(Reading time: 5 - 9 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“அப்ப இன்னிக்கே போன் போட்டுச் சொல்லிடறேன்!” என்ற தரகர், தன் குரலைச் சற்று தணித்துக் கொண்டு, “வந்து...நான் ஒண்ணு சொல்லுவேன்...தயவு செய்து நீங்க ரெண்டு பேரும் கோவிச்சுக்க கூடாது!” என்றார்.

“என்ன தரகு...பீடிகையெல்லாம் பலமாயிருக்கு!...விஷயத்தைச் சொல்லுவியா!...அதை விட்டுட்டு கோவிச்சுக்காதீங்க...அது...இதுன்னுட்டு...!” தேவநாதன் சற்றுக் காட்டமாகிச் சொல்ல,

“வந்து... உங்க குடும்ப நன்மைக்காகத்தான் நான் இதை ஏன் சொல்றேன்!”

“ப்ச்!...இப்ப நீ சொல்லப் போறயா...இல்லை...”என்று தேவநாதன் கத்த,

“சொல்றேன்!...சொல்றேன்!...”என்ற தரகு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “வந்து...இந்த தடவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது...நம்ம சின்னப் பொண்ணு வீட்டுல இல்லாம இருந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்!...எதுக்குச் சொல்றேன்னா?...போன தடவை சின்னவளைப் பார்க்கப் போகத்தானே அந்த மாப்பிள்ளை திடீர்னு பல்டி அடிச்சார்?...அதான் அதுக்கு இடமே தராம...சின்னவளை அவங்க கண்ணுல காட்டாம இருக்கறது...நல்லதுதானே?” மிக மிகத் தயக்கத்தோடு சொல்லி முடித்தார்.

முந்தைய அனுபவம் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறாமலிருந்த காரணத்தினால், தரகரின் அந்தக் கருத்தை தேவநாதனும், பார்வதியும் மறுப்பின்றி உடனே ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை முன் வந்து நின்றது.

“அதெப்படி தரகரய்யா?... “ஞாயிற்றுக் கிழமை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்றேன்!”னு சொல்றீங்க...அன்னிக்கு சின்னவளுக்கு ஆபீஸ் லீவு...எப்படியும் வீட்டுலதான் இருப்பா...அப்புறம் எப்படி?” பார்வதி கேட்க,

“எங்காவது வெளிய அனுப்பி வெச்சிடுங்க...அவ்வளவுதான்” தரகரே ஐடியாவும் கொடுத்தார்.

“யோவ் தரகு...அவ பெரியவ மாதிரி அல்ல...ரொம்ப புத்திசாலிப் பொண்ணு!...அவகிட்ட எதையும் மறைக்க முடியாது!...எப்படியும் மோப்பம் பிடிச்சிடுவா!” என்றார் தேவநாதன்.

“அப்ப...இப்படிச் செய்வோம்!...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது அவ இங்கியே இருகட்டும்!...ஆனா மாப்பிள்ளையோட கண்ணிலோ...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கண்ணிலோ படாம அறைக்குள்ளாரவே இருக்கற மாதிரி பார்த்துக்கங்க...என்ன?”

தேவநாதனும், பார்வதியும் ஒரு வித சங்கடத்துடன் தரகரைப் பார்க்க,

“த பாருங்க!...இது ஒண்ணும் புதுசில்லை...எனக்குத் தெரிஞ்சே பல இடங்கள்ல இந்த மாதிரி செஞ்சிருக்காங்க!...இது ஒண்ணும் தப்பேயில்லை!...” தரகர் தனக்குத் தெரிந்த முறையில் நியாயம் கற்பிக்க முயல,

“ம்ம்..சரி...சரி..நாமும் அதே மாதிரி செஞ்சிடுவோம்!” என்றாள் பார்வதி.

“அப்ப நான் புறப்படறேன்!...ஞாயிற்றுக் கிழமை அவங்க வருவாங்க!...அதுக்காக நீங்க என்னென்ன செய்யணுமோ செய்திட்டு தயாரா இருங்க!” சொல்லி விட்டு தரகர் காவிப்பல் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார்.

தொடரும்...

Next episode will be published on 23rd Jan. This series is updated weekly on Saturdays.

Go to Thoora theriyum megam story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.