(Reading time: 1 - 2 minutes)

 யார் நீ? - புவனேஸ்வரி 

Yaar

என் எண்ணங்களுக்கு ஏற்ப

வளைந்து கொடுத்து

கிறங்க வைக்கிறாய்,

ஆனாலும் நீ பெண்ணில்லை!

 

வோரோடு இழுத்து

மார்போடு சாய்த்து

மயங்க வைக்கிறாய்

ஆனாலும் நீ ஆணில்லை !

 

என்னை தேட வைத்து

ஓட வைத்து, சித்தம் கலங்க வைத்து

நித்தமும் வெல்ல பார்க்கிறாய்

 ஆனாலும் நீ என் எதிரியல்ல!

 

கண்ணீர் துடைத்து, நிமிர வைத்து

தோள் கொடுத்து,

தாலாட்டு பாடி போகிறாய்

ஆனாலும் நீ என் நண்பனல்ல!

 

யார் நீ?

 

மாற்றான் வீட்டு மல்லிகையா?

என் பாட்டன் மணந்த பத்தினியா?

ரத்தத்தை பாலாக்கிய அன்னையா?

துன்பத்தை பாழாக்கிய தந்தையா?

 

ரகசியமாய் முத்தமிட்ட காதலியா?

வெட்கத்தை உணர்த்திய காதலனா?

உரிமையுடன் கைப்பிடித்த துணையா?

மரபணுவை பற்றி கொண்ட வாரிசா?

 

இல்லை,

உயிர் கேட்கும் தோழன் நீ !

உறக்கம் பறித்த எதிரி நீ !

கடன் கொடுத்த வள்ளல் நீ !

அதை வட்டியுடன் வசூலிக்க தெரிந்த சகுனி நீ!

என் இரவுகளை திருடிய திருடன் நீ!

என் அறியாமையே கொன்ற கயவன் நீ!

என் துயரங்களை விரட்ட துணிந்த வீரன் நீ!

நான் விரும்பி அழைத்துக் கொண்ட ஜென்ம சனி நீ!

 

அன்பே ஆருயிரே

இன்பமே ஈரமே

உயிரே ஊக்கமே

என்னுயிரே ஏகாந்தமே

ஜம்பூதமே

ஒற்றுமையே, ஓவியமே, என் நோய் தீர்த்த

ஔடதமே

நீயே,

எனை நிதமும் ஆழும்

தமிழாவாய்..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.