தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 37 - பிந்து வினோத்
37. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சனிக்கிழமை அன்று, ஹாஸ்டலில் இருந்து எடுத்து வந்திருந்த பைகளில் இருந்த புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தாள் பாரதி. பிறகு, அந்த வாரத்திற்கு தேவையான உடைகளை தேர்வு செய்து எடுத்து 'அயர்ன்' செய்து அடுக்கி வைத்தாள். பொதுவாக, வேலை ஆட்கள் மூலமாகவே இது போன்ற வேலைகள் செய்து பழகி இருந்த விவேக், பாரதி பொறுமையாக தன் வேலைகள் ஒவ்வொன்றாக முடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்றைய இரவு உணவு நேரத்தில், பாரதி பேச நினைத்த விஷயத்தை மதுவே தொடங்கி வைத்தாள்.
“சின்ன அண்ணி, நீங்க தானே இந்த வருஷம் எலெக்ட்ரானிக் டிவைசஸ் சப்ஜெக்ட் எடுக்கப் போறீங்க?”
“ஆமாம் மது. ஏன் கேட்குற??”
“ரீசன் எல்லாம் இல்லை. சும்மா தான் கேட்டேன் அண்ணி. உங்க சப்ஜெக்ட்டில இந்த தடவையும் நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கனும்.. பவித்ரா மேடம் என்ன சப்ஜக்ட் எடுப்பாங்க??”
பாரதி பதில் சொல்லும் முன்,
“மது, பவித்ராவை காலேஜில் இருக்கும் போது மேடம்ன்னு கூப்பிடு, வீட்டில் இருக்கும் போது அக்கான்னு சொல்லு...” என்றாள் கற்பகம்.
கற்பகம் பக்கம் ஆச்சர்யம் கலந்தப் பார்வை ஒன்றை வீசி விட்டு,
“மே பீ எலக்ட்ரிக் சர்க்யுட்ஸ்,“ என்று மதுவின் கேள்விக்கு பதில் சொன்னாள் பாரதி.
“விவேக், பாரதியையும் மதுவையும் காலேஜில் இருந்து அழைச்சுட்டு வர டிரைவரிடம் மறக்காமல் சொல்லிடு,” என மகனிடம் நினைவுப் படுத்தினார் நரேந்திரன்.