(Reading time: 15 - 30 minutes)

ன்று பிள்ளைகள் மட்டும் இல்லையென்றால் இன்று நான் இல்லை. பிள்ளைகள் இருந்தும் எத்தனை தரம் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருக்கிறேன். ஆனால் அந்த பிஞ்சு முகத்தை பார்த்து அந்த முடிவை மாற்றிக் கொண்டது எதற்காக. அவர்களை நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்று தானே. ஆனால் இன்று எவனோ ஒருவன் வந்து உன் பையனை என்ன வளர்த்து வச்சிருக்க. ஒழுங்கா வளர்க்கலை என்று சொல்லி விட்டானே என்று தான் மனம் திரும்ப திரும்ப மாய்ந்துக் கொண்டிருக்கிறது.

எல்லா சொந்தங்கள் இருந்தும் திரும்ப ஒரு திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள் என்று அவர்களை எல்லாம் விட்டு விட்டு தன் பிள்ளைகள் மட்டுமே உலகம் என்று வாழ்ந்ததற்கு பலனா இது.

ஐயோ தெய்வமே என்ன செய்வது என்று தெரியவில்லையே. இன்று வரை எப்போதுமே அட்வைஸ் என்று இரண்டு பிள்ளைகளுக்குமே கூறியதில்லை. இன்று என்ன செய்வது?

 

திகாலையிலே விழித்த சுரேஷ் பக்கத்தில் அப்பா இல்லாதததை கண்டு திகைத்தான். எழுந்து வெளியில் சென்றான்.

ஹாலில் அவன் தந்தை சேரிலேயே அமர்ந்த படி உறங்கி கொண்டிருந்தார்.

சுரேஷின் மனதில் வலித்தது. இத்தனை நாள் தங்களை தாய் இல்லாமல் வளர்த்த தந்தையை இந்த அளவுக்கா மனம் நோகும் படு செய்து விட்டேன். இரவு தங்களுடன் வந்து படுக்கவில்லை. அவனும் அப்பா வருவார் வருவார் என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அப்படியே உறங்கி போய் விட்டான்.

எவ்வளவு நேரம் இங்கே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாரோ, அப்படியே உறங்கி விட்டிருக்கிறார். 

 

ஏழு மணி அளவில் விழித்த சுபாஷ் “இங்கேயே உறங்கி விட்டேனா” என்று எண்ணியவாறே உள்ளே வந்தார்.

படுக்கை அறையிலிருந்து வெளியே வந்த மகள் “குட் மார்னிங் ப்பா” என்றாள். மகனை அங்கு காணவில்லை. எங்கு சென்றான் என்று எண்ணியவாறே சமயலறைக்கு சென்றால் சுரேஷ் அங்கு காபி போட்டுக் கொண்டிருந்தான்.

மகனை அங்கு கண்டு திகைத்த சுபாஷ் “விடு, தள்ளி வா, நான் செய்யறேன்” என்றார்.

“இல்லைப்பா இதோ காபி போட்டுட்டேன்” என்று சொல்லி விட்டு தங்கைக்கும் தந்தைக்கும் காபி கொடுத்தான்.

அரை மணி நேரம் கழித்து சுரேஷ் ஒரு முடிவு செய்தவனாக ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் சென்றான்.

“அப்பா” என்று கூறியவனால் அதற்கு மேல் தாங்க இயலாமல் சேரில் அமர்ந்திருந்த தந்தையின் காலை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்.

“சுரேஷ் என்னடா இது. சின்ன பிள்ளையாட்டும். அழாத டா” என்று கூறிய சுபாஷாலும் தன் கண்ணீரை கட்டுப் படுத்த இயலவில்லை.

இதை கண்ணீரோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

“நான் தப்பு செஞ்சிட்டேனாப்பா. நான் உங்களை கஷ்டபடுத்திட்டேன்னு மட்டும் தெரியுதுப்பா. ஆனா நான் செஞ்சது தப்பு தானான்னு எனக்கு தெரியலைப்பா. யாரும் செய்யாத தப்பையாப்பா நான் செஞ்சிட்டேன். ஆனா அது உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் அதை செய்ய மாட்டேன்ப்பா. செய்ய மாட்டேன்ப்பா” என்று கதறி அழுதான் சுரேஷ்.

முதலில் அவனை தேற்றிய சுபாஷ் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் அமைதியா கேளுங்க. டீன் ஏஜ்ல இருக்கிற பசங்க கிட்ட நான் முதல்லயே இதைப் பத்தி எல்லாம் பேசி இருக்கணும். ஆனா என் கண்ணுக்கு நீங்க குழந்தையாவே தெரிஞ்சதால எனக்கு எதுவும் தோணலை. இப்ப திடீர்னு பார்த்தா நீங்க பெரியவங்களாகிட்டீங்க” என்று வேதனையாக சிரித்து விட்டு தொடர்ந்தார்.

