(Reading time: 20 - 40 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

திகைப்பு மிகுதியாயிற்று. 'அவர் எங்கோ போய்விட்ட செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?' என்று கேட்டேன். 'நேற்றுத் திருமணமாகி வந்த உங்களுக்கு அவர் போய்விட்டது எப்படித் தெரியும்?' என்று அக்கா என்னையே திருப்பிக் கேட்டார்."

  

இந்த அளவிற்கு மனைவி சொல்லியவுடன், என் கலக்கம் தீர்ந்து உடனே இமாவதியின் நினைவு வந்துவிட்டது. "அடடா!" என்றேன்.

  

"ஓ ஓ! உங்களுக்கு இப்போதுதான் யார் என்று தெரிந்ததா?" என்றாள் மனைவி.

  

"ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பெண். அவளாகத்தான் இருக்க வேண்டும்" என்றேன்.

  

"பெண்ணா? எனக்கு மேல் வயதில் பெரியவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்."

  

"இருக்கலாம் அப்போது பெண்தானே? நானும் சந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் ஆகாத பெண். சரி சொல்லிமுடி. அப்புறம் தான் விரிவாகச் சொல்வேன்."

  

"அப்புறம் என்ன? உனக்கு எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, நான் கேட்க, வேடிக்கையாக இருந்தது. அவர் முன்னமே ஒருமுறை ஓடிப்போய் வந்தவர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகு நான் எல்லாம் சொன்னேன். அவருக்குத் திருமணம் ஆனது. மனைவியோடு அன்பாக வாழாதது. அந்த அம்மா கிணற்றில் விழுந்து செத்தது. பிறகு அவர் ஓடிப்போனது எல்லாவற்றையும் நான் சொன்னேன். வியப்போடு கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப்பட்டார். அழாத குறையாக அந்த அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது" என்றாள்.

  

இவ்வளவு செய்திகளையும் இமாவதிக்குச் சொல்லி இருக்கத் தேவையில்லையே என எண்ணினேன். "இதை எல்லாம் ஏன் சொன்னாய்? அந்த அம்மா சந்திரனைப் பற்றித் தவறாக நினைப்பாரே" என்றேன்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.