(Reading time: 8 - 16 minutes)

எழிலானவள் - அனு

Ezhilanaval

பெங்களூரு நகரின் காலை மிகவும் பரபரப்பாக விடிந்தது. எல்லா காலை நேரம் போலவே மிக மிக பரபரப்பாக இருந்தது அந்த பெண்கள் விடுதி. சிலப் பெண்கள் பல் துலக்கி கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தண்ணீர் வராத குழாய்களில் வெருப்புடன் கத்திக் கொண்டிருந்தார்கள். பல மொழிகள் பேசும் பெண்கள், பல்வேறு தொழில் புரியும் பெண்கள்.. பெண்கள்.. பெண்கள். ஒரு சுவாரசியமான இடம் தான் அந்த விடுதி. அதில் இன்னும் படுக்கையை விட்டு எந்திரிக்காத அழகு சிலைகளும் அடக்கம்.

"ஆண்ட்டி நீரு பந்தில்லா... சல்ப்ப மோட்டார் ஆன் மாடி" என்ற குரல் கேட்டதுதான் தாமதம், புத்துக்குள்ளிருந்து தலை தூக்கும் பாம்பைப் போல போர்வையில் இருந்து தலையை நீட்டினாள் தீபா. அய்யோ தண்ணி வரலயா? சீக்கிரம் எழுந்து குளிக்கலன்னா பெரும் பாடுதான் சுடுதண்ணீர் வராது, இல்லன்னா குளியலறை கிடைக்காது, அதுவும் இருந்தா தண்ணீர் வராது. இதை எல்லாம் நினைத்து பார்த்து வேகமாக எழுந்து வந்தாள் தீபா.

 

 எங்க இந்த காயத்ரிய காணம் என்று தேடினாள். ஏய் காயத்ரி எங்கடி இருக்க என்று ஒவ்வொரு குளியலறையாக தட்டிக் கொண்டிருந்தாள். அவள் ஆசை வீண் போகவில்லை. கடைசி அறையில் இருந்து நான் இங்க இருக்கண்டி என்று காயத்ரி குரல் கொடுத்ததுதான் நிம்மதி இவளுக்கு.

 

 "ஏய் தண்ணி வரல்லன்னு நீனா சொன்னாளே, தண்ணி இருக்க இல்ல பிடித்து தரட்டா"

 

 "வேண்டாம். நான் உனக்கும் சேர்த்து பிடித்து வைத்திருக்கிறேன். கவலைப் படாதடி"

 

 "சூப்பர்டி. காயுன்னா அது காயுதான்..."

 

 "போதும் போதும் எனக்கு ஜலதோஷம் பிடிக்கிற மாதிரி இருக்கு."

 

 தீபாவும் , காயத்ரியும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறார்கள். இருவரும் வேறுவேறு ஊர் என்றாலும் இங்கு வந்த பிறகு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள். தீபா தயாராகி கீழே வருகிறாள்.

 

 "துணியில் ஊத்தி எடுத்த இட்லி மாதிரி எப்படி பளப்பள்ன்னு வர்ராப் பாரு" என்று கிண்டல் அடித்தாள் காயத்ரி.

 

 "ஆமாண்டி நான் துணி இட்லின்ன நீ என்ன தீஞ்ச தோசையா? போய் வாய்க்கு வேலை கொடு போ "

 

உள்ளே சிற்றுண்டிக்காக சென்றால், அங்கே காத்திருந்தது கல்லு மாதிரி இட்லி இவர்களைப் பார்த்து கொல்லுன்னு சிரித்தது. இருவரும் வாய் விட்டு சிரித்தபடி சாப்பிட்டார்கள்.

 

 ஏண்டி எவன் எவனுக்கோ விருது கொடுக்குறாங்க, நம்ம விடுதி இட்லி செய்யற கைக்கு ஒன்னும் கிடைக்க மாட்டங்கேது பாரு அதுதான் எனக்கு வருந்தம் என்றாள் தீபா. அனைவரும் சிரித்தார்கள்.

