இடையில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து தனியாகவே, சுதந்திரமாக இருந்து வந்தவள். வீட்டுக்கு எஜமானி என்கிற எண்ணம் அவளுக்கு வளர்ந்து போயிருந்தது. அந்த வீட்டில் இன்னொருவர் சுதந்திரமாக வந்து தங்க வேண்டும் என்பதை அவள் விரும்பாதவள். தன்னுடைய புருஷனையும், குழந்தை சுமதியையும், தன்னையும் தவிர அவளுக்கு வேறு ஒருவருமே தேவையில்லாமல் இருந்தது.
செழித்து வளர வேண்டிய கொழு கொம்பிலிருந்து பிடுங்கித் தரையில் எறிந்த மாதிரி பூங்கொடியாகிய பவானியைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்?
நாத்திக்கும். மதனிக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து, அதற்கேற்ப கதைகளையும், சம்பவங்களையும் கேட்டும் படித்தும் அந்த எண்ணத்திலேயே ஊறிப் போயிருப்பவர்கள் நாம். நாத்தி என்ன பூவும் மணமுமாகவா அவள் இல்லத்தை நாடி வந்திருக்கிறாள்? அவள் எதிரில் ஒரு புதுப் புடவை உடுத்த முடியுமா? அவள் பார்த்துக் கோமதி கணவனுடன் பேசி மகிழ முடியுமா? அவள் விடும் பெருமூச்சு நெருப்பைவிட அதிகமாகச் சுட்டுப் பொசுக்கி விடுமே என்றெல்லாம் கோமதி நினைத்தாள்.
”இவருக்கு என்ன? வா என்று சுலபமாகக் கூப்பிட்டு விடுகிறார்! வீட்டிலே அனுபவிக்கப் போகிறவள் நான் தானே? காலையில் கம்பெனிக்குப் போனால், இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் இவருக்கு வீட்டில் நடப்பவை பற்றி என்ன தெரியப் போகிறது?"
கோமதி இவ்விதம் எண்ணமிட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். எப்படியோ போகட்டும். அவர் கூப்பிட்டுப் பவானி வந்தால் அழைத்துத்தான் போய் ஆகவேண்டும். அண்ணன் வீட்டைப் பற்றிய பாத்தியதை மன்னிக்கும் உண்டு என்பதைப் பவானி மறந்து விடுவாளா என்ன? என்று மேலும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கோமதி.
அப்பொழுது கொல்லையிலிருந்து பவானியின் குரல் தெளிவாகக் கேட்டது.
”இப்பொழுது அங்கே வருவதற்கு என்ன அவசரம் அண்ணா? போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொஞ்ச காலம் அவர் இருந்த இடத்திலேயே நான் இருக்க ஆசைப் படுகிறேன்” என்றாள்.