(Reading time: 6 - 12 minutes)

நீ என்ன சொல்வாய் அன்பே?  - ஷரோன்

ந்தியா, நாங்க டீ குடிக்க கேன்டீன் போறோம். நீ வரலையா? “என்று கணினியில் மூழ்கியிருந்த சந்தியாவிடம் கேட்டான் அருண்.

“ இல்லடா.. நீங்க போங்க. எனக்கு மூட் இல்ல.. “

மீரா, “ ஏய் எப்பவும் நீ தானடி எங்கள இழுத்துட்டு போவ. இன்னைக்கு என்னாச்சு உனக்கு “

Nee enna solvaai anbe“ அதெல்லாம் முடியாது. ஒவரா பண்ணாம ஒழுங்கா வா “ என்று அவள் கையைப் பற்றி லேசாக இழுத்தாள் நந்தினி.

“ ஹோய், நிஜமா எனக்கு இப்போ டீ வேண்டாம். கொஞ்சம் வேலையிருக்கு “

நந்தினி, “ அடங்கப்பா டேய், இவ வேலை செய்யுறாளாமா.. ”

ஷிவா, “ ஓ… செய் மா, செய். நல்லா செய். நாங்க போய் ஒரு டீ குடிச்சுட்டு வரோம் “ என்று அங்கு சட்டமாய் நின்றிருந்த நந்தினியை இழுத்துச் சென்றான்.

அந்த ஐவர் குழு அங்கிருந்து நகரத் தொடங்க, கடைசியாக சென்ற நிஷா சந்தியாவிடம், “ எங்க நம்ம வாலு பையன காணோம்? “ என்று ஆவலாக கேட்க,

“ சார் இன்னும் வரல “ என்று முயன்று வருவித்த புன்னகையுடன் சொன்னாள்.

சிறிது நேரம் தன் கணினியை நோண்டியவளுக்குச் சலிப்பு தட்ட, முன்பிருந்த டேபிளில் சாய்ந்தவாறு கன்னத்தில் கை வைத்தமர்ந்து தன் எண்ணங்களுக்குள் புதையுண்டாள்.

சில மணித்துளிகள் அமைதியில் கழிய, திடீரென்று கதவு திறக்கப்படும் சத்தம். தலையை மட்டுமாய் திருப்பி ‘யார்’ என்று பார்த்தாள்.

அணிந்திருந்த கூலர்ஸை கழற்றிய படியே, சைடு பேக் உடனும், முகத்தில் ஒரு வித வசீகர புன்னகையுடனும் படு ஸ்டைலாக உள்ளே நுழைந்தான் கார்த்திக்.

“ ஹாய் தியா.. “ என்று முழு உற்சாகத்துடன் அவன் சொல்ல, அவளிடமிருந்து வெறும் தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது.

“ எங்க நம்ம சங்க மக்களை எல்லாம் காணோம்? வழக்கம் போல கேன்டீன் தானா? “

“ ம்ம்ம்.. “

ஆச்சரியத்துடன், “ நீ போகல? “

“ போகல.. அதை விடு. நீ ஏன் லேட்? “

“ அது.. “

“ என்னது? “

“ ஒன்னுமில்ல, நைட் சரக்கு அடிச்சு மட்டையாயிட்டன். அதான் லேட் “

அவன் மீது ஒரு ஆராய்ச்சி பார்வையைச் செலுத்தியவள்,

“ யாரு.. நீயு..? “

“ யெஸ். நான் தான் “ என்றான் கெத்தாக.

“ ஷப்பா.. அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டனு எனக்கு தெரியும்டா ”

“ உண்மையா சொல்றேன் டி “

“ அட சீ.. நடந்ததை மட்டும் சொல்லு எரும “

சிறிய தயக்கத்துடன், “ சொன்னா சிரிக்கக் கூடாது. நேத்துல இருந்து வீட்டுல யாரும் என்கிட்ட சரியா பேச மாட்டேங்குறாங்க. அம்மா, அப்பா, ஊர்ல இருந்து வந்த அக்கா.. யாருமே.. ஒரே கடியா இருந்துச்சு. கடுப்புல கிளம்பவே பிடிக்கல. அதான் லேட் “

“ இவரு சின்ன பாப்பா பாரு. வளரவே இல்ல டா நீ “ என்று சிரித்தவளைப் பார்த்து முறைத்தவன், “ சரி தான் போடி. என் கஷ்டம் எனக்கு “

“ ஆமா, ஆமா “

“ என்ன ஓமா.. ஓமா.. வரும் போது பாத்தேன். அம்மணி எதோ பலத்த யோசனைல இருந்த போல. என்னாச்சு? “

“ பச் “

“ ஒய், நீ கேட்டத நான் சொன்னேன்ல, இப்போ நீ சொல்லு “

“ நீ சொன்னா, நானும் சொல்லனுமா? முடியாது போடா “

“ அடிங்க.. துரோகி “

“ அது எல்லாம் உன்னை மாதிரி சின்ன பசங்க கிட்ட சொல்லறது இல்லை “

என்றாள் நக்கலாக.

