(Reading time: 2 - 3 minutes)

கடனாக கல்வி வேண்டும்  - சிந்தியா 

Child labour

ஐயிரண்டு வயதெமக்கு ஏனோ

தாயென்று அழைத்திடும் சொல்லறிவோம்

கையால் எழுதிடவோர் எழுத்தறியோம்

பிறரருண்ணும் இலை எடுத்தோம்

காசுள்ளோர் வாழ்ந்திருக்க எங்கள்

கையடங்கா கல்லெடுத்துக் காயங்கண்டோம்

ஒளி வந்தால் இருளழியும்

கூற்றிங்கே பொய்யென் றுணர்ந்தோம்

தீபாவளி நன்நாளில் ஒளியேற்றும்

தீப்பெட்டிகள் செய்தெங்கள் உள்ளங்கை

சூடுபட்டு ஊதிஊதி உழலுகின்றோம்

 

நீராடி தலைசீவி பையெடுத்து

பள்ளிச் செல்லும் பருவங்கொண்டும்

ஆடையின்றி அன்றுணவின் வழிதேடி

நாளை மலரும் வாழ்வென்று

சாலைகளில் பூக்கள் விற்றோம்

புத்தகத்தின் வாசத்திற்காய் ஏங்கிநின்றோம்

நாடுயரும் செய்தி சொல்லும்

நாளிதழ்கள் வீசிவீசி எங்கள்

வீடுயர நாள்மறந்து ஓடுகின்றோம்

பாடங்கள் படிக்காமல் நாங்கள்

சுவரொட்டிகள் தூக்கித் திரிந்தே

உயிர்க்கூட சுமையாக உடல்நொந்தோம்

 

வாரமெல்லாம் வாழ்வே வேடிக்கையாய்

பாறைகள் உடைத்து புவிமீதினில்

பாரங்கள் ஆனோம்-பிள்ளைகள்

நாங்களென்ற பொருள் தொலைத்து

இல்லாதோர் என்ற புதுப்பெயர்கொண்டோம் 

 

உடுத்திக்கொள்ள நல்லுடை கேளோம்

படுத்துறங்க பட்டுமெத்தை வேண்டோம்

சுவைத்து கண்சிரிக்க உணவதுவும்

நாங்கள் என்றும் கேளோம்

விதி விதித்த வழித்தடம்

துடைத்து விண்ணேறி சுடர்விட

வீணை தனை ஏந்தியவள்

வீடுவர வேண்டு கின்றோம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.