிப்பட்டு விளங்கக் கூடியது; நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாதது. பாடத் தெரிந்தவன் எங்கேனும் எப்படியேனும் பாடித் தீர்வான்; ஓவியம் வரையத் தெரிந்தவன், தரையிலேனும் விரல்களால் கீறித் தீர்வான்; நடிக்கும் கலைத்திறமையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்படுத்தாவிட்டால் அது மனித உள்ளத்தைக் கொன்றுவிடக் கூடியது. அதனால் சந்திரன் மேடை ஏறி ஆடிவிட்டான். ஆனால் காதலுணர்ச்சி அப்படிப்பட்டது அல்ல; பிறர்க்குப் புலப்படாமல் மறைப்பதிலேயே காதலர் கருத்தாக இருக்கின்றனர். சந்திரனும் அப்படித்தான் இருந்துவிட்டான். பைத்தியக்காரன். தன் காதலை என்னிடம் மறைத்தது மட்டும் அல்லாமல், தன் காதலியிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறான்! இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த போது விடுதி வேலையாள் வந்து, "அய்யா! உங்களை யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள்" என்றான். "என்னையா?" என்று மாலன் எழுந்தான். "அவரை, அவர்தானே வேலு" என்றான். நான் எழுந்து சென்றேன். ஒருவேளை சந்திரன் வேறு எங்கிருந்தாவது என்னை அழைத்திருக்கலாம். வேறு யார் என்னைத் தொலைபேசியில் அழைக்கக்கூடும் என்று ஒருவகை மகிழ்ச்சியோடு சென்றேன். மாலனும் உடன் வந்திருந்தான்.

  

"வேலு பேசுகிறேன்."

  

"இமாவதி, வணக்கம்."

  

என் மகிழ்ச்சி குலைந்தது. "வணக்கம்" என்றேன். உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. சந்திரனைப் பார்த்ததாகச் செய்தி சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு "ஏதாவது செய்தி உண்டா?" என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.