“ என்னது??? ” என்று தன் நெஞ்சில் வைத்தப்படி சாய்ந்தமர்ந்தவன், “ அடிபாவி, நீயும் நானும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ், கிளாஸ் மேட்ஸ். உன் வயசு தான் எனக்கும். இன்னும் சொல்ல போனா நான் உன்னை விட கொஞ்சம் பெரியவன். அப்புறம் எப்படி உனக்கு தெரிஞ்சது எனக்கு தெரியக்கூடாது? இது எல்லாம் அநியாயம். “

“ எல்லாம் நியாயம் தான். நீ கேள்விப்பட்டதில்ல.. 20’s ஏஜ் குரூப்ல உள்ள ஒரு பொண்ணையும் பையனையும் கம்பேர் பண்ணா, பொண்ணுக்கு இருக்குற மெச்சுரிட்டி லேவல் பசங்களுக்கு இருக்குறதில்லனு. சோ, இந்த தியரி படி நீ சின்ன பையன் தான் “ என்று முடித்தாள்.

அவனோ வீராவேசத்துடன், “ அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. இப்படி சொல்லி சொல்லியே பசங்கள மட்டம் தட்டுறத வேலையா வச்சிருக்கீங்க பொண்ணுங்க நீங்க. All Female Chauvinistic People… FCPs…. ஆண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநியாயத்த தட்டி கேக்க ஆளில்லாம போச்சே.. ஹமாரா தேஷ் , ஏன் இப்படி அச்சு? “ என்று பொங்கியவன், கைகளை கட்டிக்கொண்டு லுக் விட்டவளைக் கண்டு அடங்கி போனான்.

எவ்வளவு முயன்றும் முறைக்க முடியாமல் தோற்று, சிரித்தவள்,

“ இப்போ என்ன உனக்கு.. என் பிரச்சனை தெரியனும்.. அவ்ளோ தான? “

அவன் ‘ஆம்’ என்று தலையாட்ட,

“ கல்யாணம் பண்ணிக்க சொல்லி அப்பா ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு. கிட்டதட்ட ரெண்டு வருஷமா.. நான் தான் ‘இல்ல் பா, இப்போ வேண்டாம், பிடிக்கல’ னு எஸ்கேப் ஆகிட்டு இருந்தேன் ”

“ அதான் தெரியுமே ”

“ எப்படி? “

“ நீ ப்போன் பேசும்போது நான் காதை மூடிக்குறது இல்லயே. அப்படி “

“ ஓ..” ஒரு நொடி நிதானித்தவள் மீண்டுமாய்,

“ பட், இந்த தடவ அப்பா ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லிட்டாரு. தட்டி கழிக்கவே முடியாது. ஏன்னா, பாத்திருக்குற பையனையும், அவன் பேமிலியையும் அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சாம். நான் யோசிக்கனும் சொன்னதுக்கு. இன்னைக்கு 11.30-க்குள்ள என் முடிவ சொல்லனும்னு சொல்லிடாரு. இப்போ டைம் 11.15. அதான் நீ சொன்ன மாதிரி பலத்த யோசனைல இருந்தேன். யோசிச்சு யோசிச்சு தலை வலியே வந்திடுச்சுனா பாத்துக்கோ “

முகத்தில் யோசனை ரேகைகள் படர அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் உற்சாகம் எல்லாம் வற்றி போக,

“ நீ என்ன முடிவு பண்ணியிருக்க? “ என்று மெதுவாய் கேட்டான்.

