(Reading time: 12 - 24 minutes)

ஒரே ஒரு ஊரிலே... - ஜான்சி

ழகூர் என்கின்ற ஊரில் ஒரு அன்பான குடும்பம் வசித்து வந்ததாம். அந்த குடும்பத்தில் லக்ஷ்மி அம்மா என்கிற மிக அன்பான அம்மாவும், அவங்களுக்கு அமர், சமர் என்று ரெண்டு மகன்களும் இருந்தார்களாம். மகன்கள் ரெண்டு பேருக்கும் வேலைக்கு போயிட்டு தினமும்  திரும்பி வர மிகவும் நேரமாகிடுமாம்.லக்ஷ்மி அம்மா தனியே இருப்பதால் மகன்கள் திரும்பி வர நேரமாகி விட்டால் மிகவும் கவலைப் படுவார்களாம்.அதனால் "அம்மா நாங்க கவனமாக வந்திடுவோம் நீங்கள் கவலைப் படாமல் இருங்கள்" என்று ரெண்டு பேரும் சொல்வார்களாம்,வீட்டிலும் அம்மாவுக்கு உதவியாக பல வேலைகளை செய்து கொடுப்பார்களாம்.

ஒரு முறை அமரும், சமரும் காய்கறி கடைக்கு சென்றுக் கொண்டிருக்கையில் பேசிக் கொண்டிருந்தனர்.

அமர்:  தம்பி.. அம்மாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது, வீட்டில் யாருமில்லாமல், பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் மிகவும் கஷ்டப் படுகின்றார்கள். நாமும் தினமும் வேலையிலிருந்து திரும்ப வர வெகு நேரமாகி விடுகின்றது........ம்ம்

Thakkaliசமர்:  ஆமாம் அண்ணா .... என்ன செய்வது என்றே புரியவில்லை ஒருவேளை பகல் நேரத்தில் அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் கூட துணைக்கு யாருமேயில்லை...அதுதான் எனக்கு கவலையாக இருக்கின்றது.

அமர்:  நமக்கு சொந்தத்தில் தம்பி யாராவது இருந்தாலும் கூட அம்மாவுக்கு துணையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளலாம், அப்படியும் யாரும் இல்லை..........சரி என்ன செய்வது என்று யோசிக்கலாம்..... என்று பேசியவாறு சுற்றும் முற்றும் பார்த்தவாறு புத்தம் புதிய  நல்ல காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது தக்காளி வியாபாரியிடம் சென்றவர்கள் அவர் இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒன்றும் புரியாமல்....." அண்ணே 1 கிலோ தக்காளி குடுங்க".. என்று கூறினார்கள்.அவரோ பதில் கொடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். அதே நேரம் இன்னொரு கீச்சுக் குரல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள், யாரோ தொண தொணத்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றிற்று.

தக்காளிக்காரரை உலுக்கிய பின்னால் தான் அவருக்கு கடைக்கு ஆள் வந்திருப்பதே புரிந்தது. உடனே அவர்கள் கேட்ட தக்காளியை  அவர் நிறுத்து கொடுத்தார், ஆனால் அந்த கீச்சுக் குரல் இன்னும் கேட்டவாறு இருந்தது. இவர்களுக்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தது, அதனால் அந்த வியாபாரி மறுபடி தன் காதை மூடிக் கொள்ளும் முன்பாக அவரை தடுத்து விபரம் கேட்டனர் அவர் சொன்னார்........அதை ஏன்ப்பா கேட்கறீங்க........ இதோ இங்க பாருங்க என்று தன் அருகிலிருந்த ஒரு தக்காளி கூடையை திறந்து காண்பித்தார். அதன் உள்ளே ஒரு நன்கு சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய தக்காளிப் பழம் இருந்தது, அதற்கு வாய், கண்கள், காதுகள்,கை, கால்களும் இருந்தன, ஆனால் வாய் மட்டும் மூடாமல் ஏதோ பேசிக் கொண்டு இருந்தது.....

"ஏன்னே, நான் கேட்டதுக்கு ஏன் இன்னும் பதில் சொல்லல............சொல்லுங்கண்ணே, சொல்லுங்கண்ணே......" என்று கீச்சுக் குரலில் ஏதோ கேட்டவாறு இருந்தது.

இவர்களுக்கோ அதைப் பார்த்து வியப்பாக இருந்தது, ஒருவரை ஒருவர் பார்த்து ................இதப் பாருடா............ பேசுகின்ற தக்காளி.. என்ன ஆச்சரியமாக இருக்கு!!! 

என்று கூறிக் கொண்டார்கள்.

"ஆமா, ஆமா அதெல்லாம் முதல் முதல்ல எனக்கும் இப்படித்தான் தோணுச்சு, இப்போதான புரியுது" என்று சலித்துக் கொண்டார் வியாபாரி.

