தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர். ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம், ஸரஸ்வதியின் தகப்பனார் தம் நண்பரிடம் அவரைப் பல உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும்மசாரியாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின். வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் நதியில் நொப்பும், நுரையுமாகப் புது வெள்ளம் செக்கச் செவேலென்று சுழித்துக்கொண்டு ஓடியது. காலைச் சூரியனின் தங்க நிறக் கிரணங்கள். சிவந்த தண்ணீரில் விழுந்து மேலும் அதைத் தங்கமய-மாக்கியது. நதியின் இரு மருங்கிலும் அடர்ந்த சோலைகள். வண்டுகள் ரீங்காரமிட்டன. பட்சிகள் இனிய குரலில் இசை பாடின. தொலைவில் திப்புவின் சமாதிக்கோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தது. நதிக்கரையை அடுத்த பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிந்து கிலமாகக் கிடந்தன. மனித வாழ்வின் க்ஷண கால இன்பத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அவை.
ரெயில் பிரயாணத்தால் அலுத்துப்போய் ஸரஸ்வதி பகல் போஜனத்துக்கு அப்புறம் படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் விழித்து எழுந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். இப்படி தேகம் தெரியாமல் தூங்கியதை நினைத்து அவளே வெட்கிப் போனாள்.
"தூங்கி எழுந்தாயா அம்மா? வெளியே போய் இப்படி உலாவிவிட்டு வருவோமா?" என்று தகப்பனார் மகளை அழைத்தார்.
மூவரும் நதிக்கரை ஓரமாகவே மௌனமாக நடந்தனர். வெறுமனே 'வள வள' வென்று பேசுவதைவிட, அங்கு நிலவி யிருந்த அமைதியை ரஸிப்பதே பெரும்பொழுது போக்காக அவர்கள் கருதி இருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தகப்பனார் அன்று உற்சாகமாக இல்லை. 'மகள் வளர்ந்து விட்டாள். தனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. அவளுடைய வருங் காலம் எப்படி?' என்று அவர் மனம் ஓயாமல் அவரைக் கேட்டது. இதுவரையில் பேசாமல் இருந்த ஸரஸ்வதி, "அப்பா! இந்த நதிக்கரையும், அதோ தெரியும் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், இந்த ஊரின் அமைதியுமாகச் சேர்ந்துதான் கோபால மாமாவை இப்படி எதிலும் பற்றில்லாமல் வாழச் செய்திருக்க வேண்டும். நான்கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். இந்த ஊரிலேயே ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் என்ன?" என்று ஆர்வத்துடன் தகப்பனாரை விசாரித்தாள்.