(Reading time: 6 - 11 minutes)

இருக்கா? இல்லையா? - சுபஸ்ரீ

Ghost

ம்யாவும் அவளது தோழி பத்மினியும் புது மாடி வீட்டிற்கு குடி வந்து பத்து நாட்கள்தான் ஆகியிருந்தது. இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கீழ் வீட்டில் பாட்டியம்மா ஒருவரும் அவரை பராமரிக்க கனகா என்கிற ஒரு பெண்மணி மட்டுமே இருக்கின்றனர்.

பாட்டியிடம் ரம்யாவோ பத்மினியோ இதுவரை பேசியதேயில்லை. கீழ் வீட்டிற்கு குடி வந்ததில் இருந்தே பாட்டி  அடிக்கடி வெளி அறை சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு பெரிய படத்தை உற்று பார்த்துக் கொண்டிருப்பதை பத்மினியும் ரம்யாவும் கவனித்திருக்கிறார்கள். எப்போதாவது பாட்டி கனகத்திடம் படத்தை சுட்டிக்காட்டி “மகன் மருமகள் பேத்தி” என எதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். அந்த படம்  மரசட்டத்தினால் மிக அழகாக அலங்காரமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அறையில் வெளிச்சம் அதிகம் இல்லாததால் அதன் சட்டம் மட்டுமே தெரிந்தது.

ரம்யா சீக்கிரம் அலுவலகம் கிளம்பி விடுவாள். பத்மினி சற்று தாமதமாக கிளம்புவாள். அன்றும் நிதானமாக கிளம்பிய பத்மினி பாட்டி சுவற்றில் மாட்டியிருந்த  படத்தை  பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். சட்டென பாட்டி வீட்டின் உள்ளே செல்ல பத்மினி ஆர்வகோளாறினால் அந்த படத்தைப் பார்க்க உள்ளே சென்றாள். அறை கொஞ்சம் இருட்டாக இருக்கவே படத்தை பார்த்தவளுக்கு அதிர்ச்சி வெரும் சட்டம்(frame) மட்டுமே இருந்தது. புகைப்படமே அங்கு இல்லை. வேகமாக வெளியே வந்தவள் “இந்த பாட்டி என்ன பைத்தியமா ... ஓண்ணுமே இல்லாதத இப்படி பாக்குது” என நினைத்துக் கொண்டே  வீட்டின் கேட்டை(gate) மூடியவளின் இடதுகை சுண்டு விரல்நகம் கேட்டில் நசுங்க. லேசாக ரத்தம் வந்தது ஆவென வலியால் கையை  உதறினாள். அவள் ரத்தம் 13என்ற அந்த வீட்டின் எண்மேல் தெளித்தது. “ஆபிஸ் போகும்போது  பராக்கு பாத்தா இப்படிதான் ஆகும்“ என தன்னைதானே திட்டியவாறு அவசரமாக அங்கிருந்து கிளம்பினாள்.

மற்றொரு நாள் ரம்யா அலுவலகத்தில் இருந்து திரும்பியவள் திடீரென்று பாட்டி  கையை நீட்ட ஒரு புத்தகம் தானாக பறந்து பாட்டியின் கைக்கு வந்தது .. இதை பார்த்த ரம்யாவிற்கு தான் கண்டது நிஜமா அல்லது பிரம்மையா என்ற பயத்துடனும் குழப்பத்துடனும் விரைவாக அங்கிருந்து நகர முற்பட்டவள் கண்ணில் அந்த படம் பட்டது. அவளுக்கும் வெறும் மரசட்டம் மட்டுமே தெரிந்தது.

இந்த புகைப்பட விஷயத்தை பத்மினி ரம்யாவிடம் கூற  “ஒருவேளை பேய்ப்படம் மாதிரி இங்கயும் இருக்குமோ அந்த பாட்டி பேசறதே இல்ல, கனகமும் கரடுமரடான ஆளு வீட்டு நம்பர் 13 அதுல ரத்தம் வேற ... ஐய்ஐய்யோ” என சற்றே கலங்கிவிட்டாள் ரம்யா  “அட போடி சந்திரமுகி பிசாசு படத்தையெல்லாம் தேட்டர்ல பாத்தவ நானு .. எதுவும் என்னை ஓண்ணு செய்ய முடியாது” என்றாள் பத்மினி கெத்தாக.

“அது ரீலு இது ரியல்மா ... வீடு காலி பண்ணிடலாம் ... இது பேய் வீடுதான். நான் நேத்து வரும்போது “ என ரம்யா தன் அனுபவத்தை கூறினாள்

“என்ன பாட்டி கைக்கு புத்தகம் தானா பறந்து வந்துச்சா? .. அப்ப இந்த பேய், பிசாசு, ஆவின்னெல்லாம் சொல்லுவாஙகளே அது இங்க இருக்கா?  இல்ல இல்லையா?  ... ” திகிலுடன் கேட்டாள் பத்மினி. இருவரும் அதற்கு பிறகு கீழ் வீட்டின் பக்கமே திரும்புவதில்லை. இப்படியே ஒரு வாரம் கழிந்தது. இருவரும் சேர்ந்தே அலுவலகம் சென்று திரும்புகின்றனர். தனியாக இருக்க பயம்.

