(Reading time: 10 - 19 minutes)

09. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

பார்க்கிற்கு செல்லலாம் என்ற எண்ணத்தை யஸ்வந்த்தின் போன் வந்து கெடுக்க,”கொஞ்சம் அவசரமான வேலை.போயே ஆகணும்.உன்னை வீட்டுல விட்டுட்டுப் போகட்டுமா”என்ற அவனின் பேச்சுக்கள் கூட அவசர கதியாக இருந்ததை புரிந்துகொண்ட அவந்திகா,

“நானே போயிடுவேன்.இது எங்க ஏரியா.பயப்படாம கிளம்புங்க”புன்னகையுடன் அவனை வழியனுப்ப,செல்லும் முன் அவசரமாக பர்சிலிருந்து அவளது மோதிரத்தை எடுத்தவன்,அதை விட அவசரமாக அவளது கையில் அணிவித்துவிட்டு,

“இதை எந்த சமயத்திலும்,யாருக்காகவும்,எதுக்காகவும் கழட்டவே கூடாது.எனக்காக”என்று மென்மையாக கூறியவன்,கொஞ்சம் வன்மையாகவே அவளது கையைப் பிடித்து அழுத்திவிட்டு சென்றுவிட்டான்.

அவன் உருவி சென்ற மோதிரம் தான்.இப்போது கொஞ்சம் வித்தியாசமாக,முன்பை விட பெரிதாக,ஆனால் அதே டிசைனில் கொஞ்சமே மாறுபட்டு,”பிரின்சஸ்”என்ற எழுத்தை மிகவும் சுருக்கியது போல  இருந்தது.

எப்படி காதல் வந்தது என்று அறியாமலையே,அவனிடம் காதலை சொல்லி,இப்போது அவன் கையால் மோதிரத்தையும் போட்டுக்கொண்டாள்.

முன்பை விட மனம் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தது.எதற்காக இத்தனை மகிழ்ச்சி என்பதை இனம் கண்டறிய முடியவில்லை.எப்போதும் அனுபவித்திராத உணர்வுகள் அவளை ஆட்டுவிக்க,எதற்காக என்ற ஒரு கேள்வியே இல்லாமல்,அவனை மனதார விரும்ப ஆரம்பித்தாள்.

அவனைப்பற்றி எதையுமே அறிந்துகொள்ளாமல் ‘இது  எப்படி சாத்தியம்’என்ற கேள்விகள் எழத்தான் செய்தது.

‘இனி அறிந்துகொண்டால் போகிறது’என்று சமாதானம் செய்துகொண்டு வீட்டுக்கே வந்துவிட்டாள்.

கல்லூரிக்கு சென்றுவிட்டு,வீடு திரும்பிய போது,அங்கு குமாரும் தாமரையும் இருந்தார்கள்.இந்தமுறை நன்றாகவே சிரித்தவள்,”காபி போட்டுக் கொண்டு வர்றேன்”என்று நுழைய..

அதை மறுத்த தாமரை,”இங்க தான் சாப்பிடனும்னே இருக்கோம்..அதனால காபி வேண்டாம்”என்று சொல்ல,அவளது குறிப்பை அவள் உணரமாட்டாளா..!!

‘சமைக்க தெரியுமா என்று சோதிக்கிறார்களாம்’என்று எண்ணும் போது,புன்னகையும் வந்து ஒட்டிக்கொள்ள..

“சரிங்கத்தை”என்ற சொல்லோடு,அப்பாவை பார்க்க..

“நானும் வர்றேண்டா குட்டிம்மா..”என்று எழவும்,

“வேண்டாம்ப்பா.நான் பார்த்துக்கறேன்.நீங்க பேசிட்டு இருங்க”என்று சொல்ல,அவரும் இவர்களை தனியே விட்டு உள்ளே செல்வது நியாயமாக இருக்காது என்பதால்,அவரும் அங்கேயே அமர்ந்துவிட்டார்.

குமார் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக் கொடுத்து,”நீங்க சொன்ன ஹாஸ்பிட்டல்லையே செக் செய்து,அவங்க கொடுத்த ரிப்போர்ட்.பாருங்க”என்று கொடுக்கவும்,உடனே வாங்கிப் பார்த்தார்.

அவருக்கு மற்றதை விட மகளின் வாழ்க்கை மிகவும் முக்கியம்.சிறிதும் சறுக்கிவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தார்.

ரிப்போர்டில் எல்லாம் சரியாக இருந்ததை படித்தவர்,திருப்தியாக,”அவந்தி”என்று ஆரம்பிக்கும் முன்னே தடுத்த குமார்..

“எங்களுக்கு மருமகள் வந்தாலே போதும்.எந்த செக்அப்பும் தேவையில்லை.இப்போ சொல்லுங்க.கல்யாணத்தை எப்போ வைச்சுக்கலாம்”என்று வினவ,

அதே நேரம் அங்கு வந்த சாரதி,உடனிருந்த மனைவியை அறிமுகப்படுத்திவிட்டு,”ரொம்ப அவசரப்படறேளே..கொஞ்சம் நேரம் கொடுங்கோ”என்றார்.

“ரொம்பவே அவசரம் தான்.இன்னும் ஒரு பத்து நாள்ல நல்ல முகூர்த்தம் இருக்கு.அப்போவே செய்துடலாம்.நாங்க சொன்ன மாதிரி எக்ஸாம் முடியற வரை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்.இங்கே அவந்திகா இருக்கட்டும்”என்று குமார் சொல்ல,அவர்களது அவசரம் பாண்டியனுக்கும் புரியத்தான் செய்தது.

இன்னும் ஒருமாதத்தில் யஸ்வந்திற்கு பிறந்தநாள் வருகிறது.அதன் பின் திருமணத்திற்கு ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும்.அவ்வளவு பொறுமை யாருக்குமே இல்லை.

பாண்டியனும் சாரதியும் ஏற்கனவே பேசி வைத்திருந்ததால்,”சரி”என்று சொல்லிவிட்டார்கள்.

அதைவிட்டால் அவர்களுக்கும் அப்போதைக்கு வழி இருக்கவில்லை.நல்ல மாப்பிள்ளை! எந்த கெட்ட பழக்கமும் இல்லை! வசதியானவனும் கூட! வீட்டுப் பெரியவர்களின் குணமும் தங்கம்..

இப்படிப்பட்ட சம்மந்தம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான்,பெண்ணைப் பெற்ற அப்பா நினைப்பார்.அதற்கு பாண்டியனும் விதிவிலக்கல்ல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.