பிரியாவிடை… - மலர்மதி
எண்ணம் செயல்
பார்வை நோக்கம்
அனைத்திலும் வேறுபாடு கொண்டாய்
உண்ணும் உணவிலும்
ஓடும் இரத்தத்தின்
வகையிலும் வேறுபாடு கொண்டாய்
பேசும் மொழி
ஏற்றுக்கொண்ட மதம்
சார்ந்திருக்கும் சாதி என
பலவாறு வேறுபாடு கொண்டாய்
வெவ்வேறு பெண்ணின்
கருவறையில் உதித்தாலும்
அகிலத்தோர் அனைவரும்
ஓர் உயிரிலிருந்து தோன்றியோர்
என்று நிரூபித்த நிறைவுடன்…
தம்மில் புதையுண்ட மனிதத்தை
வெளிக்கொணர்ந்த வெற்றிக் களிப்புடன்…
எனது சில நண்பர்களையும்
உடன் அழைத்துக் கொண்டு...
வாழ்வில் தோன்றி மறைந்த
சோக மின்னல்களை
இனிவரும் சந்தோஷ மின்னல்கள்
மாற்றியமைக்கும் என்ற
நம்பிக்கையுடனும் வாழ்த்துகளுடனும்
அனைவரையும் விட்டுப்பிரிகின்றேன்.
இப்படிக்கு
பல மாற்றங்களைச் செய்த
2015
{kunena_discuss:779}