(Reading time: 15 - 30 minutes)

10. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ண் விழித்த இனியா எதிரே இளவரசனை கண்டவுடன் தான் ஏதோ கனவு தான் காண்கிறோம் என்று எண்ணிக் கொண்டாள். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் கண்கள் ஏன் கலங்குகிறது என்று எண்ணிக் கொண்டாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஜோதிக்கு ஏதோ புரிவதை போல் இருந்தது. ஆனாலும் இனியாவிற்கு என்ன ஆயிற்று. இவரை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவரின் தாயை கவனித்தாக கூட தெரியவில்லையே. அவர் என்ன நினைப்பார் என்று எண்ணிக் கொண்டு அவசரமாக “பார் இனியா. உன்ன பார்க்க யார் வந்திருக்கா பாரு.” என்று கூறினாள்.

இனியாவிற்கு அக்காவின் குரலை கேட்ட பின்பு தான் சுயநினைவே வந்தது. ஓ இது கனவில்லையா. நம்மை பார்க்க நிஜமாகவே வந்துள்ளார்கள் என்று எண்ணி அவன் தாயை பார்த்தாள்.

அவர் கனிவாக “என்னம்மா இனியா. என்னாயிற்று. திடிர்னு ஏன் உனக்கு உடம்பு சரி இல்லாம போச்சு” என்று கேட்டார்.

இனியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை (வழக்கம் போல்). கொஞ்சம் கஷ்டப்பட்டு எந்திரித்து “ஒரே நிமிஷம்” என்று முனகலாக சொல்லி விட்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.

இனியா முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு ஒரு நிமிஷம் நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வெளியே சென்றாள்.

“வாங்க ஆன்ட்டி” என்று கூறியவாரே சென்று கட்டிலில் அமர்ந்தாள். “என்னன்னு தெரிலை. திடிர்னு தலை வலிச்சது. வந்து படுத்தா பீவர் வந்துடுச்சி” என்றாள்.

இளவரசனுக்கு தான் அங்கு குற்ற உணர்ச்சி அதிகமாகியது. தான் எந்த அளவுக்கு அவளை காயபடுத்தி இருக்கிறோம் எண்ணி எண்ணி உள்ளுக்குள்ளே வருத்திக் கொண்டிருந்தான்.

இனியாவோ அவனை பார்க்கவே இல்லாத மாதிரி அவன் தாயிடமே பேசிக் கொண்டிருந்தாள். ஜோதி இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒரு ஆடியன்ஸ் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இளவரசனின் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது. இருவருக்கும் ஏதோ பிரச்சினை என்பதை மட்டும் தெரிந்துக் கொண்டாள். இளவரசன் தான் இனியாவை ஏதோ சொல்லி இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

“ஓ அதான் மேடம்க்கு திடிர்னு உடம்பு சரி இல்லாம போச்சா” என்று எண்ணி உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

அதற்குள் இளவரசனின் தாயார் “ஏன்மா இந்த ரூம் உள்ளவே அடைஞ்சி கிடக்கற. கொஞ்சம் வெளியே வா. இங்கவே இருந்தா இன்னும் நோயாளி மாதிரி இருக்கும்” என்று கூறியவாறே அவளை கீழே அழைத்து சென்றாள். இளவரசனும் மந்திரிச்சி விட்ட ஆடு மாதிரி ஏதும் பேசாமல் அவர்களை தொடர்ந்து கீழே சென்றான்.

இதை எல்லாம் பார்த்திருந்த ஜோதிக்கு தான் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவளுக்கு இளவரசனின் நிலைமை கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவன் செய்கை சிரிப்பை தான் தந்தது. அவளும் சிரித்தவாறே அவர்களை தொடர்ந்து சென்றாள்.

கீழே ஹாலிற்கு சென்று அனைவரும் அமர்ந்தார்கள். அதற்குள் இனியாவின் தாயும் அவர்கள் குடிக்காமல் சென்று விட்ட காபியை திரும்ப சூடு செய்துக் கொண்டு கூடவே ஏதோ பலகாரமும் கொண்டு வந்தார்.

இனியாவின் தாய் வந்து இனியாவை தொட்டு பார்த்து “இன்னும் பீவர் இருக்குதே டா. நாம எதுக்கும் டாக்டர் போய் பார்த்திட்டு வந்துடலாமா” என்றார்.

“இல்லம்மா. இப்ப பீவர் குறைஞ்சி தான் இருக்கு. இன்னும் டாக்டர் குடுத்த டேபிலேட் கூட இருக்கே. நைட் டேபிலேட் போட்டு எந்திரிச்சா சரி ஆகிடும்” என்றாள்.

“ம்ம். என்றவர் ராஜலக்ஷ்மியிடம் திரும்பியவாறே, இவளுக்கு இந்த ஹாஸ்பிடல் போறதுன்னாலே பிடிக்காது. சின்ன வயசுல இருந்து இப்படி தான் எவ்வளவு உடம்பு சரி இல்லைன்னாலும் ஹாஸ்பிடல் வரலைன்னு சொல்லி அழுதே இன்னும் உடம்பை கெடுத்துப்பா.” என்றார்.

இளவரசனின் தாயும் சிரித்தவாறே “நீங்க சொல்றத பாத்தா இனியா இப்ப ஹாஸ்பிடல்ல வேலை பாக்கறதே ரொம்ப பெரிய விஷயம் போல இருக்கே” என்று கூறினார்.

