(Reading time: 6 - 12 minutes)

ஒரே குழப்பமா இருக்கே...  - ஷரோன்

ன்னடி எதோ யோசிச்சுக்கிட்டே உள்ள வார மாதிரி தெரியுது. எத்தன தடவ சொல்றது, இல்லாத மூளைக்கு வேலை குடுக்காதேனு “

பொதுவாக இதைப் போன்ற கேலி பேச்சுக்கு உடனே ரியாக்ட் செய்யும் புவனா, இன்று இதைக் கேட்டதாகவே தெரியவில்லை.

“ ஹோய் ! ஹலோ.... ! புவி, இங்க… இங்க இங்க.. நான் தான் டி உன் அம்மா. ஒவரா யோசிச்சதுல என்னயே மறந்துட்டிய என்ன? “

Ore kuzhapama irukkeஇப்படி தான் புவனாவைக் கனவுலகில் இருந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவந்திருந்தார் பவித்ரா. பாலு – பவித்ரா தம்பதியரின் ஒரே மகள் புவனா. பொறியியல் முதலாமாண்டு மாணவி. தன் யோசனையிலிருந்து முழுவதுமாக வெளிவராத புவனா, இரண்டொரு நொடிகள் துணிகளை மடித்த வண்ணம் அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும் தன் அம்மா பவித்ராவையே பார்தாள்.

“ என்னடி லூக்கு விடுற? என்ன விஷயம்? “

“ ஒன்னுமில்ல மா “ என்று இடவலமாக தலையாட்டியவளின் பார்வை வட்டதினுள் , நாற்காலியில் அமர்ந்தவாறு கணக்குகளைச் சரி பார்த்திருந்த அப்பா பாலு வந்தார்.

மீண்டுமாய் தன் எண்ணங்களுள் புதைந்தவள், “ ச்சே, ச்சே.. இருக்காது “ என்று தன் மனதில் எண்ணியதை வார்தைகளாகவும் சொல்லிருந்தாள்.

அப்பா, “ என்ன இருக்காது குட்டிமா? “

அம்மா, “ என்னத மண்டையுல போட்டு குழப்பிக்குற? விஷயத்த சொல்லு “

“ அது மா.. “

“ என்ன டி? “

“ ஒன்னு கேக்கனும் மா “

“ கேளு “

“ கேக்கலாமா னு தெரில “

“ அடிங்க, கேளும்.. கேட்டு தொலையும் “

‘இப்படியே யோசிக்குறதுக்கு பேசாம கேட்டுட வேண்டியதுதான்‘ என்ற முடிவுக்கு வந்தவள்,

“ அம்மா, என் ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசும்போது உங்க இரண்டு பேரையும் பத்தி சொன்னென். நீங்க ரிலேட்டிவ்ஸ், கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கனும் சொன்னெனா, உடனே எல்லாரும் ‘உன் ஆம்மா- அப்பாவுக்கு லவ் மேரேஜா?’ னு கேக்குறாங்க. இதே கேள்விய என் கிட்ட நிறைய பேர் கேட்டுடாங்க. நான் ‘இல்ல’னு சொல்லிடேன். ஆனா, ஏன் எல்லாருக்கும் சேம் டவுட் வருதுனு யோசிச்சு எனக்கும் அதே டவுட் வந்திருச்சு. உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜா ? இல்ல.. “

அவள் முடிக்கும் முன்னே பதில் வந்தது பவித்ராவிடம், “ அதுல என்ன டவுட்..100% அரேஞ்சுடு மேரேஜ் தான் “.

அப்பாவும் சிரித்துக்கொண்டே ‘ஆம்’ என்று தலையாட்டினார்.

“ எனக்கு இது எல்லாம் பத்தாது. ஃபுல் ஸ்டொரி வேணும். சொல்லுங்க “

“ நான் சொல்றேன் குட்டிமா “ என்ற பாலு தொடங்க,

“ வேணாம் வேணாம். அவரு எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்வாரு, நான் சொல்றேன் “ என்றாள் பவி.

இருவரையும் ஒரு முறை ஆராய்ந்தவள், “ நீங்க உங்க பார்ட் சொல்லுங்க அப்பா, அவங்க அவங்களோட பார்ட். ஒ.கே வா? “

“ ம்ம்ம்.. “

“ ஒ.கே ஒ.கே ”

“ குட், அப்பா நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க “

ரு நொடி நிதானித்தவர், ஒரு புன்னகையுடனே தொடங்கினார்.

