என்ற நம்பிக்கை இல்லாத போதும், அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்துவிட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை, அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்? எவ்வளவு தியாகம் வேண்டும்? சரியோ தவறோ, ஒருவனோடு பிணைந்து விட்ட வாழ்வு அவனோடேயே போகட்டும் என்ற துணிவு பழங்காலத்தில் பெண்களுக்கு இருந்தது. இந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் இப்படித் துணிய மாட்டாள். கற்பகம் மட்டும் துணிய முடியுமா? அவளைக் குறை கூற முடியாது" என்றார்.
"கற்பகத்திடமும் குறை உண்டா" என்றேன்.
"உண்டு உண்டு. அவளும் பிடிவாதக்காரி. நயமாகப் பேசவும் பழகவும் தெரியாதவள். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ளவள். உண்மையும் நேர்மையும், மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணைக்க முடியாது; அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை. கற்பகத்திடம் அந்தக் குறை உண்டு. எதற்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாள். நயமே இல்லை" என்றார்.
"அவளுடைய அண்ணன் சந்திரனிடம் அந்தக் குறை உண்டு" என்றேன்.
அதற்குள் குழந்தை மாதவி விழித்து அழவே, எங்கள் பேச்சு அந்த அளவில் நின்றது.
மறுநாள் பகல் இரண்டு மணிக்குத்தான் பெருங்காஞ்சியிலிருந்து அம்மா வந்து சேர்ந்தார். வந்ததும் அலுத்துக் களைத்துக் கூடத்தில் உட்கார்ந்தார். செய்தி அறிவதற்காக நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்தோம். அப்போது அப்பாவும் வீட்டில் இருந்தார். அவரும் செய்தி தெரிந்து கொள்வதற்காக நின்றார்.
"கற்பகத்தின் கலியாணத்துக்குப் போனபோது ஒன்றரை நாள் பழகினேன். அவளுடைய அன்பையும் குணத்தையும் நினைத்தால் மனம் கேட்கவில்லை. அய்யோ! பெண்ணே! போய்ப் பிணமாய்ப் பார்த்தேன். நம் வீட்டுக்கு வரணும் வரணும் என்று அவ்வளவு ஆசையாய் இருந்தாளாம். அந்தக் குடும்பம் கொடுத்து வைக்கவில்லை. முகத்தில் பால் வடிகிறது. என்ன களை! என்ன குணம்! ஊரே அழுது விட்டது" என்றார்.