(Reading time: 4 - 7 minutes)

இலந்தப்பழ கிழவி - சுரேஷ்

நீண்ட காலம் கழித்து சொந்த ஊருக்கு செல்கிறேன். உடலில் வயதான கோலம் குடி கொண்டாலும் என் ஊரை நோக்கி செல்கையில் அதே குறும்புக்கார சிறுவனாய் உணர்கிறேன். அதோ! அந்த இலந்தப்பழ கிழவி திட்டுவது என் காதில் விழுகிறது.

"டேய், எடுபட்ட பசங்களா ! இலந்தபழத்த திருடியா தின்றீங்க. கைய முறிச்சு அடுப்புல வச்சிருவேன்" என்று அந்த கிழவி தள்ளாத வயதிலும் துரத்திக்கொண்டு வருவாள்.

ஒரு நாள்.அவள் வீட்டில் இல்லாத நேரம், நெடு நெடுவென வளர்ந்திருக்கும் அந்த இலந்த மரத்தில் நான் ஏறினேன். அந்நேரத்தில் அங்கு வந்த அவள் என்னையும் பார்த்து விட்டாள்.

Ilanthai pazham

"அடேய் திருட்டு ராஸ்கோல்! எவ்வளவு தைரியம் உனக்கு? நீ கீழ எறங்கு, உன் கால ஒடிச்சிடுறேன்" என்று திட்டிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நான் கீழே இறங்க பயந்து மரத்திலேயே இருந்துவிட்டேன். பொழுது சாயும் நேரம், என் பெற்றோர் என்னை ஊரெங்கும் தேடி இறுதியாக விஷயம் அறிந்து இலந்தப்பழ கிழவியிடம் வாக்குவாதம் செய்தனர். கிழவியும் சண்டைக்கு காத்திருந்தது போல் வார்த்தை போரிட்டாள்.

றுநாள் கிழவி வீட்டின் வழியாக பள்ளிக்கூடம் சென்றேன்.

"ஏலேய் ராசு, இங்க வா!"

நான் நடுங்கியபடி சென்றேன்.

"நேத்து நாள் முழுக்க மரத்திலேயேவா இருந்த?"

நான் ஆமாம் என்று தலையாட்டினேன்.

"என் மேல அவ்வளவு பயமா இந்த தொரைக்கு?" என்று கூறியபடி ஒரு பாத்திரத்தில் இருந்த இலந்தப்பழங்களை என்னிடம் கொடுத்தாள்.

"என்கிட்டே காசு இல்ல"

"அட, வச்சிக்கோடா. நீ இலந்தப்பழம் வேணும்னா என்கிட்டே வா. மரத்துல எல்லாம் ஏறக்கூடாது" என்று கூறி என்னை அனுப்பி வைத்தாள்.

மறுநாளில் இருந்து நானும் கிழவியும் நண்பர்கள் ஆனோம். தினமும் பள்ளிக்கு செல்லும்போது இலந்தப்பழத்தை வாங்கி புசித்தவாறே செல்வேன்.

ரு நாள் நான் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. கிழவியின் வாரிசுகள் இலந்த மரத்தை வெட்டி சாய்த்தனர். அம்மரம் இருந்த இடத்தில வீடு கட்ட போகிறார்களாம். என்னால் இதைத் தாங்கமுடியவில்லை. அந்த கிழவி எப்படி தாங்குவாள்.

என் தந்தைக்கு வேறொரு ஊரில் பணி கிடைத்து அங்கு செல்ல முடிவெடுத்ததால், இறுதியாக இலந்தப்பழ கிழவியைப் பார்க்க சென்றேன். மரம் வெட்டப்பட்ட அதிர்ச்சியோ என்னவோ உடல் நலமில்லாமல் படுக்கையில் படுத்திருந்தாள். என்னைக் கண்டதும், "வா ராசா, எப்படி இருக்க?" என்று விசாரித்தாள்.

நான் வேறு ஊருக்கு செல்லப்போவதை சொன்னேன். அவள் கண்கள் லேசாக கலங்கியதை நான் உணர்ந்தேன்."இப்போ இந்த கிழவிகிட்ட எதுவுமே இல்ல ராசா. கொஞ்சம் இரு" என்று கூறி படுக்கையில் இருந்து எழுந்து சில பாத்திரங்களை உருட்டினாள். அதில் ஒரு பாத்திரத்தில் காய்ந்த இலந்தப்பழங்கள் இருந்தன. அதை எடுத்து என்னிடம் கொடுத்தாள். "இத வச்சிக்கோ" என்று கூறினாள். நான் அவளிடமிருந்து ஒரு முத்தத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ன்று சென்றவன் இன்று தான் திரும்பி வருகிறேன். கிழவி இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. துக்கம் தொண்டையை அடைக்கவே நான் காரை நிறுத்த சொன்னேன். அங்கு சூழ்ந்திருந்த பச்சை வயல் வெளிகளில் என் மனதை ஓட விட்டேன்.

திடீரென என் மனம் ஸ்தம்பித்தது. சிறிது தொலைவில் ஓர் இலந்தை மரம் என் கண்களுக்கு தென்பட்டது. அதை நோக்கி சென்றேன்.

நிலத்தில் வேலை புரிந்தவர்களில் சிலர் என்னிடம் கேள்வி கேட்டனர்.

"அய்யா யார் நீங்க?"

"நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்க வாத்தியார். இது போல பெரிய இலந்தை மரத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் பார்க்க வந்தேன்"

"எல்லாம் எங்க ஆத்தாவோட ராசி தான் சார். ஊருல இலந்தப்பழ கிழவின்னு சொல்லுவாங்க. இறந்த பின்னால சொந்த நிலத்துல தான் பொதைக்கனும்னு ஆசைபட்டுச்சு. அப்படியே நாங்களும் செஞ்சோம். ஆத்தாவ பொதச்ச இடத்துலேயே இலந்த மரம் தானா வளர்ந்திருச்சு சார்"

நான் கலங்கிய மனதோடு மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் கிழவியின் சமாதியைக் கண்டேன். என் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன. என் வயதையும் மறந்து குறும்பு சிறுவனாக மரத்தின் மீதேறி இலந்தப் பழத்தைப் பறித்தேன்.

"ஏலேய் ராசு! என் மேல இருக்க பயம் போயிடுச்சா? நீ கீழ இறங்கு. உன் கால் ரெண்டையும் முறிச்சு அடுப்புல வைக்குறேன்..." என்று இலந்தப் பழ கிழவி செல்லமாக என்னைக் கடிந்துகொள்வது போல் இலந்தமர இலைகள் காற்றில் சலசலத்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.