(Reading time: 9 - 18 minutes)

வையத்து வாழ்வீர்கள் பாடலில் விரதமிருக்கும் முறையை விவரிக்கும் ஆண்டாள் , ஓங்கி உலகளந்த பாடலில் திருப்பாவை சொல்வதால் கிடைக்கும் பலன்களை விவரிக்கிறார்.. மழை, காற்று, மாதவி பந்தல் மேல் குயில் என்று இயற்கையோடு கூடிய நாம் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்து சொல்கிறார். மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய், மாமீர் அவளை எழுப்பீரோ என்று உறவுகளோடு ஒன்றிய வாழ்க்கை முறை நினைவு படுத்துகிறார்.

அதோடு இல்லாமல் திருமாலின் அவதாரங்களை விளக்கும் வரிகளும், அவரின் திருமேனி வர்ணனைகளுக்கும் குறைவு இல்லாமல் கொடுக்கிறார் ஆண்டாள். கோபியர்களோடு கண்ணன் வாழ்ந்த வாழ்கையை தாமும் வாழ விரும்புகிறார் ஆண்டாள்.

இந்த திருப்பாவை முப்பது பாடல்களை அவர் தன் ஒருத்திக்காக பாடாமல், தன் தோழிகளோடு இணைத்து பாடுகிறார். சாதாரண உலக இன்பம் கிடைக்கும் போதே நாம் மற்றவரை பார்த்து பொறமையும் போட்டியும் போடுகிறோம். ஆனால் பேரின்பமாகிய இறையருள் மற்றும் அவன் பாத சரணாரவிந்தம் கிடைக்கும் என்ற நிலையில் அதை தான் மட்டும் ஏற்றுக் கொள்ளமால் தன் தோழிகளையும் சேர்த்து இணைத்துக் கொள்வது ஆண்டாளின் சிறப்பு. இந்த காரணத்தினால்தான் அந்த அரங்கனுக்கு உகந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடபடுகிறதோ என்ற எண்ணம் எனக்கு.

திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களும் ஒவ்வொரு ராகத்தில் இசைக்கபடுகிறது. திருப்பாவையில் மற்றும் ஒரு சிறப்பம்சம் என்றால் அது கூட்டு பிரார்த்தனைக்கான பாடல்கள்.

இசை நமக்கு வருகிறதோ இல்லையோ, கூட்டத்தோடு நாம் சேர்ந்து பாடும் நமக்கும் அந்த அரங்கனின் அருள் கிடைக்க வருகிறது.

திருவாசகம் போல் ஒரு வாசகம் கிடையாது என்ற வாக்கிற்கு உரியவரான மாணிக்கவாசகரும் ஆண்டாளை பின்பற்றி சிவனுக்கு திருவெம்பாவை இயற்றியுள்ளார். அவையும் தேனோடு கலந்த தெள்ளமுது என்பது போல் இசையோடு கலந்த தமிழ் என்று கூறலாம். இதுவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சிவன் கோவில்களில் பாடபடுகிறது.

மேலும் வைகுண்ட ஏகாதசி , சிவனுக்கு உரியதான ஆருத்ரா தரிசனம் போன்ற இறைவன் திருவடி சேருவதற்கான விசேஷங்களும் மார்கழி மாதத்தில் தான் வருகிறது. இந்த இரண்டு பூஜைகளும் அதிகாலையில்தான் நடத்தபடுகிறது.

அடுத்தது மார்கழியில் நம் தமிழ் நாட்டில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சங்கீத sesaon நடைபெறுகிறது, நமது சங்கீத வித்வான்கள் இப்போது சென்னை மட்டும் அல்லாது பல முக்கிய நகரங்களில் கூட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதில் அத்தனை வித்வான்களும் தங்கள் கற்றதை வெளிபடுத்துவதோடு , சில புது முயற்சிகளும் இசையில் செய்கிறார்கள்.

சங்கீதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் டிசம்பர் சீசன் வருடத்தில் முக்கிய நாட்களாக கருதுகிறர்கள். வித்வான்கள் மட்டும் அல்ல இசை பிரியர்களும் கூட கச்சேரிகளுக்கு செல்வதை பெருமையாக எண்ணுகிறார்கள். இன்னும் சொல்லபோனால் சில முக்கியமானவர்களின் கச்சேரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து கூட இந்த டிசம்பர் sesaon புக் செய்து வந்து விட்டு செல்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் மார்கழி மாதத்தை இசை மாதமாகவும் சொல்லலாம்.

மற்றும் ஒரு மார்கழி சிறப்பு என்றால் அது வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் இரண்டும் சொல்லலாம்..மற்ற நாட்களில் பொங்கல் செய்தாலும் மார்கழி மாததில் செய்வதற்கு தனி சிறப்பு இருக்கிறது என்றுதான் எண்ணுகிறேன். அதிகாலையில் எழுந்து வருகிறார்கள் என்பாதால் அவர்களின் பசிக்கும் , அதே சமயம் உடலை குளிர் நிலையிலிருந்து இதமான நிலைக்கு மாற்றும் விதமாக புரத சத்து நிறைந்த பாசி பருப்பை நெய்யோடு கலந்து பொங்கலாக தருகிறார்கள். தற்போது நாம் சென்று கொண்டு இருக்கிற balanced diet என்ற முறையை அன்றே கையாண்டார்கள் நம் முன்னோர்கள்.

நான் சிறு வயதிலேயே திருப்பாவை , திருவெம்பாவை கற்றுக் கொண்டாலும், அப்போது பக்தியின் அடிப்படையில் கற்றுக் கொண்டது, பிறகு அதில் எடுத்து சொல்லபட்டிருக்கும் கருத்துக்களும், அதோடு கையாண்ட தமிழ் வார்த்தைகளும் எனக்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்.

நாங்கள் திருப்பாவை கிளாஸ் என்றே சென்றிருக்கிறோம். அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து ஏழு மணி வரை இருந்து விட்டு , பிறகு ஸ்கூல் சென்று இருக்கிறோம். நான் திருப்பாவை கற்றுக்கொண்ட இடத்தில் அந்த மார்கழி மாத முடிவில் போகியன்று போட்டி வைத்து தவறில்லாமல் சொன்னவர்க்கு பரிசு கொடுப்பதோடு, அன்று இரவு சிறு கலை நிகழ்ச்சியும் நடத்தி மகிழ்ந்து இருக்கிறோம். இப்போதும் சில இடங்களில் திருப்பாவை போட்டி நடத்துகிறார்கள் என்றாலும் அது அந்த ஒருநாள் ஸ்கூல் எக்ஸாம் போல் சென்று விட்டு வருகிறார்கள்.

திருப்பாவை ஒவ்வொரு பாடல்களுக்கும் தனித்தனியாக விளக்கவுரை ஒரு மணி நேரம் சொல்லலாம் என்பதால் அதை நான் இங்கே பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.

அதற்கு பதில் எனக்கு மிகவும் பிடித்தமான கிருஷ்ண கானம் என்ற ஆல்பம் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.