(Reading time: 5 - 10 minutes)

07. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

வாசலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷைனி. வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் கீர்த்தியுடன் ரெண்டு வார்த்தை பேசினால் நல்லாயிருக்கும் போலிருந்தது. தயாவுடன் திருமணம் முடிந்த பிறகு அம்மா அப்பாவுடன்  மனம் விட்டுப் பேச முடிவதில்லை. அவர்களை மீறிச் செய்த திருமணம் ஏதேனும் பிரச்னை என்று போய் நின்றால் “நீயேதானே உன் தலையில் மண்ணை வாறிப் போட்டுக் கொண்டாய் “ எனச் சொல்லி விடுவார்களோ என்ற கலக்கம். தங்கையோ அறவே பேச்சைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். மிஞ்சியது கீர்த்திதான். கீர்த்தியும் தயாவுடன் ஷைனியின் திருமணத்திற்குத் தடை போட்டவள்தான்………ஒரே ஆஃபீஸில் வேலை பார்த்ததால் முகம் வாடி வரும் ஷைனியைப் பார்த்தும் பாராதது போல நடிக்க கீர்த்திக்கு முடியவில்லை. ஷைனியின் ஒரே ஆதரவு கீர்த்திதான்.

                                      கீர்த்தியின்  “குட் மார்னிங்” என்ற குரல் கேட்டதும் ஓடிப் போய் அவளைத் தனியாகக் கூட்டிக் கொண்டு போய்க்

 “கீர்த்தி…………”என்றவாறு அழ ஆரம்பித்தாள்.

என்னடா ஷைனி…என்னாச்சு?....... சொல்லு….என்ன காலங்கார்த்தாலே ஏதும் பிரச்னையா?.....”

“இதுக்கு முடிவேயில்லையா….ஒய் மீ?....கடவுள் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தார் தயாவுக்காக….?”

“என்ன மறுபடியும் அடியா….? என்ன மனுஷன்யா இவன்?..........என்ன நடந்துச்சு?....சொல்லு….”

ஷைனி தீபக் வந்ததிலிருந்து நடந்ததெல்லாம் கீர்த்தியிடம் சொன்னாள்.

“தயாதான் தீபக் முன்னாலே பனீர் சப்ஜியும் சப்பாத்தியும் பண்ணச் சொன்னார்….அப்புறம் தயாவேதான் ஃபோன் பண்ணிச் சாம்பாரும் சாதமும் பண்ணிடுன்னு சொன்னார்……….அப்புறம் “தீபக் முன்னாலே ஏன் இப்பிடி மானத்தை வாங்கினே சொன்னதைச் செய்ய மாட்டியா”ன்னு சோத்துத் தட்டை விட்டெரியறார்…..…நான் என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது கீர்த்தி”

“சரி விடு……என்ன பண்றது..? யாரைக் குற்றம் சொல்றது?.............ஏய் ஷைனி டேமேஜர் வர்றார் பாரு…..லன்ச்லே பேசலாம்” …….. என்றவாறு  தன் இருக்கையை நோக்கிப் போனாள்.

கீர்த்திக்கு இதற்கென்னதான்  தீர்வுன்னு  குழப்பமாயிருந்தது. தினமொரு பிரச்னை….தினமொரு  அழுகை. இவள் படுற பாட்டைப் பார்க்கும்போது  திருமண வாழ்வின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டிருந்தது கீர்த்திக்கு. கணினியைத் திறந்தவுடன்

ஷைனி,

“உன் நாட்குறிப்பேடுகளில்

ஒரு பக்கத்திலேனும்

பூ உதிர்ந்த நெடுஞ்சாலையாக

உன் சந்தோஷ நினைவுக் குறிப்புகளிருக்குமோ….?

இந்தக் கடலின் அலைகள் நனைக்காத

மணல் துகள்களுக்காகக் காத்துக்

கொண்டிருக்கிறது இந்தக் கடற்கரை………”

என ஷைனியை நினைத்துக் கொண்டே எழுதி விட்டு வேலையில் மூழ்கினாள் கீர்த்தி.

***

ன்றைக்கும் விட சீக்கிரமாய்  ஆஃபீஸுக்கு வந்து விட்டிருந்தான்  தீபக். பைக்கை நிறுத்திவிட்டுக்  கண்ணாடியில் முகம் பார்த்தவன் அதில் தெரிந்த முகத்தைப்  பார்த்தவுடன் திடுக்கிட்டுத் திரும்பினான் தீபக்.

ஒரு பெரிய புன்னகையுடன் நின்றிருந்தான் தயா.

“என்னடா…இந்நேரம்  இங்கே ? “

“உனக்காகத்தாண்டா காத்துக்கிட்டிருக்கேன்…….வாடா…நிறைய பேசணும் “

“அய்யோ….எனக்கு அஃப்ஃபீஸுக்கு நேரமாச்சுப்பா…”

இன்னிக்கு ஒருநாள் லீவு போடுடா……..ப்ளீஸ்டா….”