"அண்ணே இந்த தக்காளி பற்றி சொல்லுங்கண்ணே நாங்க தெரிஞ்சுக் கொள்கின்றோம்" என்று கேட்டுக் கொண்டார்கள்.அவரும் சொல்லத் தொடங்கினார். நான் சென்ற வாரம் ஒரு விவசாயிடம் தக்காளி வாங்க சென்றுக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் இந்த தக்காளியை பார்த்தேன், இது அங்கே வயலில நின்றுக் கொண்டு இருந்தது, எனக்கும் முதலில் இதைப் பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இந்த தக்காளி என்னிடம் ரொம்ப பரிதாபமாக,

"அண்ணே .... இங்க தனியா இருக்கிறதுக்கு பயமா இருக்கு, என்னையும் தயவு செய்து  உங்களோட கூட்டிக்கிட்டு போறீங்களா? நான் உங்களுக்கு ரொம்ப உதவியா இருப்பேன்ன்னு" கேட்டது, சரின்னு கூட்டிக் கொண்டு வந்தேன்......ம்ஹீம்......ம்

"அப்புறம் என்ன ஆச்சி? இந்த தக்காளி உங்களுக்கு உதவி செய்யலையா?!! அதான் உங்களுக்கு கோபமா?!!" என்று கேட்கவும்," அதெல்லாம் ஒன்னுமில்லை, இத்தனை நாளா நான் கடைக்கு வரும் போதும் போகும் போதும் இந்த தக்காளி தான் என் கூடையை தூக்கிக் கொண்டு வருது"..........

'என்ன இந்த தக்காளி இத்தனை பெரிய கூடையையா தினமும் தூக்கிக் கொண்டு வருது.?.......என்னடா இது ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமா இருக்குது....சரி சரி மேலச் சொல்லுங்க..... எதுக்காக இந்த தக்காளி மேல இவ்வளவு கோபம் உங்களுக்கு".

பின்னே கோபப் படாம கொஞ்சவா சொல்றீங்க..எப்ப பாரு தொண தொணன்னு கேள்வி கேட்டுட்டே இருந்தா கோபம் வராதா, இப்ப கூட அரை மணி நேரமா தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டு நச்சரிச்சுக் கிட்டு இருக்குது. நான் வியாபாரத்தை பார்க்கவா இல்லை இதற்கு பதில் சொல்லிட்டு இருக்கவா.........ச்சே........பேசாம இதை யார் கிட்டயாவது கொடுத்திடலாமான்னு நினைக்கிறேன்.....ஒரு வாரமா இந்த கீச்சுக் குரல் கேட்டு, கேட்டு  என் காது ஜவ்வு பிய்யற மாதிரி ஆகிடுச்சு...

இதைக்கேட்ட அமரும் சமரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், தனியே சென்று பேசிக் கொண்டு வந்தவர்கள் வியாபாரியிடம், "அண்ணே உங்களுக்கு வேண்டான்னா நாங்க வேணும்னா இந்த தக்காளியை எங்க வீட்டுக்கு கொண்டு போகட்டுமா?" என்று கேட்டனர், விட்டது தொல்லை என அவரும்  அந்த தக்காளியை அவர்கள் கையில் கொடுத்து விட்டவர்...........இன்னொரு விசயம் சொல்றேன் தம்பி கேட்டுக் கொள்ளுங்க.......ஏன்னா சொல்லாம விட மனசு கேட்கல அதான் சொல்றேன்...... இந்த தக்காளிக்கு கோபம் மட்டும் வராமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்க 

அட இந்த தக்காளிக்கு கோபம் கூட வருமா என்ன?!!!!!!!!!!!

அப்படில்லாம் குறைச்சு மதிப்பிடாதீங்க.....ஏன்னா ஒரு தடவை நான் அதட்டினதால கோபப்பட்டு என் வீட்டில இருந்த அத்தனை சாப்பாட்டையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுச்சு........

அப்புறம்.....என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த சமரிடம்

அப்புறம் என்ன நல்ல குண்டோதரன் மாதிரி பெருசா ஆகிடுச்சி அதைப் பார்த்து எனக்கே பயமாகிடுச்சி.........இது என்ன மந்திரவாதியான்னு..........

சட்டென்று இடைமறித்த தக்காளி தன் கீச்சுக் குரலில், 'நான் ஒன்னும் மந்திரவாதி இல்லை, எனக்கு கோபம் வரும் போது ரொம்ப பசிக்கும் , சாப்பிட்டவுடனே எவ்வளவு சாப்பிட்டேனோ அவ்வளவு பெரிசாகிடுவேன், பிறகு பழைய மாதிரி ஆகிடுவேன்.....வாங்கண்ணா போகலாம் இவருக்கு என்னை பிடிக்கலை அதான் இப்படி குறை சொல்றார்".....என்று சொல்லி அமரின் தோளில் ஏறி வசதியாக அமர்ந்துக் கொண்டது.

அவர்களும் புறப்பட்டார்கள்....

நீங்க எங்க இருக்கிறீங்க அண்ணே...

உங்க வீட்டில யார் யாரெல்லாம் இருக்கிறாங்க......

உங்க பேர் என்ன?

உங்க கூட வர்றாங்களே இவங்க பேர் என்ன?

உங்க வீடு இங்கிருந்து ரொம்ப தொலைவா?

தினமும் காய்கறி வாங்க நீங்க தான் வருவீங்களா?

உங்க அம்மா கடைக்கு வர மாட்டாங்களா?

அம்மா பேரு என்ன?.............................................

இப்படி வீடு சேருவதற்க்கு முன்னதாக ஒரு ஐம்பது , நூறு கேள்விகளை கேட்டு விட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.