 

நீ பண்றதுக்கு பேரு காதல்ன்னு நினைச்சிட்டிருக்க. அதான் நீ பண்றது சரின்னு யோசிக்கற. முதல்ல காதல்ன்னா என்னன்னு தெரிஞ்சிக்க.

உங்க அம்மா நம்மளை விட்டு போனப்ப உனக்கு ஏழு வயசு, ஸ்ருதிக்கு நாலு வயசு. திடீர்னு உங்க அம்மா என்னை விட்டு போனதை என்னால தாங்கிக்கவே முடியலை. அந்த கொஞ்ச நாள் எனக்கு நீங்க ரெண்டு பெரும் எல்லாம் என் நியாபகத்துலையே இல்லை. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருந்துச்சி. செத்துடலாம்ன்னு எல்லாம் தோணுச்சி.

உங்க அம்மா கூட எட்டு வருஷம் வாழ்ந்திருக்கேன். எங்க கல்யாணம் வீட்டுல பார்த்து வச்ச கல்யாணம் தான். இந்த சினிமால எல்லாம் காமிக்கற மாதிரி அவளை பார்த்த உடனே எல்லாம் எனக்கு அப்படி ஒன்னும் காதல் எல்லாம் வரலை. ஏதோ வீட்டுல பார்த்தாங்க. கல்யாணம் பண்ணிக்கணுமேன்னு பண்ணிகிட்டேன் அவ்வளவு தான்.

எல்லாரும் கல்யாணமான புதுசுல தான் பொண்டாட்டி மேல ஆசையா இருப்பாங்க. எங்க விசயத்துல கொஞ்ச காலம் போக போக தான் அவளை நான் நல்லா புரிஞ்சிகிட்டேன். அவ என் மேல ரொம்ப அபெக்ஷன் வச்சிருந்தா. அவ கிடைக்க நான் தான் குடுத்து வச்சிருக்கனும். அவ எனக்கு கொடுத்த அபெக்ஷன்ல கொஞ்சம் தான் அவளுக்கு நான் திருப்பி கொடுத்தேன்.

ஆனா என்னை எல்லாரும் என்ன சொல்வாங்க தெரியுமா. பொண்டாட்டி தாசன்னு. நீ பிறந்தப்ப அவளை அவங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு நானே அவளை கவனிச்சிகிட்டேன். 

அவ கூட நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு காவியம். என்னை எல்லாரும் திரும்ப கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லியும் நான் ஏன் பண்ணிக்கலை. என் ஜென்ம ஜென்மத்துக்கும் போதுமான அன்பை உங்கம்மா என் மேல கொட்டியிருக்கா. அவளோட இடத்துல என்னால இன்னொரு பொண்ணை நினைச்சிக் கூட பார்க்க முடியலை.

உங்கம்மா போன கொஞ்ச நாள் நான் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி தான் இருந்தேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி உங்களை எல்லாம் கவனிச்சிக்கணும்னு எல்லாம் என் நியாபகத்துலையே இல்லை.

என் நிலைமையை பார்த்த என் சித்தப்பா என் கிட்ட வந்து என்னை வேற கல்யாணம் பண்ணிக்க தம்பி, உனக்கு என்ன வயசாச்சி. சின்ன வயசுலேயே பொண்டாட்டியை இழந்துட்டியேன்னு சொன்னார். நான் ரொம்ப கோவப்பட்டு திட்டிட்டேன். அவர் உனக்காக இல்லைன்னாலும் உன் புள்ளைங்களை நல்லா பார்த்துக்கரதுக்காகவாச்சும் பண்ணிக்கோன்னாரு. அப்ப தான் எனக்கு உங்களை நான் கவனிக்கலைன்னே உரைச்சது.

அதுக்கு அப்புறம் தான் நான் உங்களை நல்லா கவனிச்சிக்க ஆரம்பிச்சேன். முதல்ல என் கஷ்டத்தை மறைச்சிகிட்டு தான் நான் சிரிச்சி பேச ஆரம்பிச்சேன். முதல்ல கஷ்டமா இருந்த அது அப்புறம் எனக்கு அப்படியே பழகிடிச்சி. ஆனா இன்னைக்கும் உங்கம்மா இல்லாம இருக்கறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இதை தான் நான் காதல்னு நினைக்கறேன்.

