(Reading time: 11 - 21 minutes)

லைன்ல நின்னு 2 மணி நேரம் ஆயிற்று. டோக்கன் கொடுப்பவர் வரவேயில்லை. வெயில் மண்டையை பிளக்க தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டாள் வினோ. ட்ரெயின் பெட்டி போல நீண்டு இருக்கும் லைனைப் பார்த்தபடியே வண்டியில் சென்றனர் சிலர்.

“பணத்துக்காக லைன்ல இப்படி நிக்கறதுக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு கமலா. ரோட்ல போறவங்க எல்லாம் நம்மையே பார்க்கிற மாதிரி இருக்குடி.” என்றாள் கவலையுடன்.

“லைனைப் பார்த்து வாயைப் பொளந்துட்டு போற எல்லோரும் அவனவன் பொண்டாட்டியவோ, அம்மாவையோ க்யூல நிக்க சொல்லி இறக்கி விட்டுட்டு தான் போயிருப்பான்” என்று கூறி சிரிக்க இவளும் சிரித்தாள். அதுமட்டுமல்லாமல்,

“நம்ம வரிப் பணத்தை தானேக்கா இப்படி குடுக்கறாங்க. அதை ஏன் வாங்காம விடணும்” என்றாள்.

தேவை என முடிவுக்கு வந்த மனசு நொண்டிச் சாக்கைத் தானே தேடும். அது போல கமலா சொன்னதும் அதையே ஒத்துக் கொண்டு ஆமோதித்தாள்.

“முதல்ல நிக்கிற இருநூற்றி ஐம்பது பேருக்குத்தான் டோக்கன். அவங்களுக்கு மட்டும் தான் இன்னைக்கு பணம்  கிடைக்கும். மீதி நிக்கறவங்க நாளைக்கு வாங்க” என்றார் டோக்கன் கொடுப்பவர்.

எப்படியோ கமலாவும், வினோவும் அந்த கணக்கிற்குள் வந்து விட்டதால் டோக்கன் கிடைத்தது. எப்படியும் இன்னைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி விடலாம் என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நேரம் ஆக ஆக நிற்கவே முடியவில்லை வினோதினிக்கு. க்யூ மெதுவாக ஊர்ந்து தான் நகர்ந்தது. இவர்கள் முறை வர எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் போல் இருந்தது. வினோதினி சோர்ந்து விட்டதைப் பார்த்த கமலா,

“நீ வேணா அப்படிப் போய் கொஞ்ச நேரம் நிழல்ல உட்காரேன்” என்றாள் அக்கறையாக.

“சரிடி. நிற்க முடியலை. அந்தக் கடையில போய் உட்கார்ந்திருக்கேன்” எனக் கூறியபடி சற்று தள்ளியிருந்த டீக்கடையில் போய் அமர்ந்தாள்.

டீக்கடை ஓனர் மணி அண்ணன் இவளைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார். இவளும் புன்முறுவலுடன், “இங்க உட்கார்ந்துட்டுப் போறேண்ணா” என்றாள்.

அவரும் சரி என்பது போல தலையசைத்தார். வினோதினிக்கு இவர் யாரென்று தெரியுமே தவிர அதிகம் பேசியதில்லை. அதனால் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தாள்.

மணி அண்ணன் கடையில் டீ வியாபாரமும், வடை வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. ஏலக்காய் போட்ட டீயின் வாசமும்,  சூடாக இருந்த வடையின் வாசமும் பசியைத் தூண்டியது. மணி அண்ணன் முதலில் போட்ட வடைகளில் ஒன்று எடுத்து சற்று தள்ளி வைத்திருந்த தட்டில் பிய்த்து வைத்தார். இதற்காகவே காத்திருந்தது போல ஒரு காகம் வந்து வடையை சாப்பிடத் தொடங்கியது.

வினோவும் தினமும் காகத்திற்கு சாதம் வைப்பாள். முதலில் நாம் தட்டில் சாதம் வைக்க வந்தாலோ அல்லது கதவு பக்கம் வந்தாலோ பறந்து விடும் காக்கை, நாளடைவில் அது உணவு உண்ணும் போது வினோ நடுவில் வந்து கை நீட்டி சாதம் வைத்தாலும் பயப்படாமல் சாப்பிட ஆரம்பித்தது.

ஆடி அமாவாசையன்று விதவிதமாக படையலிட்டு காத்திருந்த போது வந்த காக்கை சற்று நேரம் அந்த படையலையே சுற்றி சுற்றிப் பார்த்தது வேடிக்கையாக இருந்தது. இதில் எதை முதலில் சாப்பிடலாம் என செலக்ட் செய்கிறதோ என்று பேசிக் கொண்டனர் குழந்தைகள். காகம் மட்டுமல்ல, அணில் மற்றும் பெயர் தெரியாத பறவைகளும் வந்து உணவு உண்ணும். அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் மனசு லேசாகிவிடும். வினோவும் அந்தப் பறவைகளை ரசித்துப் பார்ப்பாள். அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுவதைப் பார்த்தால் கவலை எல்லாம் மறந்து போகும்.  அன்றும் மணி அண்ணன் கடையிலும் காகம் வடையை சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை கமலாதான் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

“அக்கா, வடையும் டீயும் சாப்புடறியா?” எனக் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல்,

“மணிண்ணே, நாலு வடை, இரண்டு டீ கொடுங்க: என்றாள். அப்போதுதான் கமலாவைப் பார்த்தவர்,

“வா கமலா, டோக்கன் வாங்கிட்டியா? இன்னைக்கு உனக்கு குடுத்துருவாங்களா?”

“ஆமாண்ணே, ஆனா ரொம்ப லேட்டாகும் போல. இன்னைக்கு எங்க எல்லோருக்கும் மதிய சாப்பாடே உங்க கடை வடையும், டீயும் தான்” என்றவளிடம் வடையையும், டீயையும் நீட்டினார்.

“ஏண்ணே இன்னைக்கு வியாபாரம் அமோகமா நடக்குது போல”

“அட, ஏம்மா நீ வேற” என அலுத்துக் கொண்டார்.

“உங்க கடை கீரை வடையும், உளுந்து வடையும் அடிச்சுக்க முடியுமா? மதியத்துக்குள்ள பத்து, பன்னெண்டு வடை உள்ளே தள்ளிர மாட்டேன்” எட்டு ஊருக்கும் கேட்குமாறு கூறினாள்.

அவளிடம் தலையை ஆட்டியபடியே காரியத்தில் கண்ணாய் இருந்தார் மணி அண்ணன்.

லைனில் நின்றிருந்த கூட்டம் மெதுவாக மணி அண்ணனின் வடையையும், டீயையும் காலி செய்ய துவங்கி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.