 

ஏய் தீப்ஸ் சீக்கிரம் சாப்பிடு, இன்னும் 15 நிமிஷத்துல நாம் பஸ்ஸ பிடிக்கணும் இல்லன்ன 8.30க்குள்ள அலுவலகத்துக்கு போக முடியாது. நம்ம பஸ்ஸ பிடிக்க முடியாது.

 

அது ஒரு தனியார் பேருந்து. அந்த பேருந்தில் மட்டும் கட்டணம் குறைவு. மற்றப் பேருந்தில் விலை அதிகம். அதற்க்காகவே அந்த பேருந்தில் ஏறி விடுவார்கள்.

 

பயணச்சீட்டு விலை குறைவு என்பதால் அடி நிலையில் இருந்து, நடுத்தர வர்க்கம் வரையில் அனைவரும் அதில் வருவார்கள்.

இந்த பேருந்தில் இருக்கும் தாங்க முடியாத பிரச்சினை என்னவென்றால் அதில் போடும் தெலுங்கு படம்தான். அந்த படங்களுக்காகவே நிறைய பேர் வருகிறார்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். கவர்ச்சியான படங்கள், இல்லையெனில் நல்ல மசாலா தடவிய காட்சிகள், சண்டைகள், கத்திக் குத்து காட்சிகள் காலையில் சாப்பிட்ட கல்லு இட்லிக் கூட உடைத்துக் கொண்டு வந்து விடும். அப்படி பிரம்மாதமாக இருக்கும். சில நேரங்களில் முக்கியமான காட்சிகளில் படத்தை பார்க்காமல் மற்றவர்கள் முகத்தைதான் இவர்கள் இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டு வருவார்கள். இதைப் பற்றி பேசிக் கொண்டே பேருந்து நிலையத்தை அடைந்து விட்டார்கள்.

 

 "ஏய் காயு இன்னைக்காவது நீ முதலில் ஏறி ஒரு இடத்தை பிடி பார்க்கலாம் உன் திறமையை" என்றாள் தீபா.

 

 சரி பார்க்கலாம் என்றாள் வீராவேசமாக.

 

பேருந்து தூரமாக வரும் பொழுதே உள்ளே பரப்பரப்பு இன்னைக்காவது பிடித்து விட வேண்டும் என்று, அனைவரும் இறங்கி கொண்டிருந்தார்கள். இவள் ஏறுவதற்க்காக கம்பியை பிடித்துக் கொண்டு காத்திருந்தாள். எப்பொழுதுமே இவள் இடம் பிடிக்க அடித்து பிடித்து ஏறியது இல்லை. அனைவரும் ஏறிய பிறகே ஏறுவாள். அதனால்தான் தீபா இவளை கிண்டல் செய்வது. இன்றாவது பிடிக்க வேண்டும். இவளுக்கு முன்பு ஒரு வயதான பெண்மணி ஏறினார். அவருக்கு பின்பு ஏறிய இன்னொரு பெண் பாட்டியின் செருப்பை மிதித்து விடவே செருப்பு கீழே விழுந்து விட்டது. இவளால் அதை உதரி விட்டுவிட்டு இவளால் ஏற முடியவில்லை. பாட்டியால் ஏறவும் முடியவில்லை, இறங்கவும் முடியவில்லை. பாட்டியை அனைவரும் நெருக்கிக் கொண்டு ஏறவே காயத்ரி செருப்பை கையில் எடுக்க கீழே குனிந்தாள். பாட்டி அவசர அவசரமாக பேடாரீ பேடா. (கன்னடத்தில் வேண்டாம் என்று பொருள்) . இவள் நீட்டிய செருப்பை வாங்கிக் கொண்ட பாட்டி ஆசையாக இவள் கன்னத்தை தடவினாள். அவள் கண்களில் இருந்த விஷயம் இவளையும் ஒரு நிமிடம் கட்டுற வைத்தது. இவையெல்லாம் நடந்து முடிந்தது மிக குறைந்த நிமிடத்திலேயே.

