(Reading time: 2 - 4 minutes)

பாட்டி சொல்லைத் தட்டாதே - கிருஷ்ண பாபு

Bike

கையில் ரெண்டு பையுடன் வயதான ஒரு பாட்டி மெதுவாக நடப்பதை பார்த்தேன்.பைக்கை நிறுத்தி 'பாட்டி நான் உங்களை வீட்டுல இறக்கி விடவா?'

கனிவாக கேட்டேன்.

'ம்' என்றார்.

அதில்தான் எத்தனை ஆயிரம் சோகங்கள்,விரக்திகள், சமூகச் சாடல்கள், நிதர்சனங்கள்?

பொங்கி வழிந்த சமூகக் கோபத்துடன் பாட்டியை பைக்கில் ஏற்றி கிளம்பினேன்.

இந்த அரிய சேவையை செல்பி எடுத்து விழிப்புணர்வு பதிவாக இடும்பொருட்டு ஒருகையால் செல்லை எடுத்தேன்.

'நாசமாப் போறவனே'னு ஒரு சத்தம்.

இன்னும் பதிவே எழுதல.அதற்குள் எப்படி வாய்ஸ் கமெண்ட்டு?என்று நான் குழம்பியபோது முதுகில் 'சொத்'தென ஒரு அ(இ)டி.

நிஜமாச்சொல்றேன் என் ஒய்ப் அடிக்கிறது கூட இவ்ளோ வலிச்சதில்ல! 

'அந்தக் கருமத்த பெறகு பேசு'.

பாட்டியின் கர்ஜனை குரல். முடிவு பண்ணினேன். 

இது சமூகசேவை பதிவு அல்ல…அல்ல…அல்ல… அதையும் தாண்டி மிகப் புனிதமானது…ச்சே… funnyதமானது.

'வீட்டுக்கு எப்டி போகணும் பாட்டி?'

இதுதான் எனக்கு அதுக்கப்புறம் scriptல இருந்த ஒரே டயலாக்.ஆனா அங்கே?

1.திரும்பிப் பார்க்காம கேளு.

2.வேகமா போகாத.

3.எதுக்கே லாரி…லாரீஈஈஈஈ…

4.வடக்கால.

5.தெக்கால.

6.வடக்க தெக்க தெரியாதா? ஹம்.

இன்னும் நெறய விழுந்தது.

3வது டயலாக் முடிஞ்சதும் கத்தின கத்தல்ல என் இடதுகாது இருட்டிப் போச்சு.

ஒருவழியா பாட்டி வீட்டில் இறங்கியதும் தப்பிச்சேன் பிழைச்சேன்னு பல்ஸரைக் கிளப்பினேன்.

'அவனை நிறுத்துங்க'னு ஒரு சைரன்.

நாலஞ்சு பொன்னம்பலம்ஸ் சுத்திக்கிட்டாங்க.

பாட்டி வேகமா வந்தார்.

'என் பையைக் கொண்டுட்டு ஓடுறான் பாரு!' வெடுக் வெடுக்னு பிடுங்குனதுல நான் கடமைக்கு சுமந்து திரியுற ஹெல்மட்டும் போயிடுச்சு.

கவசகுண்டலம் இழந்த கர்ணனாய் பாட்டியிடம் பரிதாபமாக கேட்டேன்.

'பாட்டி,அது என் ஹெல்மட்.'

கண்ணை சுருக்கி உத்துப் பார்த்து அவரோட கூடை இல்லை என முடிவானதும்

'ஆமா,ரெண்டு பைதான் கொண்டு வந்தேனா? மூணு இல்லையோ?' 

சந்தேகத்தின் பலனை குற்றவாளியான எனக்கு அளித்து விடுதலை செய்தார்.

ரொம்ப உற்சாகமாய் பறந்தேன்.

போன் வந்தது.

'சார் நாங்க ஆடிட்டர் ஆபிஸ்ல இருந்து பேசுறோம்.ஏன் இன்னும் வரல?'

'சாரி கொஞ்சம் லேட்,இதோ வந்துக்கிட்டேஏஏஏ…'

கிறீச்.

'ஓரமா ஒதுங்கி நின்னு பேசுடா சாவுகிராக்கி!'

லாரி டிரைவரின் வார்த்தைகள் எனக்கு பாடம் புகட்ட முயன்று தோற்ற பாட்டியின் வார்த்தைகளாகவே தோன்றியது எனக்கு.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.