(Reading time: 4 - 8 minutes)

கருத்துக் கதைகள் – 15. கூடா நட்பு. .  கேடாய் முடியும்... - தங்கமணி சுவாமினாதன்

Crocodile and Monkey

ந்த நதிக்கரை ஓரம் இருந்த மரம் ஒன்றில் குரங்கு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த நதியில் இருந்த முதலையோடு அது மிகவும் நட்பாய் இருந்தது. இரண்டும் இணை பிரியா நண்பர்களாய் இருந்தன. குரங்கு தினமும் விதவிதமான பழங்களைப் பறித்துச் சென்று முதலைக்குக் கொடுக்கும். முதலையும்  அவற்றைத் தானும் உண்டு தன் மனைவிக்கும் கொண்டுபோய்க் கொடுக்கும்.

குரங்கு அடிக்கடி முதலையின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு நதி நீரில் வெகு தூரம் சென்று ஜாலியாய்ச் சுற்றி விட்டு வரும்.

ரு நாள் முதலையின் மனைவிமுதலை தன் கணவனாகிய (குரங்கின் தோழன்) முதலையிடம் ஒன்றை விரும்பிக் கேட்டது. அதை கேட்ட ஆண் முதலைக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன இது இப்படிக் கேட்கிறாய் என்றது மனைவியிடம்.

அதற்கு மனைவிமுதலை நான் விரும்பியதைக் கொண்டு வந்து தரவில்லை என்றால் இனி உங்களோடு நான் இருக்க மாட்டேன். நான் போய் விடுவேன் என்றது.

ஐயோ. .  குரங்கு என் நண்பன். . நீ இதுபோல் கேட்காதே என்று கெஞ்சியது முதலை.

மனைவி முதலை கோபித்துக்கொண்டது. கணவன் முதலையோடு பேசாமல் இருந்தது.

ஒருவாரம் ஆகிவிட்டது. ஆண் முதலைக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. வேறு வழியின்றி மனைவி முதலைக் கேட்டதைச் செய்ய தீர்மானித்தது.

அப்படி என்னதான் கேட்டது பெண் முதலை?

அந்தப் பெண் முதலை ஆண்முதலையிடம் நீங்கள் தினம் தினம் உங்கள் நண்பன் கொடுத்தாரென்று சுவை மிக்கப் பழங்கள் கொண்டு தருகிறீர்கள். அப்பப்பா. . அப்பழங்கள்தான் எவ்வளவு சுவையாய் இனிப்பாய் இருக்கின்றன. . அப்பழங்களே இவ்வளவு சுவையாய் இனிப்பாய் இருந்தால் பிறந்ததிலிருந்து பழங்களைத் தின்று வளர்ந்த குரங்கின் ஈரல் எவ்வளவு இனிப்பாய் சுவையாய் இருக்கும்?எனக்கு குரங்கின் சுவைமிக்க ஈரலைத் தின்ன ஆசையாய் இருக்கிறது. எனவே உங்கள் நண்பனாகிய குரங்கின் ஈரலை எப்படியாவது கொண்டுவாருங்கள் நான் உண்ண என்றது. . . . இது எப்பிடி இருக்கு?

ஆண் முதலைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியின்றி குரங்கைப் பார்க்கக் கிளம்பியது.

நதிக்கரையில் குரங்கு முதலை நண்பனுக்குக் கொடுக்க பழங்களோடு காத்திருந்தது.

முதலை நடிக்கத் தீர்மானித்தது. ரொம்ப விசனப் படுவது போல் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டது.

நண்பா. . ஏன் சோகமாக உள்ளாய்?கேட்டது குரங்கு முதலையைப் பார்த்து.

என் அருமைக் குரங்கு நண்பா. . என் வீட்டில் இன்று விருந்தொன்று நடக்க உள்ளது.

