(Reading time: 11 - 22 minutes)

மைதிலி தனது கனவு உலகத்திலிருந்து தன் தோழியின் அழைப்பினால் வெளிவந்தாள். வெளியே ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் வந்ததற்கு அடையாளமாக அவளது தாயும் தந்தையும் வரவேற்கும் ஓசை கேட்டது; தன்னை கூப்பிடும்வரை பொறுமையுடன் காத்திருந்தாள். சீக்கிரமே அந்த தருணமும் வந்தது; படபடப்புடன் தன்னவனை தன்னவனாக காணச் சென்றாள்.

ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பயம் இருந்தாலும், அதனை மறைத்து நமஸ்கரித்து அம்மா கொடுத்த காபியை சிந்தாமல் எல்லோருக்கும் கொடுத்தாள் (அதற்கு எத்தனை தெய்வங்களை வேண்டினாள் என்று அவளுக்கே தெரியாது). அதன்பின் மைதிலியை உள் அறைக்கு அனுப்பிவிட்டு மேற்கொண்டு பேசவேண்டியது அனைத்தும் பேசி திருமணத்தை அடுத்த மாதத்திலேயே முடிப்பது என முடிவெடுத்தனர். பின் மைத்திலியின் தந்தை பேச ஆரம்பித்தார்.

“எப்படியோ சம்பந்தி, விட்டுப் போயிடும்னு நெனைச்ச சம்பந்தம் திரும்பவும் கைகூடுனதுல ரொம்ப சந்தோசம்”

காமட்சியம்மாள் (ராஜேஷின் தாய்): “ஆமாம் அண்ணா! எங்களுக்கும் வருத்தமா தான் இருந்துது. ஆனா இப்படி தான் நடக்கனும்னு இருந்தா யாரால மாத்தமுடியும்?”

“எனக்கு புடிச்ச பையனே என் பொண்ணுக்கும் புடிச்சுருக்குன்னு நெனைக்கும்போது ரொம்ப திருப்தி மா”

அதற்கு மேல் என்ன பேசினார்களோ, மைதிலியின் செவிகளுக்கு எட்டவில்லை. தந்தை கடைசியாக சொன்ன வார்த்தைகளையே அவள் மனம் சுற்றிச்சுற்றி வந்தது. “அப்பாவுக்கு ராஜேஷ்-ஐ முன்பே தெரியுமா?” இதைப் பற்றியே திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தாள். தான் இவனைக் காதலிக்கிறேன் என்று கூறியதும் ‘உன் இஷ்டம்’ என்று ஒன்றுமே சொல்லாமல் இந்த திருமணத்திற்கு சம்மதித்தது வேறு இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது.

ப்பாவிடம் கேட்கலாம் என்றால், ஏதோ ஒன்று தடுத்தது. ராஜேஷிடம் கேட்டால், ‘இது ஃபோனில் பேச வேண்டியது அல்ல. பார்க்கும்போது சொல்க்கிறேன்’ என முடித்துவிட்டான். திருமணம் நெருங்குவதால் இருவரும் பார்த்துக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது வேறு கடுப்பேற்றியது. இந்த குழப்பம் மற்றும் இல்லை என்றால் ஒரு இன்பமான அவஸ்தையாக இருந்திருக்கும். ஆனால் இப்போது அவஸ்தை மட்டுமே உள்ளது; இன்பத்தையே காணோம்.

வாழ்வில் முக்கிய தருணம் என்பதால் தன் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்திலும் மகிழ்வுடன் கலந்துகொண்டாள்; கலந்துகொள்ள முயற்சித்தாள். ஒரு வழியாக அவர்களது திருமணமும் இனிதாக முடிந்து, இருவரும் தனித்திருக்கும் நேரமும் வந்தது.

இருந்த கடுப்பு மற்றும் கோபம் யாவையும் அறையினுள் நுழைந்ததும் தன் கையில் இருந்த பால் சொம்பிலும் மேசையிலும் காட்டினாள். எதையும் என்னால் சமாளிக்க முடியும் என்ற தோரனையில் கணவன் அமர்ந்திருந்தது வேறு இன்னும் எரிச்சலூட்டியது. வேண்டுமென்றே அவன் முன் நின்று இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

மைதிலி நின்றிருந்த கோலம் கண்டு அவளது கணவன் சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டான்; அந்த கோபமும் சிறு பிள்ளையின் சினுங்கலாகவே தோன்றியது அவனுக்கு. அவன் ஒன்றுமே கேட்காமல் இருக்கவும், மைதிலியின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது; ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான் அவளது மணாளன்.

“இப்போ எதுக்கு இப்படி சிரிக்குறீங்க? என்ன பாத்தா உங்களுக்கு comedy piece-ஆ தெரியுதா?”

“ஐயோ செல்லம்! உன் வாயால நீயே ஒத்துக்கிட்டியே. சூப்பர் மா. நீ comedy piece-ஏ தான். அதுல என்ன உனக்கு டௌட்” என கலாய்க்க ஆரம்பித்திருந்த்தான் ராஜேஷ்.

வேறு சமயமாய் இருந்திருந்தால் இவளும் ஏதாவது கலாய்த்திருப்பாலோ என்னவோ? இப்போது அந்த மனநிலை இல்லாததால் அவனுக்கு தன் பார்வையில் கனலை ஏற்றி அனுப்பிக்கொண்டிருந்தாள். “ராஜேஷ்!!!!” என்று அவள் பல்லை கடித்ததை பார்த்து தன் சிரிப்பை நிறுத்தி serious modeற்கு வந்தான்.

“என்னடா?” என்று அவள் மீது கொண்டுள்ள காதல் மொத்தத்தையும் குரலில் தேக்கி கேட்டான்.

“அப்பாவுக்கு உன்ன முதலிலேயே தெரியுமா?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“தெரியும்” என அவள் கண்களை பார்த்தவாறே பதில் வந்தது.

“எப்படி?”

“உனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு alliance வந்துச்சே, ஞாபகம் இருக்கா?”

“ம்ம்ம்ம்”

“அது நான் தான்”

“நீயா?” என்று அவள் அதிர்ச்சியாக வினவினாள்.

“ஆமாம். நீ மட்டும் அன்னைக்கே ஓகே சொல்லிருந்தனா எப்பவோ நம்ம கல்யாணம் நடந்துருக்கும்” என்று மேலும் கூறினான்.

இதுவரை அரைகுறையாக நினைவுக்கு வந்தது இப்போது தெள்ளத்தெளிவாக வந்தது. ஒரு வருடம் முன்பு தந்தை ஒரு வரன் பற்றி கூறியதும், தான் எதுவுமே யோசிக்காமல் வேண்டாம் என்றதும். கூடவே அவனை மறுத்த காரணமும் ஞாபகம் வந்தது. “ஏன் என்னை?” என்ற கேள்வி அவள் விழிகளில் தேங்கி நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.