(Reading time: 13 - 26 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

இழுத்துக் கொண்டு போய் விடுவாள் என்ற மனக்குறை மாமியின் சொற்களில் தொனிப்பதைக் கவனித்தாள் வசந்தி. கமலியின் நற்பண்புகளையும் தன்னடக்கத்தையும், கோடீசுவரர்களாகிய தன் பெற்றோரிடமிருந்து அவள் ரவியை நம்பி அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் இணையற்ற எளிமையையும் ஒவ்வொன்றாக மாமியிடம் விவரித்தாள் வசந்தி. நல்ல வேளையாக அதைக் கேட்கவே அப்படியே நிறுத்தி மறுக்காமல் மாமி அப்போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள்.

   

"நேக்குத் தெரியும்டீ! நீ, ஒங்கப்பா, எல்லாருமே இந்தக் கலியாணத்துலே உள்கைகள். எல்லாருமாச் சேர்ந்து நேக்கு எதிராச் சதி பண்ணிண்டிருக்கேள்னு நன்னாத் தெரியும். இந்த விஷயத்திலே நீ இப்படித்தான் பேசுவேன்னும் நேக்கு முன்னாலேயே தெரியும்."

   

"தப்பா நான் ஒண்ணும் சொல்லலே மாமி! உள்ளதைத்தான் சொல்றேன். கமலி ரொம்பத் தங்கமான பொண்ணு."

   

"இருக்கட்டுமேடீ. யார் வேண்டாம்னது? தங்க ஊசீன்னா அதுக்காக அதை நாம எடுத்துக் கண்ணைக் குத்திக்கணுமா என்ன?"

   

"உங்க மேலே அவளுக்குத் தேவதா விசுவாசம் மாமி. 'புராதனமான இந்தியப் பெண்மையின் கலாசாரச் சின்னம்'னு உங்களைப் பற்றி அவ எங்கிட்டச் சொல்றது வழக்கம் மாமி..."

   

"அதாவது சுத்தக் கர்நாடகம், மடிசஞ்சீன்னு என்னைக் கேலி பண்றாளா?"

   

"சிவ, சிவ! அப்படியில்லே மாமி! வேடிக்கைக்காகக் கூட அந்த மாதிரி அவளைப் பத்திச் சொல்லாதீங்கோ. உங்களை அவ தேவதையா மதிக்கிறா."

   

"...நேக்கு அவளைக் கட்டோடப் பிடிக்கலைடீ."

   

"நீங்க அப்படிப் பாராமுகமா இருக்கக்கூடாது. மகாலட்சுமி மாதிரி சுமங்கலியா வந்திருந்து மாமாவோட மணையிலே கூட நின்னு கல்யாணத்தை நடத்தித் தரணும். நாங்க பொண்ணாத்துக்காராளா ஏத்துண்டிருக்கோம். நீங்க கட்டாயம் வந்து நடத்தித் தரணும்..."

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.