அன்று ரம்யாவும் பத்மினியும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி வந்தனர். கீழ் வீட்டு வெளி அறையில் பளீச்சென குழல்விளக்கு (tubelight) எரிந்துக் கொண்டிருந்தது. “ஏண்டா ..  கனகம் உனக்கு போன் பண்ணி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது நீ உடனே வரமாட்டியா?” என பாட்டி அதட்டிக் கொண்டிருந்தார் “இல்லம்மா ஊருக்கு போயிருந்தேன் அதான்” என ஒருவன் ஏணி மேலே நின்றவாறு குழல்விளக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.  “எனக்கு காது கேட்காதுனு தெரிஞ்சே எல்லாரும் ஏமாத்துராங்க அதனாலயே நான் யாரோடவும் பேசறது இல்ல” என கவலையான தொனியில் பேசினார் பாட்டி.

பாட்டி  ரம்யாவையும் பத்மினியையும் பார்த்ததும் “உள்ள வாங்கமா ... நீங்க குடி வந்ததுல இருந்து நான் பேசவேயில்ல .. எனக்கு காது கேட்காது காதுக்கு மெஷின்தான் அது  ரிப்பேர் இன்னிக்குதான் சரியாச்சு ...” என பாசமாக பேசினார். இத்தனை நாள் பேசாததை ஒரே நாளில் கொட்டி தீர்த்தார். இருவரும் உள்ளே வந்தனர். படத்தை பார்த்தும் இருவருக்கும் எனன்னவோ போல் ஆகிவிட்டது. “இது என் அம்மா வரைஞ்சது” என பாட்டி முகத்தில் பெருமை பொங்க கூறினார். அது பென்சிலால் ஒரு பெரிய காகிதத்தில் வரையபட்ட ஒரு பெண்ணின் முகம் . காகிதம் பழையதாகிவிட்டதால் தூரத்தில் இருந்து பார்த்ததால் ஓவியம் தெரியவில்லை. சுவரும் காகிதமும் ஒரே நிறம். “என் அம்மா ரொம்ப நல்லா வரைவா அந்த காலத்துல என் அப்பா இதுக்கு மரசட்டம் போட்டு மாட்டி இருக்கா” என்றார் பாட்டி. ரம்யாவும் தன்னையும் மறந்து “ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.

“என் மகன் மருமக பேத்தி டெல்லியில இருக்கா ... இந்த முகம் என் பேத்தி சாயல்ல இருக்கு. கனகத்துக்கிட்ட கூட சொல்லி இருக்கேன். இதை பார்த்தாலே என் அம்மா அப்பா என் மகன் எல்லாரையும் பார்க்கற மாதிரி ஒரு சந்தோஷம்” என்றார் பாட்டி அவர் குரலில் ஏக்கம் தாண்டவமாடியது. பத்மினிக்கு “இவரை போய் தவறாக நினைத்தோமே” என குற்ற உணர்ச்சி மிகுந்தது “பாட்டி நாங்களும் உங்க பேத்தி மாதிரிதான்” என ஆறுதலாக அவர் கையை பிடித்துக் கொண்டு கூறினாள். பாட்டிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.  “இன்னிக்கு எங்க வீட்லதான் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடணும்”  கனகம் உள்ளே சென்றாள். சற்று சத்தமாக “சாப்பாட்டு தட்டை மெதுவா வை உட்கார்ந்த இடத்துல இருந்து வீசாத ..” பிறகு மெல்ல “நான்தான் கிழவி இவளுக்கு என்ன? எதையாவது கேட்டா முட்டி கால் வியாதினு பக்கத்து அறையில இருந்தாலும் சரி தூக்கி போடுவா நான் பிடிக்கணும்” என மெல்ல இரு பெண்களையும் பார்த்து புகார் போல கூறவே அனைவரும் சிரித்தனர். ரம்யாவிற்கு புத்தகம் எப்படி பறந்தது என விளங்கியது.

ரம்யாவும் பத்மினியும் மற்றொருநாள் சாப்பிடுவதாக கூறி மாடிக்கு கிளம்ப யத்தனித்த போது “இவன் பேரு பாண்டி எங்க வீட்டு ப்ளம்பர் எலக்டிரீஷன் எல்லாமே இவனதான் வேலையிருந்தா கூப்பிட்டு பாருங்க .. என்ன பெயிண்டிங் வேலை மட்டு்ம் சரியா வராது .. ” கிண்டலாக சொன்ன பாட்டியை இடைமறித்த பாண்டி “எப்பவோ வீட்டு நம்பர் மேல தெரியாம பெயிண்ட் பட்டுடிச்சி .. இன்னும் அதையே சொல்லிகாட்டுங்க பாட்டி” என பொய்யாக கோபப்பட்டான். ரம்யாவுக்கும் பத்மினிக்கும் அந்த வீட்டு மேல் இருந்த பயமும் சந்தேகமும் விலகி பாட்டியின் மேல் பாசம் பொங்கியது.

பாண்டி கிளம்பவே கூடவே ரம்யாவும் பத்மினியும் மாடிக்கு சென்றுவிட்டனர்.

அந்த படத்தில் இருந்து புகை மாதிரி ஒரு உருவம் வெளி வந்தது. அதை பார்த்த பாட்டி “ஒரு வழியா இந்த பொண்ணுங்கள சமாளிச்சிட்டேன். அம்மா இனிமே நீ என்ன செஞ்சாலும் பிரச்சனை இல்ல. உன் இஷ்டம் போல இங்கயே இரும்மா.”  என அந்த உருவத்தைப் பார்த்து சிரித்தார்.

பேய் இல்லை என நினைத்த ரம்யாவிற்க்கும் பத்மினிக்கும் பேய் இருப்பது தெரியாது பாவம்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.