உன்னோட லைப் பார்ட்னர் நீ சூஸ் பண்றது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். பட் உனக்கு என்னடா வயசாச்சி. அதுக்குள்ளே உன்னால ரைட் லைப் பார்ட்னர் சூஸ் பண்ண முடியுமா. நீ பண்றது கரெக்ட்டா தப்பானே உன்னால டிசைட் பண்ண முடியலையே டா.

இப்ப உனக்கு பிடிச்சிருக்கிற இந்த பொண்ணு உன்னோட இருபத்தைந்து வயசுலயும் உனக்கு பிடிச்சவளா இருப்பாளா. உன்னால அது வரைக்கும் சஸ்டெய்ன் பண்ண முடியுமா. நீ உனக்காக தேர்ந்தெடுக்கற பொண்ணு உன் லைப் லாங் உன் கூட வரவளா இருக்கணும். ஆனா அதுக்கு உனக்கு மெடூரிட்டி இருக்கணும். அந்த மெடூரிட்டி உனக்கு இப்ப இல்லை. இதெல்லாம் இந்த சினிமா அதெல்லாம் பார்த்து வர பீலிங்க்ஸ். அவ்வளவு தான்.

அந்த பொண்ணுக்கு என்ன டா வயசு. உங்க ரெண்டு பேருக்குமே எதையும் முடிவெடுக்கற வயசு இல்லை. இன்னைக்கு சரின்னு தோன்றது, நாளைக்கு தப்பு பண்ணிட்டோமோன்னு யோசிக்க வச்சிடும். அது வேணாம்ப்பா.

அப்பா மேல உனக்கு நம்பிக்கை இருக்குதா சுரேஷ். அப்பா உனக்கு நல்லது தான் பண்ணுவேன்னு நம்பறியா டா.

“என்னப்பா இப்படி கேட்கறீங்க. உங்களை நம்பாம யாரைப்பா நம்ப போறேன்” என்றான் சுரேஷ் அழுதுக் கொண்டே.

உங்க ரெண்டு பேருக்குமே தான் நான் இதை சொல்றேன். உங்களுக்கு பிடிச்சவங்களை உங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அந்த முடிவு சரியா இருக்கணும்.

உன்னோட இருபத்தைந்து வயசுல வந்து அப்பா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லு. நான் அப்ப ஏத்துக்கறேன். என் பையன் செய்யறது கரெக்ட்டா தான் இருக்கும்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. அதை இந்த விஷயத்துலயும் நிரூபி சுரேஷ். என் பையனை யாரும் ஏதும் சொல்லக் கூடாது சுரேஷ்

உங்க ரெண்டு பேரை பார்த்து எனக்கு எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும் டா. ஆனா எவனோ ஒருத்தன் வந்து உன் பையனை நீ சரியா வளர்க்கலைன்னு சொன்னதை என்னால தாங்க முடியலை சுரேஷ். எல்லா சொந்தக்காரங்களையும் விட்டுட்டு என் பிள்ளைகளை என்னால வளர்க்க முடியும்னு உங்களை கூட்டிட்டு வெளியூர்க்கு போயிட்டேன். நாளைக்கு எல்லாரும் என்ன சொல்வாங்க, நான் அந்த விசயத்துல தோத்துட்டேன்னு தானே.

அப்பவே அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். கேட்கலை. பார்த்தியா. அம்மா இல்லாம வளர்ந்த பசங்க இப்படி தான் இருக்கும்னு யாரவது சொன்னா, என்னால அதை கேட்டு தாங்கிக்க முடியாது டா தாங்கிக்க முடியாது” என்றவரால் அதற்கு மேல் பேச முடியாமல் மனைவியின் படத்தின் அருகே சென்று கண்ணீர் சிந்தினார்.

 

“அப்பா அழாதீங்கப்பா. ப்ளீஸ் அழாதீங்கப்பா. நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் எனக்கு நான் பண்ணது காதல்ன்னே தோணலைப்பா. எனக்கு உங்களை விட எதுவுமே முக்கியம் இல்லைப்பா. ஆனா இவ்வளவு நல்லா அப்பாவை நான் இந்த அளவுக்கு கஷ்டப்பட வச்சிட்டேனேன்னு தான் எனக்கு கஷ்டமா இருக்கு. இனி யாரும் உங்களை குறை சொல்ற அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன்ப்பா. சாரிப்பா சாரிப்பா. கண்டிப்பா உங்களுக்கு பெருமை தேடி தர அளவுக்கு தான் நான் நடந்துக்குவேன்ப்பா. சாரிப்பா. என்னை மன்னிப்பீங்களாப்பா”

சுபாஷ் தன் மகனை தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொண்டார்.

போட்டோவில் அவர் மனைவி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.