(Reading time: 3 - 5 minutes)

இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்

suicide

டந்த மாதம் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.மொட்டை மாடியில் துணி உலர்த்தச் சென்றிருந்தபோது அடுத்த வீட்டு மொட்டைமாடியில் ஓர் இளம் தாய்.அவரும் துணிகளைக் காயப் போட்டுக்கொண்டிருந்தார்.அவரின் பக்கத்தில் ஐந்து வயதிருக்கும் பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டு நிற்க அந்த இளம் தாய் அப் பெண்குழந்தையை அது என்ன தவறு செய்ததோ கண்டித்துக்கொண்டிருந்தார்.அழுது கொண்டிருந்த அந்தக்குழந்தை சட்டென அழுகையை நிறுத்திவிட்டு..

மம்மி..நீ இப்பிடி என்ன திட்டிண்டே இருந்தா நா படிச்சி பெரியவளாகி நெறைய சம்பாதிக்கறச்சே ஒனக்கு குடுக்க மாட்டேன்.எல்லா பணத்தையும் பேங்குலயே போட்டுக்குவேன். நீ கெஞ்சினாலும் தரமாட்டேன்.டேடியையும் ஒனக்கு பணம் கொடுக்காதேன்னு சொல்லிடுவேன்.அப்பறம் நீ எப்பிடி சாப்பிடுவ?ஒனக்கு யாரு சாப்பாடு போடுவாங்க? என்று கையை ஆட்டி ஆட்டி பேசியதைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருந்தது.

நீ பணம் கொடுக்காட்டி போடி..நீயும் தரவேண்டாம்..ஒண்டாடியும் தரவேண்டாம்.. நான் எப்பிடியாவது போறேன்..பிச்சை எடுத்து பொழைப்பேன்..யார்வீட்டுலயாவது பாத்திரம் தேய்த்து பொழைப்பேன் என்றார் அந்தத் தாய் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.

மம்மி நிஜமாகவே தன்னை லட்சியம் செய்ய வில்லை என்று நினைத்ததோ என்னவோ அப்பெண் குழந்தைஎன்ன செய்தது தெரியுமா? நானும் எதிபார்க்கவில்லை அந்த தாயும் எதிர்பார்த்திருக்க மாட்டார். குடு குடுவென மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவர் அருகே ஓடியது நான் செத்துப் போறேன் போ..என்று கத்திய படியே கைப்பிடிச் சுவற்றில் அழகுக்காக வைக்கப்படும் சின்னச் சின்னத்தூண்களின் இடைவெளியில் கால் வைத்து ஏறி சுவற்றின் மேல் கால்வைத்து கீழே குதிக்க முயன்றது.

ஐயோ..குட்டீ..கண்ணம்மா..என்று கத்தியபடியே கைகளில் இருந்த துணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு குழந்தையை நோக்கி ஓடி வாரி எடுத்து தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு கதறிய அந்தக் காட்சியைக்கண்டு பிரமை பிடித்துப்போய் நின்றேன் நான்.

என்ன கொடுமை இது?..ஒரு ஐந்து வயது குழந்தைக்கு தன்னை யாராவது திட்டினால்

சாக வேண்டும் என யார் சொல்லித் தந்தது? குழந்தைகளிடம் வளரும் இந்த சகிப்புத்தன்மை இன்மையால்தான் தற்போது பள்ளிகளில் ஆசிரியர் திட்டினார் என்றும் அடித்தார் என்றும் அர்த்தமற்ற காரணுங்களுக்காக நூராண்டு வாழவேண்டிய பல சாதனைகள் புரிய வேண்டிய  மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களோ? எங்கே போகிறது குழந்தைகள் உலகம்? இது யார் தவறு?

அடுத்தது இன்னொரு உண்மை நிகழ்வோடு..நன்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.