(Reading time: 4 - 7 minutes)

4. எனக்கு பிடித்தவை - பூக்கோலம் போடவா!

பூக்கோலம் போடவா!

வெகு நாளிற்கு பிறகு இந்த தொடரை தொடருகிறேன்...

பேசும் போது, எதேச்சையாக வேலை காரணமாக தான் நான் எழுதுவதில்லை என்று நம் அட்மினிடம் சொன்னதன் விளைவு தான் இந்த தொடர் அவசரமாக திரும்ப தொடங்கப் படுவதின் முக்கிய காரணம். கத்தியை காண்பித்து மிரட்டாத குறையாக மிரட்டி எழுத வைத்த அட்மின்க்கு நன்றிகள்!

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் எடுத்துக் கொண்டுள்ள கதை முத்துலட்சுமி ராகவன் எழுதிய பூக்கோலம் போடவா... எனக்கு பிடித்த பல கதைகளில் இதுவும் ஒன்று!

முன்பே படித்த கதை என்ற போதும் சமீபத்தில் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது தான் இந்த கதையை பற்றி நான் இங்கே எழுத காரணம்.

கதை:

பெற்றோரை இழந்து சகோதரனுடன் வாழும் தாரிணி, சகோதரன் மாசிலாமணி, அக்கா ஜானகி, தங்கை மாதவி என பல உறவினர்கள் இருந்தும் மனதளவில் அனாதையாக வாழ்கிறவள். திருமணமான அண்ணன், அக்கா, தங்கை மூவருக்கும் தாரிணியின் மனதை விட அவள் மாதம் கை நிறைய சம்பாதிக்கும் பணமே பெரிதாக படுகிறது. ஊருக்காக அவ்வப்போது பெண் பார்க்கும் படலம் நடத்தி விட்டு, ஜாதகம் சரி இல்லை, அப்படி இப்படி என நொண்டி சமாதானங்களை கூறி அவளின் திருமணத்தை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.

வேளாண்மை கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றும் அவளுக்கு ஆறுதலாக இருப்பது உடன் பணியாற்றும் தோழி மேனகா, அவள் கல்லூரி வர பயன்படுத்தும் வேனின் டிரைவர் விக்னேஷ் மற்றும் விஷ்ணு துர்கையம்மன் மட்டுமே.

விக்னேஷின் மீது மனதளவில் ஆர்வம் இருந்த போதும், பட்டும் படாமலும் நடந்துக் கொள்ளும் அவனின் நடவடிக்கைகள் அவளுக்கு அணை போடுகிறது...

ஆனால் தாரிணிக்கு தெரியாத விஷயமும் ஒன்று உண்டு, அது விக்னேஷிற்கு அவள் மீதிருக்கும் ‘சொல்லாத’ காதல்...

படிப்பில் தாரிணியை விட தான் பல படிகள் கீழே என மனதினுள் மருகும் விக்னேஷ் தான் அவளுக்கு ஏற்றவன் இல்லை என்று முடிவு செய்கிறான். அதனால் மனதில் உள்ள காதலை மறைத்து, அவனே அவளுக்கு நல்ல துணையை தேடி தருவது என முடிவு செய்கிறான்.

அதை பற்றி தாரிணியிடம் பேசவும் அவள் உடைந்து போகிறாள்...

சொல்லாத இந்த இருவரின் அன்பு என்ன ஆனது? தாரிணியின் உடன் பிறந்தோரை மீறி இவர்கள் இருவரும் இணைய முடியுமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

ந்த கதையில் நிறைய இடங்களில் எடுத்துரைக்கக் கூடிய நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்...

எனக்கு பிடித்த சில வரிகள் இதோ...

பதுங்குகிற காலத்தில் பதுங்கி பாயுற காலத்தில் பாஞ்சாத் தான் அதுக்கு பேர் புலி... பொம்பளைங்க புலிம்மா. எப்போ அடங்கனும், எப்போ வேலியை உடைக்கனும்னு பொம்பளைக்கு தெரியும்...

காதல் என்பது என்ன? மனதில் ஒருவர் மேல் உருவாகும் அதிக அளவு நேசம்? நேசித்தவரைத் துன்புறுத்துவது காதல் ஆகுமா? கல்யாணத்தில் முடிந்தால் தான் காதல் வெற்றி பெற்றதாகுமா? நேசித்தவரைக் காயப் படுத்தாமல் அவர்கள் நன்றாக வாழ்வதை தூர நின்று பார்த்தாலும் காதல் வெற்றி பெற்றதாகத் தான் ஆகும்.

வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டையும் கவனித்து விட்டு வேலைக்கு ஓட வேண்டும். சம்பாதிக்காத பெண்களுக்குக் கூட பேச்சுரிமை உண்டு. சம்பாதிக்கும் பெண்கள் வாய் திறந்து ஓர் கருத்தை சொல்லி விட முடியாது. ‘சம்பாதிக்கும் திமிரா?’ என்ற கேள்வியை எதிர் நோக்க வேண்டும்.

குடும்ப பாங்கான காதல் கதையை, மென்மையாக, ஆபாசமில்லாமல்  சொல்லியதற்கு கதாசிரியரை பாராட்டியே தீர வேண்டும்!

இந்த கதையை படிக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வித சிலிர்ப்பு தோன்றும்... தாரிணியின் வாழ்வில் மகிழ்ச்சி திரும்ப வேண்டும் என்று மனம் ஏங்கும்...

முதல் முறை என்றில்லாமல் எத்தனை முறை படித்தாலும் அதே சிலிர்ப்பும் எண்ணமும் தோன்றுவது தான் இந்த கதையின் தனி அம்சம்!

மீண்டும், வேறு ஒரு கதையுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்...

நன்றி!

நந்தினி

*Image is used for illustration purpose only! Chillzee.in doesn't claim any rights on this image.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.