“ ம்.. பையன் பாக்க சுமாரா தான் இருப்பான். ஸ்டில் ரொம்ப நல்லவனாம். நல்ல குடும்பமாம். ‘நோ’ சொல்ல ஒரு ரீசனும் இல்ல. என் அப்பா அம்மா கூட ரொம்ப ஹாப்பி. சோ, ‘ஓகே’ சொல்லாம்னு இருக்கேன். “

“ ஓ “ வேறோன்றும் சொல்லவில்லை அவன். திரும்பி அமர அவன் எத்தனிக்கையில்,

“ கார்த்திக், ஒரு ஹெல்ப் பண்றியா.. எனக்கு ஒரு டீ வாங்கிட்டு வரீயா.. ப்ளீஸ். ரொம்ப தலை வலிக்குது. அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல ப்போன் பண்ணுவாரு. அங்க வச்சு பேசுனா, நம்ப மக்கள் என்னை கலாய்ச்சு காலி பண்ணிடுவாங்க. ப்ளீஸ்..  “

“ நீ ஒரு மாங்காக்கு ‘யெஸ்’ சொல்ல, நான் உனக்கு டீ வாங்கனுமா.. போடி “

என்று கடுப்புடன் திரும்பி மெலிதாய் முணுமுணுத்தான்.

“ ஸ்.. ஆ.. “ தலையைப் பிடித்தப்படி அவள் டேபிளில் அவள் படுக்க,

“ ரொம்ப வலிக்குதா தியா.. டூ மினிட்ஸ் “ என்று விரைந்தான்.

ரு கையில் டீக்கப்புடனும், மறு கையில் ‘சிக் ரூம்’-இல் வாங்கிய தலைவலி மாத்திரையுடனும் வந்தவன், முகம்  பிராகாசமுற மகிழ்ச்சி பொங்கும் குரலில், சிறு வெட்கத்துடன் செல் போனில் பேசிக்கொண்டிருந்தவளைக் கண்டான். மனதில் ஒரு வலியையும் உணர்ந்தான்.

பேசிக்கொண்டே அவனிடம் இருந்து இரண்டையும் பெற்றுக்கொண்டவள், கண்களாலே நன்றியும் உரைத்தாள்.

“ சரிப்பா. நீங்க அவன்.. அவர் அப்பாக்கு ப்போன் பண்ணி என் சம்மதத்தைச் சொல்லிடுங்க. வைக்குறேன். பை “

கையில் இருந்த மாத்திரையைப் பார்த்தவள் முகத்தில் மென்மை படர,

“ ரொம்ப தேங்க்ஸ் டா. இது இனி தேவைப்படாதுனு நினைக்குறேன். நீ வாங்குன டீ மட்டுமே போதும்” என்று டீயைப் பருகலானாள்.

‘இவளுக்கு என் காதல் புரியலையே. இனிமே சொன்னா, அது நல்லாயிருக்காது. ஆனாலும் இந்த லூசுக்கு கொஞ்சம் கூட என் காதல் புரியலையே..முட்டாள்..மங்கூஸ்..’ என்று மனதினுள் அவளுக்கு பூஜைச் செய்தவன், அந்த கடுப்பைத் தயவு தாட்சண்யமே இல்லாமல் கீ போர்ட்டிடம் காட்டினான்.

அவன் செய்கையைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“ டேய் “

“ ம் “

“ டேய்ய்ய்ய்ய்.. ”

“ ம்.. சொல்லு டி “

“ அந்த பையனைப் பத்தி எதும் கேக்க மாட்டியா? “

“ வேலை இருக்கு, பாக்குறயில்ல.. எப்படியும் உன் கிட்ட மாட்டி இருக்கான்னா, கண்டிப்பா ஒரு மாங்க மடையானா தான் இருப்பான் “

“ ஒய் .. பாத்து பேசு.. நான் கட்டிக்க போறவன். நானே அவன பத்தி சொல்றன் “

“ சொல்லி தொல “

“ அவன் பேர் என்ன தெரியுமா.. கார்த்திக் “

“ சொன்னா தான தெரியும் “

“ அதான் சொன்னனே.. கார்த்திக் “

“ எப்போ டி..” என்று திரும்பியவனை அவள் புன்னகை மேலும் குழப்ப…

“ அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம், அவன் அம்மாவும் அக்காவும் சொன்னாங்க. பட் அவன் இன்னும் சொல்லல… “

 கார்த்தியின் முகம் மாற தொடங்கியது..

“ என்னடா உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல போல, வேண்டாம்னு சொல்லிடவா? ”

“ என்னது ‘வேண்டாம்’னு வேற சொல்வியா நீ??? உன்ன?? “ என்று சந்தியாவை அடிக்க ஆயுதம் தேடலானான் கார்த்திக்.. பின்ன, வலிக்காதவாறு அடிக்கனுமே.. அதான் ;)

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.