“ உன் அம்மா, அதாவது என் மனைவி என்னோட மாமன் பொண்ணு. நான் டிப்ளமோ படிக்கும் போது திடீர்னு என் அப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சு. வீட்டுல கஷ்டம். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க வேற இருந்தாங்க. அம்மாக்கு யார்கிட்டயும் உதவினு போய் நிக்குறதும் பிடிக்காது. இந்த கஷ்டத்த சமாளிக்க என்னோட பதினேழாவது வயசுல துபாய்க்கு வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை. அதோட, என் மாமாவுக்கு வெளியூர்ல வேலை கிடச்சு, ஊரவிட்டு முன்னடியே போயிருந்தாரு. அதனால சின்ன வயசுல பவித்ராவ பார்த்த நியாபகம் கூட எனக்கு சரிய இல்ல “ என்று நிறுத்தி தன் மனைவியைப் பார்த்தார்.

அவரை கொஞ்சமே கொஞ்சம் முறைத்தவாறே பவித்ரா,

“ இப்போ என் டைம். நான் சம்மர் லீவுக்கு மட்டும் தான் என் பாட்டி வீட்டுக்கு போவேன். அங்க யார்கிட்டயும் அவ்வளவா ஒட்டமாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டுனு பக்கத்துல என் சித்தி பசங்க கூட விளையாடிகிட்டு இருப்பேன். எனக்கும் உங்க அப்பாவ பார்த்ததா கூட…. நியாபகம் இல்ல “

அப்பா தொடர்ந்தார், “ இப்படியே பதினொரு வருஷம் போய்டிச்சு. நடுவுல ஒரு மூனு தடவ தான் இந்தியா வந்தேன். ஆனா மாமாவ போய் பாக்கல. என் தங்கச்சிங்க கல்யாணத்துக்கு கூட வர முடியாத நிலை. அப்புறம் ஒரு தடவ லீவுக்கு வரும்போது என் அம்மா,  அவங்க தம்பிய.. அதான் மாமாவ பாத்துட்டு வாடா னு அனுப்பி வச்சாங்க. நானும் மாமா, அத்தை, அவங்க பொண்ணுக்குனு கிப்ட் எல்லாம் வாங்கிட்டு போனேன் ”

அம்மா, “ நானும் என் பக்கத்து வீட்டு லதா அக்காவும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ…”

“ வேயிட், வேயிட். இரண்டு பேரும் எப்படி இருபீங்கனு சொன்னால், எனக்கு கற்பனை பண்ண ஈசியா இருக்கும்ல..”

“ உன் அப்பா 80’ ஹீரோ ரேஞ்சுக்கு குருவி கூடு தலையோட, பெல்ஸ் பாண்ட் போட்ட ஒட்டடக்குச்சி மாதிரி இருப்பாரு “

“ உன் அம்மா, சைடு வகுடு எடுத்து, ஒல்லியா, குச்சிக்கு தாவணிய சுத்தி விட்ட மாதிரி , எலும்பு கூடு கணக்கா இருப்பா “

“ ஓ…. ஐ ஸீ… யு கண்டினியு மா..”

“ அப்போ தூரத்துல உயரமா ஒரு உருவம் வர மாதிரி தெரிஞ்சுது. நான் உடனே, ‘இந்த நெட்ட கொக்கு யாராயிருக்கும் கா?’ னு கேக்க, அவங்க ‘இதை நீ சொல்றியே, உன் உயரத்துக்கு பையன் தேடினா இப்படி தான் அவனும் இருக்கனும்’ னு சொல்லிக்கிட்டு இருக்கும்போது, இவரு நேர எங்கிட்டயே வந்து என் வீட்டு அட்ரஸையே கேட்டாரு. பக்கதுல அந்த அக்கா சிரிக்க, நான் அசடு வழிய இவரை கூடிட்டு போனேன். ”

“ ம்.. அப்புறம்… “

“ அப்புறம் என்ன? கொஞ்ச நேரத்துல என் அப்பா வர, மாமனும் மருமகனுமா சேர்ந்து ஊர் உலகத்து கதையெல்லாம் பேசி, சாப்டு, வாங்கி வந்த பொருளை எல்லாம் குடுத்துட்டு கிளம்பிட்டாரு “

“ உனக்கு என்னமா வாங்கி வந்தாரு அப்பா? “

முகம் பிரகாசமுற, அலமாரியில் இருந்து ஒரு மெரூன் கலர் புடவையை எடுத்து அவளிடம் நீட்டி “ இதை தான் “ என்றார்.

