(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 01 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 1. வேதாந்தி

ன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் 'பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸரஸ்வதி வந்து நின்று, "அத்தான்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவானாகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்து கொண்டு கத்துகிறாள். ஹும் . . ஹும். எழுந்திரு! அத்தான் எழுந்திரு! இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி பாடினால்தான் எழுந்திருப்பாயோ?" என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.

ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பார்த்தான். பிறகு, “அப்படியானால், நேற்று வந்து போனார்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, ஸரஸு?' என்று கேட்டான்.

"ஆமாம் அத்தான்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண்ணாம் - பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனிக் காட்டு ராணிமாதிரி அதிகாரம் செய்வாளாம்!"

ஸரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப் பின்னலை கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறினாள்.

"ஓஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே, ஸரஸு! நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நீ சங்கீதம் பயில்வதை விட்டு விட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயானால், இந்தமாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!" என்றான் ரகுபதி சிரித்துக்கொண்டே.

”ஐயையோ, சரடா? இல்லை. அத்தான், நிஜமாகத்தான் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பனாரே அத்தையிடம் தன் பெண்ணைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்து கொண்டிருந்தார்! ” என்றாள் ஸரஸ்வதி.

அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்பதற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இருவரையும் அதட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.