(Reading time: 7 - 13 minutes)

உதிராப் பூக்கள் - மது

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்

பலர்புகு தரூஉம் புல்லென் மாலை

முல்லை வாழியோ முல்லை நீநின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல்

தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

( குறுந்தொகை 162 ; கருவூர்ப் பவுத்திரன்)

 

கார்காலம் வரும் முன் வந்தடைவேன் என தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தாமதம் அடைகிறான்...அப்போது வழியில் பூத்த முல்லையின் முறுவல் தலைவனைக் கண்டு எள்ளி நகைப்பது போல் இருப்பதாக இங்கு கூறப் படுகிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடல்...இந்த கவி கதைக்கு முல்லையின் முறுவலை களவாடி விட்டேன்

 Mullai

முகை

தல் ஏரி தாமரைகளே!

ஆதவன் மறைந்ததும் வாடுவதேன்

விகசித்து மலர்ந்திருக்குமே 

என்னவள் முகம் எப்பொழுதும் (1)

 

காதல் கொண்டோம் ஆதவன்

கண் மறைய கூம்பி நின்றோம்

 அன்பிருந்தால் அகம் மகிழுமோ

பிரிவினில் அழகும் கூடுமோ

பரிகாசம் செய்தன அங்கு கமலங்கள் (2)

 

கண்ணிமைக்குள் நித்தம் என்னவன்

பார்வை பதிந்து முத்திரை பதித்து

கண்டு ரசிக்கும் என் முகம்

பொலிவுடன் தானே  திகழும் அனுதினம் (3) 

 

குல்மார்க் சிவப்பு  ரோஜாக்களே!!!

வசந்தம் சென்றதும் நிறம் மங்கியதேன்

செம்மையைப் பூசிக் கொண்டிருக்குமே

என்னவள் கன்னங்கள் எப்பொழுதும் (4)

 

வெளுத்து நின்றோம் பனியில் உன்னவள்

செம்மை ஒளிர்ந்து இருப்பதெப்படி

பசலை பிடிக்கவில்லையோ 

பாசம் அவளுக்கு இல்லையோ

கேலி செய்தன அங்கு ரோஜாக்கள் (5)

 

சுட்டு விரலால் அவன்  தீட்டிய ஓவியம்

சிவந்த என் கன்னங்கள்  அழியா காவியம்

கால சுழற்சிகளும் போற்றும்  பொக்கிஷம்

காதலின் பரிசாக நான் பெற்ற பெரும் வரம் (6)

 

தோட்டாக்கள் பூத்திருக்கும் போர்க்களம்

மகரந்தன் வேண்டி விரும்பிய லட்சியம்

போர்க்களமாய்  அவனை தாக்கும் பூந்தோட்டம் 

மஞ்சரி என்றிவள் மனம் முழுதும் அவன் வாசம்(7)

 

மலர்: 

படிப்பிற்கும் அறிவுத் திறமைக்கும்

பற்பல அயல் தேச நிறுவனம்

விரித்தது  சிவப்பு கம்பளம் (8)

 

கொண்ட லட்சியத்திற்கும் நாட்டுப்பற்றிற்கும்

உதிரம் சிந்தும் உயிர் பணயம்

சேர விழைந்தான் இந்திய ராணுவம்(9)

 

ஆலமரமாய் பல விழுதுகள் பெற்றேன் இல்லை

அம்மா என அழைக்க நீ தானே ஒரே பிள்ளை

சிறு தும்மல் உனக்கென்றால்  துடித்திடுமே என் மனம்

குண்டு மழையில் நீ நனைய எப்படி சொல்வேன்  சம்மதம் (10)

 

தாய்மை  தவிப்பது இயற்கை

தடுமாறியது அவனது தன்னம்பிக்கை

தந்தைக்கோ தத்தளிக்கும் நிலைமை

தீர்வு  சொன்னாள் அவன்  இதய தேவதை (11)

 

பிள்ளை பிராய தோழர்கள் - இவர்களை

பிணைத்தது பருவத்தின் காதல் உணர்வுகள்

பெற்றோரும் விரும்பிய மண இணைப்பு

படிப்பு முடியவே சில நாள் காத்திருப்பு (12)

 

மருமகள் என்ற உரிமையோடு

மகள் என்ற அன்பும் பாசத்தோடு

மஞ்சரி நான் இருப்பேன்  எப்போதும் உங்களோடு

மணம் புரிகிறேன் இப்போதே செய்யுங்கள் ஏற்பாடு (13)

 

பெண்ணிவள் அதிரடி முடிவு

பெற்றோருக்கோ திகைப்பு (14)

 

போர்க்களம் போகிறேன் என்கிறான் பிரிந்து

போய் வா என் கணவனாய் என்கிறாள் துணிந்து

பயத்திரை சட்டென மறைந்தது  பெற்றவர் மனதில்

பெருமை கொண்டார் அவர் மஞ்சரியின் செயலில் (15)

 

கருத்து வேறு புரிதல் ஒன்று

சிந்தனை வேறு செயல் ஒன்று 

கனவுகள் வேறு காட்சி  ஒன்று

உடல் வேறு உணர்வு ஒன்று (16)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.