“ஆமாம் ஆமாம். எனக்கே இவ முதல் முதலா ஹாஸ்பிடல் போகும் போது ரொம்ப பயமா தான் இருந்தது. இவளுக்கு ஹாஸ்பிடல் ஸ்மெல் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நான் பயந்தது போல முதல் நாள் ஒன்னும் நடக்கல. இவ நல்லா தான் வந்தா. நானும் சரி பயப்பட தேவை இல்லன்னு நினைச்சி தைரியமா இருந்தா ரெண்டாவது நாள் வந்து ஓன்னு ஒரே அழை” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அதற்குள் இனியா “ம்மா வேண்டாம். ஏன் இப்படிலாம் பண்றீங்க” என்றாள்.

இளவரசனின் தாயோ “நீ சும்மா இரும்மா. நீங்க சொல்லுங்க லக்ஷ்மி” என்று ஊக்குவித்தார்.

“ரெண்டாவது நாள் இவ வேலைல இருந்து வரும் போது நான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். அதனால இவ வரும் போது நான் வீட்டுல இல்லை. நான் வீட்டுக்கு வந்தா இவ அழுகற சத்தம் தான் கேட்குது. நான் என்னன்னு நினைக்கறது. என்னடா என்னாச்சின்னு எப்படி எப்படியோ கேட்கறேன். அழுதுக்கிட்டே இருக்கறாலே தவிர சொல்லவே இல்லை. அப்புறம் கடைசியில பார்த்தா ஒரு சின்ன குழந்தைக்கு உடம்பு சரி இல்லன்னு ஹாஸ்பிடல் வந்திருக்காங்க. அந்த குழந்தை அழுதுக்கிட்டே இருந்திருக்கு. அதுக்கு ஊசி, ட்ரிப்ஸ்ன்னு ஏத்திட்டே இருந்ததுல குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லையாம். அதுக்கு இவ வந்து அப்படி அழுது என்னை பயமுறுத்திட்டா”

இதைக் கேட்ட ஜோதியும், இளவரசினின் தாய் ராஜலக்ஷ்மியும் சிரிக்க ஆரம்பித்தனர். இனியா தன் அக்காவை பார்த்து முறைத்தாள். ஆனால் அவளோ சிரித்துக் கொண்டே இருந்தாள்.

ஆனால் இத்தனைக்கும் இளவரசனின் முகம் மட்டும் மாறவே இல்லை. வாடியே கிடந்தது. இதை பார்த்த ஜோதிக்கு தான் கஷ்டமாக இருந்தது.

ராஜலக்ஷ்மி “இனியா நீ எப்படிமா ஹாஸ்பிடல்ல சமாளிக்கற. ஹாஸ்பிடல்ன்னா டெய்லி இப்படி எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்குமே” என்றார்.

இனியா பேசுவதற்குள் இனியாவின் தாயே இடை புகுந்து “ம்ம். நல்லா சொல்லுங்க. இவளை அப்ப சமாளிச்சி அனுப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேனு எனக்கு தான் தெரியும். எப்படியோ இப்ப ஓரளவுக்கு சமாளிக்கறா. ஆனா இப்பவும் ஒவ்வொரு நாள் வந்து அழுக தான் செய்வா. என்ன பண்றது.” என்றார்.

ப்படியே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தனர். ஆனால் இளவரசன் மட்டும் ஏதும் பேசவே இல்லை. மற்றவர்கள் ஏதோ பேசிக் கொண்டு அவனை கவனிக்காமல் விட்டால் போதும் என்பது போல் இனியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இனியா தான் அவனை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை.

பெரியவர்கள் இருவரும் பேசிக் கொண்டே கடைசியில் திரும்ப இனியாவின் உடல் நிலைக்கே வந்தனர்.

லக்ஷ்மி “இவளுக்கு இப்படி எல்லாம் திடிர்னு உடம்பு சரி இல்லாம போகாது. நேத்து திடிர்னு இப்படி ஆன உடனே எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி” என்றார்.

நடுவில் புகுந்த ஜோதி “ஆமாம்மா இனியாவுக்கு இப்படி எல்லாம் உடம்பு சரி இல்லாம ஆகாது இல்ல” என்று கூறி விட்டு அவளே இனியாவிடம்

“இனியா உன்ன யாரும் ஏதும் சொன்னாங்களா. உனக்கு உன்ன யாரும் ஏதும் திட்டிட்டா, இல்ல உன்ன கஷ்டபடுத்தற மாதிரி பேசினா தானே திடிர்னு உடம்பு சரி இல்லாம போகும்” என்று கேட்டுவிட்டு “சரி தானே அம்மா” என்று அம்மாவிடம் கேட்டாள்.

இனியா அதிர்ந்து போய் இளவரசனை பார்த்தாள். இளவரசனும் இப்போது அவளை தான் தர்மசங்கடமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

இனியாவின் தாயும் “ஆமாம் இனியா. உன்ன யாரும் ஏதும் சொன்னாங்களா. சொல்லு. நேத்து நீ பேசினதும் சரி இல்லை. சொல்லுடா” என்றார்.

ஜோதி ஏதும் தெரியாதவள் போல் “என்னம்மா இனியா நேத்து என்ன சொன்னா” என்று கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.