 

 அனைவரும் ஒரு வழியாக ஏறி விட, காயத்ரியும் கண்களால் தீபாவைத் தேடிக் கொண்டு வந்து சேர்கிறாள். தீபா ஏறி அமர்ந்து விட்டிருந்தாள். இவள் வரும் பொழுது கிண்டல் தொனிக்க வழி விடுங்க, வழி விடுங்க அன்னை தெரசா வர்ராங்க என்றாள்.

என்னடி எல்லோரையும் அவங்க சீட்ல உட்காரவைச்சாச்சா என்றாள். சுற்றி இருந்த தோழிகள் அனைவரும் கொள் என்று சிரித்தார்கள்.

 

உன்னை......... வாடி வெளியே என்று பல்லைக் கடித்தாள் காயத்ரி. ஆனால் மனம் மட்டும் பாட்டியின் முகத்தையும், அதில் இருந்த கனிவையும் திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள். பாட்டி என்று சொல்வது மிகவும் தவறு. ஏனெனில் அந்த முகம் அத்தனை களையாகவும், இளமையாகவும் இருந்தது. முடி மட்டும் நரைத்திருந்தது. கண்களில் அழகாக மை தீட்டி இருந்தாள். அந்த நேர்த்தியில் இருந்தே தெரிந்தது அது மிக நீண்ட நாள் பழக்கம் என்று. நல்ல நிறமாக இருந்தாள்.

 

 அதற்கேற்றார்ப் போல் நல்ல அழகாக பொட்டு வைத்திருந்தாள். எப்பொழுதும் போடும் வெற்றிலையின் ஆதிக்கத்தால், சிவந்த அழகான உதடுகள். அதில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் புன்னகை. அவள் முகம் அன்று இரவு கூட நினைவிற்க்கு வந்தது. பின் வந்த நாட்களில் வேலைப் பளுவில் அவள் மறந்து விட்டாள்.

 

இந்த நிகழ்விற்க்குப் பிறகு எப்பொழுது பேருந்தில் பார்த்தாலும் புன்னகித்துக் கொள்வார்கள். ஒரு நாள் பாட்டியின் இருக்கைக்குப் பக்கத்தில் இவளுக்கும் இருக்கை கிடைத்தது. அப்பொழுதுதான் தெரிந்தது பாட்டியும் தமிழ்தான் என்று.

 

பாட்டியின் சொந்த ஊறு மதுரைப் பக்கத்தில். புருஷன் கர்நாடகா. திருமணம் ஆகி இங்கே வந்ததாகவும் மூன்று குழந்தைகள் என்றும், பாட்டி ஒரு துணிகள் ஏற்றுமதி செய்யும் ஒரு அலுவலகத்தில் துணி எடுத்து போடும் உதவி ஆளாக இருப்பதாக சொன்னார். பையனும் இங்கதான் ஆப்பரேட்டராக இருப்பதாக கூறினாள். பாட்டி சொன்னதைக் கேட்டுக் கொண்டாள் இவள். ஏன் இப்பயும் உழைக்கிறாள்? என்ற கேள்வி எழுந்தது. மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கு. அதனால வீட்டுல இருக்கு.

 

 இவளாக நினைத்துக் கொண்டாள், கணவன் குடிகாரக் கணவனாக இருப்பான் என்று. இப்பொழுதெல்லாம் இருவரும் நன்றாக பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். தீபா கூட என்னடி பாட்டியோட கடலையா என்றாள். தீஞ்ச வாசனைதான் பஸ் முழுக்க வந்ததே என்றாள். இவள் முறைத்த முறைப்பிற்க்கு கண்ணடித்து சிரித்தாள்.