“கண்டிப்பா லீவு கிடைக்காதுடா………இன்னிக்குக் கிளம்பு….இன்னொரு நாள் பார்த்துக்கலாம்…..”

“எனக்குத் தலையே போற அவசரம்டா…..நீ இப்பிடிச்  சொல்லலாமா………இன்னிக்கு ஒருநாள்டா.. ப்ளீஸ்”

என்னடா இது  …….நா வேணா லீவு கேட்டுப் பார்க்கிறேன்…..தந்தால் வரேன்….” என்றவன் சுபாக்காவின் வார்த்தைகள் நினைவுக்கு வர………சும்மா லீவு கேட்கப் போவது போலப் பாவ்லா பண்ணி விட்டு வந்து லீவு கிடைக்கலைடா என்று சொல்லி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்

“லீவு கிடைச்சா பாருடா….இல்லைன்னா நீ வேலையைப் பாரு….நான் லன்ச் டைம் வரைக்கும் இங்கேயே உனக்காக வெயிட் பண்றேன் ஓகே வா?”

இதைக் கேட்டவுடன் உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டு……’இவன் இங்கேயே நின்று இன்னும் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி விடுவானோ என்று  பயந்து லீவு போட்டே விட்டான் தீபக்.

வண்டியில் போய்க் கொண்டே “எங்கே போகணும்” என்றான்

“ஏதோ ஒரு ரெஸ்டாரென்ட் போடா……..செம பசி….காலைலே சாப்பிடலை……கொஞ்சம் அமைதியான இடத்துக்குப் போடா”

ரெண்டு பேரும் ஒரு மூலையில் போய் அமர்ந்து ஆர்டர் கொடுத்துவிட்டு

  “ஏண்டா  உனக்கு என்னதாண்டா பிரச்னை?”என்றான் தீபக்

“ஷைனிதாண்டா எனக்குப் பிரச்னை …….அவள் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா…நீயே பார்த்தியே…நான் பனீர் சப்ஜி சப்பாத்தி வைக்கச் சொன்னா…..சாம்பாரும் சாதமும் வைச்சாதானே….இது ஒரு சாம்பிள்தாண்டா…..

வேலையை விடச் சொன்னேன்…..மாட்டேங்குறா………..சுடிதார் போடுன்னா சேலை கட்டுவா. ஜீன்ஸ் போடுன்னா  சல்வார் போடுவா……..சினிமாவுக்குன்னா …கோவிலுக்குப் போவோம்பா……..லீவு போடச் சொன்னா அன்னிக்குன்னு ஓவர் டைம் பார்த்துட்டு வராடா……”

“தயா…நிறுத்து……நிறுத்து… முதல்லே நேற்று நீ எதுக்குடா சோத்துத் தட்டைத் தூக்கியெறிஞ்சே? ….. எனக்கு  என் மேலேயே கோபமா வந்துச்சுடா… இப்பிடி ஒரு பொண்ணு மேலே என் ஃப்ரெண்ட் சோத்துத் தட்டைத் தூக்கியெறியறான் ….அதையும் பார்த்துட்டு நான் ஏதும் செய்யாமல் இருக்கேன்னு”

“உன் முன்னாலே நான் சொன்னதைச் செய்யாம அவமானப் படுத்திட்டாளேன்னுதான் சோத்துத் தட்டைத் தூக்கியெறிஞ்சேன்”

“அவ என்ன உன் கைலெ கிடைச்ச பொம்மையா….நீ சொன்னதையெல்லாம் கேட்டு கீ கொடுத்த பொம்மை மாதிரிப் பண்ணனும்னு நினைக்கிறே……”

“நீ எனக்கு உதவி பண்ணுவியா மாட்டியா……….உன்னை எனக்கு அட்வைஸ் பண்ணக் கூப்பிடலை……….”

“நீ இன்னும் அதே திமிர் புடிச்ச தயாதாண்டா……உங்கிட்டே எனக்குப் பேச ஒண்ணுமேயில்லை…நான் கிளம்புறேன்…..” என்று கிளம்பியவனைப் பார்த்து உடனேயே …..

“சாரிடா தீபு ….ப்ளீஸ்டா. இனிமே இப்படிப் பேசமாட்டேண்டா…………..ப்ளீஸ்டா…போகாதேடா…….”

தீபக் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்தான்…..

“என்ன உதவி சொல்லு…..”

தயா…..குரலைத் தாழ்த்திக் கொண்டு…..சொன்னதைக் கேட்ட தீபக் அதிர்ச்சிக்குள்ளானான்.  

தொடரும்

Karai othungum meengal - 06

Karai othungum meengal - 08

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.