“ அப்பா, சூப்பர் செலக்ஷன். இப்போ நீங்க. அப்புறம் என்னாச்சு? “

“ என் சொந்ததுல அண்ணன் ஒருத்தரு, ‘உறவு விட்டுட கூடாது.  நம்ம பாலுக்கு பவித்ராவ கேட்டா என்ன?‘ னு சொல்ல, கல்யாண பேச்சு ஆரம்பமாச்சு. இரண்டு வீட்டுலையும் பேசி கல்யாணமும் நிச்சயமாச்சு. இப்படி தான் பவி மேடம என் தலையுல கட்டுனாங்க “ என்று பாலு நிறுத்த,

ஒர் நக்கல் சிரிப்புடனே பவித்ரா, “ ஓஹோ, கட்டுனா இவள தான் கட்டுவேன்னு நீங்க புலம்புனதா உங்க அண்ணன் எங்கிட்ட சொன்னது பொய்யா இருக்குமோ? இருக்கும் இருக்கும்.”

‘தேவை இல்லாம சீன் போட்டு, சிக்கிடேனோ?’ என்று எண்ணி திரு திரு என விழித்த தந்தையைப் பார்க்க பாவமாக இருந்ததால் பேச்சை திசை திருப்பினாள் புவி.

“ நிச்சயமாச்சு. அப்புறம் மா ? “

“ அதான் ஹைலைட். என் மாமனாரு கல்யாண எற்பாட்டைப் பத்தி பேசி, மருமகள பாத்துட்டு போலாம்னு வந்தார். அவர் வந்த நேரம், நான் மட்டும் தான் வீட்ல இருந்தேன். என்ன பண்றதுனே தெரில. பயண களைப்புல அவர் தூங்க, நான் முதல் முறையா சமைக்க போனேன். “

“ அய்யையோ, பாவம் தாத்தா “

“ அது என்னமோ உண்மை தான். சாம்பார் வைக்க ஆரம்பிச்சேன். பருப்பு கட்டி பிடிச்சுடிச்சு. அப்புறம் சைலண்டா லதா அக்காவ கூப்டேன். அவங்க அதை சாம்பார் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாங்க. அப்புறம் சைடு டிஷ்க்கு ‘ஆம்லெட்’ சுடலாம்னு ரெடி பண்ணவும் ஒரு டவுட். எண்ணெய முட்டையுல ஊத்தலாமா?, இல்ல ப்பேன்ல ஊத்தனுமா?, எல்லாம் ஒன்னு தான்னு  முட்டை கூடவே சேர்த்து,சுட்டு, ஆம்லெட்னு சொல்லி அவருக்கு கொடுதேன். பட் என் மாமா செம ஷார்ப், கரெக்டா கண்டுபிடிச்சுடாரு. “

“ பாவி பாவி. கல்யாணம் பிடிக்கலனு என் அப்பாவ சமைச்சு கொல்ல பாத்திருக்க.. “ என்று பாலு புலம்ப,

“ ஆமா, பிடிக்காம தான் அஞ்சு முட்டைய உடைச்சு ஊத்தி உங்க அப்பாவுக்கு ஆம்லெட் பண்ணிக்கொடுத்தேன் பாருங்க “ என்ற தன் சாயையை இமைக்க மறந்து பார்த்த பாலு புன்னகைக்க, நாக்கை கடித்து கொண்டாள் பவித்ரா.

கதையில் மூழ்கி போன புவனா, “ அப்புறம் “ என்று ஊக்க,

“ என் ஸ்வீட் மாமனாரு பாவமா, ‘சாப்பாடு நால்லாயிருக்கு மா. ஆன ஒன்னு, ஒரு ஆளுக்கு ஒரு முட்டைல ஆம்லெட் போட்டா போதும்’ னு சொல்லி சிரிச்சுட்டாரு. அப்புறம் ஒரு நல்ல நாளுல உங்க அப்பாவ என்கிட்ட மாட்டி விட்டுடாங்க, கதை ஓவர். போதுமா ”

மெல்லிய சிரிப்புடன் புவனா ‘ம்ம்..” என தலையாட்ட,

“ இப்போ நீயே சொல்லு எங்களோடது அரேஞ்சுடு மேரேஜ் தான? “

“ ஆங்…… “

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.