Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 04 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 4. அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா?
பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.
"ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டானாக்கும்" என்று வாடகை வீட்டில் இருந்து கொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிறோம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்றோரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டே ஆரம்பித்தாள் சாவித்திரி :
"நானுந்தான் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லாமல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?"
"ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். 'அத்தான், அத்தான்' என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!" என்றாள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால்கூட கண், காது, மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும், பாட்டிக்கும் பல தகராறுகளும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம்.
"சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு விடு, சாவித்திரி!" என்று சந்துரு அதட்டிக் கூறி அவளைக் கண்டித்தான்.
"என்னடா அப்பா, அப்படிச் சொல்லிவிட்டேன்? நீ பிரமாதமாக அவளுக்குப் பரிந்துகொண்டு கிளம்புகிறாயோ" என்று வெடுக்கென்று கேட்டு அவனைப் பொசுக்கிவிடுவது போல் நிமிர்ந்து பார்த்தாள் சாவித்திரி.
"கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்னால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறைகளைப்பற்றியே நீ பேசிக்கொண்டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின் றன என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்: இனிமேல் உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும், ஸரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா, சாவித்திரி?" என்று இதுவரையில்