என் மனைவி உன்னையும் அழைத்து வரவேண்டுமென சொல்கிறாள். ஆனால் நீயோ சைவ உணவைச் சாப்பிடுபவன். நாங்கள் அப்படி இல்லை.  அங்கு உனக்கு என்ன உணவைக் கொடுப்பேன்?அதுவே எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது என்றது மேலும் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு.

முதலை நண்பன் வருத்தப் படுவதைக் கண்டு மனம் வருதிய குரங்கு. . என் அருமை நண்பா வருந்தாதே. . . . நீஅன்போடு அழைத்ததே போதும். . உண்ண ஏதும் வேண்டாம். . நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது.

முதலைக்கு குரங்கை ஏமாற்றியதில் ஏக குஷி. நதியின் நடுவிற்கு வந்தாயிற்று.

திடீரென கெக்கெக்கே. . என்று சிரித்தது முதலை.

ஏன் நண்பா சிரிக்கிறாய் என்று கேட்டது குரங்கு.

பாவம். .  நீ. . நான் என் வீட்டில் விருந்தென்று சொல்லி அழைத்ததை உண்மையென்று நம்பிவிட்டாய். என் மனைவி உன் ஈரல் மிகவும் சுவையாகவும் இனிப்பாகவும் இருக்கும் எனச் சொல்லி அதனை உண்ண விரும்புவதால் உன் உடலிலிருந்து ஈரலை எடுக்கவே உனை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது.

தூக்கிவாரிப் போட்டது குரங்கிற்கு. முதலையின் கெட்ட எண்ணம் புரிந்தது. இதனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசித்தது. தப்பிக்க தாவி தண்ணீரில் குதித்தால் நீந்தத் தெரியாததால் கரை சேர முடியாது. என்னசெய்யலாம் என யோசித்த போது யோசனை ஒன்று தோன்றியது.

ஹே. . . எனது அருமை நண்பா. . . என்ன இப்போது போய் என் ஈரல் வேண்டும் என சொல்கிறாய்?முன்னமே சொல்லியிருக்கலாமல்லவா?கரையிலிருந்து கிளம்பும் போதே சொல்லியிருக்கலாமே?என் ஈரலை வீட்டில் கழற்றியல்லவா வைத்திருக்கிறேன். அப்போதே சொல்லியிருந்தால் அதனை எடுத்து வந்திருப்பேனல்லவா என்றது. சரி போகட்டும் இப்போதும் ஒன்றும் மோசமில்லை.

கரைக்குத் திரும்பு. வீட்டிற்குப் போய் ஈரலை கொண்டுவருகிறேன் என்றது சமயோசிதமாய்.

உண்மையென்று நம்பிய முதலை மீண்டும் கரைக்குத் திரும்பியது. முதலையின் முதுகிலிருந்து கரைக்குத் தாவிக் குதித்த குரங்கு அடப்பாவி நண்பனென்று நம்பினேன் உன்னை.  ஆனால் நீயோ உன் மனைவிக்காக என்னைக் கொல்லவும் துணிந்தாய். உன் முகத்தில் இனி நான் விழிக்கமாட்டேன். நீ ஒரு துரோகி. . ஈரலை உடலை விட்டுக் கழற்றி வைப்பது சாத்தியமா?நீ என்னை ஏமாற்ற நினைத்தாய். .

நான் உன்னை ஏமாற்றி விட்டேன். . . போ. . போ. . என்று சொல்லிவிட்டு மரத்தில் தாவி ஏறி அமர்ந்து கொண்டது. முதலை மனைவி எப்படி நடந்து கொள்வாளோ என்ற பயத்தோடு திரும்பிச் சென்றது. . . நல்லவேளை இக்கதையில் குரங்கு தப்பியது.  என்றாலும் கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உறுதி.

 

கதை சொல்லும் கருத்து:

கூடா நட்பு கேடாய் முடியும்.

இந்தக் கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். . . ஆரம்பப் பள்ளியில் தமிழ்ப் பாட புத்தகத்தில்  வந்தது.

Story # 14 - Moondru kuduvaigal

Story # 16 - Nandri marappathu nandrandru

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.