(Reading time: 2 - 3 minutes)

அஸ்தமன இன்பம் - ஜெனிட்டா

(சூரியனையும் சந்திரனையும் கற்பனைக் காதலன் காதலியாகக் கண்டு இயற்றிய ஒரு கவிக்காவியம்)

கதிரவன் காணா காலை

கவரவும் இல்லை கயல் விழிகளை!

நிலச் சாமந்திகள் சாய இதழ்களின் மறுப்பு

தேனூறும் வண்டுகளின் விருந்துக்கு.

 

பனிப்படரும் பசுந்தளிர் பரிகசிக்கும்

பரிசல் போட பால்கிரணங்கள் மறந்தால்!

காலங்களின் ஆதவன் அஸ்தமன நீண்ட மவுனம்....

கார்குழல் மேகத்தில் நிலவின் சோகம். !

 

“நீ தீண்டா வானம் என்னையும் தீண்டா!

உன் கதிர் படா என் மேனி

வெளிப்படா ஒளிச்சீலையில்! ”

காதல் நிலவின் ஏக்கம்..ஏக்கப் பெருமூச்சாய்..!

 

உஷ்ணத்தின் சிதறல்கள்... செங்கதிர்க்காரனைத் தாக்க...

காலைச் சுடரென சிலையானான்

வான தேவியின் வெளிர் நில தேகத்தில்.!

அவன் காதல் கதிர்கள் ஈர்க்க

நிலவும் நிலையானாள் இரவுப்பந்தலில்.

 

ஆதிக்கச் சூரியனே.....! மறந்தும் மயங்கிவிடாதே.

துயில் களைந்து இரவுத் துகிலுரி.

பகலவன் காண பாய்மரங்கள்

கரை சேரும் நேரமிது!

 

மோகத்தை மறைத்து சோகத்தில் தனித்த

குலப்பெண்டிர் குத்துக்கால் நீட்டி காத்திருப்பு

கரைதனில் கொண்டவனுக்காய்..!

 

கிழக்கே உதித்தவனின் உதிர்பூக்கள்

ஆழித்தாயின் வயிற்றில் படர

அலையினில் மிதக்கும் படகினில்

கணவனைக் கண்டு இன்புறும் இல்லாள்கள்.

 

இணைந்தவனில் பிணையப்போகும்

பரவசத்தில் பிறைமுகம்!

காதலில் காத்திருப்பு கள்வனுக்குக்கூட

சுகம்தான் உலகினில்!.

 

அலைகள் ஆட்டத்தில் ஆர்ப்பரிக்க..

பூமி மாந்தர் மகிழ்வினைக் கண்டு..

ஆதவன் ஆராய்ந்தான் அமுதூறும்

சந்திர மகள் முகத்தை.

வெட்கத்தால் சிவந்து நாண விலகிக் கொண்டாள்.

 

அவள் மீண்டும் வருவாளென

ஜாமத்தின் வரவை நோக்கினான்..

அஸ்தமனத்தின் இன்பம் கண்டு

விடியல் தோறும் அஸ்தமிக்க

ஆசை கொண்டான் ஆதவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.