 

ரு நாள் பாட்டி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கறயா என்றாள். நானும் சரி பாட்டி என்றேன். அந்த கண்களில் அதே ஒரு நன்றி உணர்ச்சி. பாட்டியின் முகம் சரியாக இல்லை. மருமக கூட சண்டை மனசு சரியில்லை என்றாள். பாவமாக இருந்தது. சாப்பிட்டிங்களா என்று கேட்டேன். இன்னும் இல்லைம்மா என்றது பாவமாக இருந்தது.

 

 புருஷன் செத்து 30 வருஷம் ஆச்சு. புள்ளைங்க எல்லாம் இளசா இருந்ததுங்க. இதுகளுக்கே என் வாழ்க்கை முழுசும் போயிடிச்சு என்றாள் பெருமூச்சுடன். அதில் இருந்த சோகமும், உண்மையும் என்னை திடுக்கிட வைத்தது.

 

 என்னடா இவ இப்படி பொட்டெல்லாம் வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்றா பார்க்கிற என்றாள். இல்லையென்று தலையாட்டின். பொட்டு எடுக்க சொல்லி எல்லாரும் சொன்னாங்க. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. புருஷன் போனா பொட்டு எடுக்கனுமா என்ன? என்றாள். என்னை எல்லாரும் பாவமாக பார்ப்பதையும், சகுனத் தடையா பார்ப்பதும் எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் தைரியமா எதிர்த்து நின்னேன். இது எல்லாத்துக்கும் மேல ஆண்கள் பார்வை என்னை எடை போடும். அதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்காது. சண்டைக்காரி என்று கூட என்னை எத்தனையோ ஆண்கள் நினைத்தது உண்டு. அவர்கள் அனைவருக்கும் நான் அப்படிதான். அதற்கெல்லாம் நான் ஒரு நாளும் வருத்தப் பட்டதில்லை.

 

பிள்ளைகளுக்காவே வாழ்த்து முடித்து விட்டேன். சில நேரங்களின் அவர்கள் சின்ன சின்ன வார்த்தைகள் என்னை கிழிப்பது தான் வருத்தம். கண்களில் லேசாகா ஈரம். நான் கையை பிடித்து ஆறுதலாக அழுத்தினேன். கவலைப் படாதே என்று.

 

சில நேரங்களில் கண்கானாமா எங்காவது போயிடனும், அப்பவாவது இந்த தாயின் அருமை தெரிகிறதா என்று பார்க்கணும். நான் சிரித்துக் கொண்டே சொன்னேன். உங்களால அவங்கள விட்டு இருக்க முடியாது என்று.

 

பாட்டியும் ஆமாம் அதுவும் உண்மைதான் என்றாள். கவலைப்படாதிங்க பாட்டி, சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்.

 

பாட்டி உங்க மனதைரியத்தை நான் பாராட்டுகிறேன். எத்தனை தைரியமா இந்த பெரிய ஊரில சமாளிச்சிருக்கிங்க. எத்தனையோ ஆண்களை எதிர்த்து இருக்கீங்க. உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு பாட்டி என்றேன்.

 

பாட்டி சிரித்துக் கொண்டே கையசைத்தாள் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டி.

 

 என் பிரச்சினைகள் எல்லாம் பிரச்சினையே இல்லை என்பது போல் இருந்தது. இன்னும் நான் நிறைய தூரம் போக வேண்டி இருக்கிறது வாழ்வில் என்பது புரிந்தது. காயத்ரிக்கு வாழ்க்கையின் நெளிவு பிடிபட தொடங்கியது.

 

பாட்டியின் முகம் மட்டும் அல்ல, உள்ளமும் எழிலானது. பாட்டி எழிலானவள் மட்டும் அல்ல, பாடம் கற்பித்தவளும் கூட. வாழ்வில் தைரியமும், தன்னம்பிக்கையும் எவ்வளவு முக்கியம் என்று சொன்ன எழிலானவள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.