(Reading time: 11 - 21 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

Flexi Classics தொடர்கதை - வேருக்கு நீர் - 09 - ராஜம் கிருஷ்ணன்

  

ழை ஆவேசம் வந்தாற் போல் கொட்டித் தீர்க்கிறது. நவராத்திரிக் கோலாகலங்களிடையே, காந்தி நூற்றாண்டு விழாக்களும், அரசியல் சண்டைக் கூட்டங்களுங்கூட அந்த மழையில் சிக்கித் தவிக்கின்றன. நீருவின் கல்யாண முகூர்த்தம் அக்டோபருக்குத் தாவி உறுதிப் படுகிறது. வீட்டில் அத்தைகளும், மாமன் மாமிகளும் வந்து போகும் கூட்டம். யமுனா ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் நாட்களைக் கடத்துகிறாள்.

   

"பொறுமை... உனக்குப் பொறுமை வேண்டும் மகளே!" என்று மட்டும் எழுதிவிட்டு வேடிக்கை பார்க்கும் அம்மாவனிடம் குழந்தையைப் போல் கோபம் கொள்கிறாள்.

   

"யமு? என் ஃபிரன்ட்ஸெல்லாம் உன்னோடு காந்தி ரயிலைப் பார்க்க வரணும்னு ஆசைப்படறாளே. நீ எங்களுக்கெல்லாம் மனுகாந்தியை இன்ட்ரட்யூஸ் பண்றியா?"

   

யமுனா வழக்கம் போல் சிரிக்கவில்லை.

   

"அங்கே உங்களுக்கு என்ன இருக்கிறது?"

   

"அந்தப் பழைய மூக்குக் கண்ணாடி, கடியாரம், பாதக் குறடுகள் இதெல்லாவற்றையும் பார்ப்பதற்கு இந்த மழையில் க்யூ வேறு நிற்க வேண்டும்; வேற வேலையில்லை!"

   

"பின் இந்த ரயிலுக்குப் பள்ளிக்கூடங்களிலிருந்து வாண்டுகளெல்லாம் கூடப் போறாங்களே?" என்று வியந்து கேட்கிறாள் சின்னம்மா.

   

"பிழைப்பில்லாமல் போகிறார்கள். நீ என்னமோ ஹங்கேரியன் லேஸ் வேணுன்னியே? அதற்காகக் கடைகளெல்லாம் போய்த் தேடினாலும் பலன் உண்டு. அந்த வற்றல் காய்ச்சி அம்மாவைக் கண்டு உனக்கு என்ன ஆக வேணும்? நீ தண்டத்துக்குக் கதர்ப் புடவையை வாங்க வேண்டி இருக்கும். ஸ்கிரீனுக்குக் கூட ஆகாது" என்று எரிச்சலுடன் மறுமொழி கூறுகிறாள் யமுனா.

   

"சபாஷ் யமு; இப்படிக் கையைக் கொடு. உனக்கு என் கல்யாணத்துக்கு ஸ்பெஷலா இரண்டு பட்டுப் புடவை. புது டிசைனில்..." என்று ஆரவாரிக்கிறாள் நீரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.