(Reading time: 11 - 21 minutes)

“பார்த்தியாக்கா, இதுக்கு தான் கீரை வடை, உளுந்து வடைனு சத்தமா பேசி இவங்களை உசுப்பி விட்டேன். ஏதோ என்னால மணி அண்ணனுக்கு செய்ய முடிஞ்ச உதவி. அவருக்கு ரெண்டு வியாபாரம் ஆகுமுல்ல. அப்புறம், நம்ம மக்களுக்கு எப்பவுமே அடுத்தவன் செய்யறதைத் தான் தானும்  செய்யணும்னு தோணும். இப்ப புடவைக் கடைல நம்ம கையில இருக்கிறதை விட பக்கத்து பொம்பளை செலக்ட் பண்றது புடிக்கும்ல அதுமாதிரி” என்றாள்.

எனக்கு கமலாவைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளையும், மக்களின் மனதையும் எப்படி தெரிந்து வைத்திருக்கிறாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒரு வழியாக பொங்கல் பரிசையும், ஆயிரம் ரூபாயையும் வாங்கிக் கொண்டு வந்தனர். இருவர் முகத்திலும் சந்தோஷம், என்னவோ சாதித்த பெருமிதம். பேசிக் கொண்டே வந்த போது ஆலமரத்தடியில் அழுக்குத் துணிப்பையோடும், நான்கு, ஐந்து தண்ணீர் பாட்டில்களோடும் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். வயது முப்பத்தி ஐந்து  மதிக்கலாம்.

அவள் இந்த ஏரியாவிற்கு வந்து ஒரு எட்டு மாதங்கள் இருக்கும். வரும் போது நன்றாகத் தான் வந்தாள். நல்ல உடை, கையில் பை, ஃபோன், காலில் கொலுசு அணிந்திருந்தாள். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்வாள். இந்த ஏரியாவில் உள்ள எட்டு வீதிகளையும் சுற்றி வருவாள்.

எங்கே தங்குகிறாள்? என்ன சாப்பிடுவாள்? சின்ன வயதாக தெரியும் அவள் இயற்கை உபாதைகளுக்கு எங்கு ஒதுங்குவாள்? என்றெல்லாம் யோசித்து இருக்கிறாள் வினோ. மாசி மாத குளிரில் எல்லோரும் நடுங்கி ஒடுங்கி வீட்டில் இருக்க அவளோ வெட்ட வெளியில் உட்கார்ந்திருப்பாள். இந்த எட்டு மாதத்தில் பராமரிப்பு இல்லாததால் சடை விழத் தொடங்கியிருந்தது. அழுக்கேறி கிழிந்து தொங்கியது ஆடைகள்.

அவளுக்குத் தன் பழைய உடைகளை எடுத்து வைத்து இருந்தாள் வினோ. அவளால் யாருக்கும் எந்தத் தொந்திரவும் இல்லை. அவளைப் பார்த்ததும் வினோ கமலாவிடம்,

“கமலா, அந்தப் பொண்ணைப் பார்த்தியா? பாவமா இருக்குடி”

“ஆமாக்கா, என்ன பண்ணுது, எங்க தூங்குதுன்னு ஒண்ணுமே தெரியலை. சிறு வயசா வேற இருக்கு”

யாராவது ஹோம்ல கொண்டு போயி சேர்த்து விடலாம்ல”

“நம்ம கவுன்சிலர் கூட கேட்டாருக்கா. இந்தப் பொண்ணு தான் எங்கேயும் வர மாட்டேன்னு சொல்லிருச்சாம்.”

“சரி, நான் என் சேலை, சுடிதாரெல்லாம் கொஞ்சம் எடுத்து வெச்சேன். இந்தப் பொண்ணுகிட்ட பேச்சு குடுத்து வாங்கிக்க சொல்வோமா?”

“சரி வாக்கா” என்றாள்.

இருவரும் நடந்து அந்தப் பெண்ணிடம் வந்தனர். அவள் கீழே அமர்ந்து மண்ணைக் குச்சியால் கிளறிக் கொண்டிருந்தாள்.

“ஏம்மா, நான் இந்த ஏரியால தான் இருக்கேன். எங்கிட்ட கொஞ்சம் துணிமணிங்க எடுத்து வெச்சது இருக்கு. வாங்கிக்கறியா? எனக் கேட்டாள் வினோ.

“வேண்டாம். எங்கிட்டயே துணிங்க இருக்கு” என்று மறுத்து விட்டாள் அந்தப் பெண்.

“அட வாங்கிக்கம்மா, பாரு உன் சட்டையெல்லாம் கிழிஞ்சு இருக்கு. அக்கா சுடிதார் தருவாங்க போட்டுக்க” என்றாள் கமலா.

“வேண்டாங்க எங்கிட்டயே நிறைய டிரஸ் இருக்கு. ஏற்கனவே எங்கிட்ட இருக்கும் போது நீங்க சும்மாதானே தர்றீங்கன்னு வாங்கிக்கிட்டா எனக்கு அது சுமைதானே” என்றாள்.

இருவரும் வாயடைத்து நின்றனர். மேலும்,

“2 பேரும் கால் கடுக்க நின்னுட்டு வர்றீங்க. இன்னும் ஏன் இங்க நின்னுட்டு, வீட்டுக்குப் போங்க” எனக் கூறிவிட்டு தன் அழுக்குப் பையுடன் நடக்க ஆரம்பித்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த கமலா,

“நீங்களே கையேந்திட்டு வந்திருக்கீங்க. நீங்க எனக்கு குடுக்கறீங்களானு கேக்கற மாதிரி இருக்குக்கா எனக்கு”

ஆம் என்பது போல் தலையசைத்தாள் வினோதினி. இப்போது அந்த பெண் இருவரின் பார்வையிலும் அழகாகத் தெரிந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.