(Reading time: 6 - 11 minutes)

என்று மாறும் இந்த அவலம்?? - லேகா

Caste

திகாலை ஆறு மணி. அலாரம் ஒலியெழுப்ப அதனை அணைத்துவிட்டு எழுந்தேன். அருகில் கணவனும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவருக்கென்ன, ஏழு மணி வரை தூக்கம். நானும் அப்படியே இருக்க முடியுமா? இன்று செய்ய வேண்டிய வேலைகள் கண்முன் நிழலாடின. சோம்பலை புறம்தள்ளிவிட்டு முகம் அலம்பி வந்தேன். என் மகள் அவளது போர்வையுடன் ஆடிய ஆட்டத்தால் அது தனியாக கீழே கிடந்தது. அதை எடுத்து அவள்மேல் போர்த்திவிட்டு நகர்ந்தேன், பால் வாங்க வேண்டுமே. சமையலறைக்குச் சென்று பால் கூடையை எடுத்துக்கொண்டு, வீட்டை சாற்றிவிட்டு நடந்தேன் தெருவை நோக்கி.

வெளியே வெறிச்சோடிக்கிடந்தது. இது என்றும் வழக்கமல்ல. இரு தினங்களாக எங்கள் பகுதியில் நடந்த கலவரத்தின் விளைவு. கடை இன்றாவது இருக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கையில் தான் நான் இப்போது செல்கிறேன். இங்கிருந்து கடைகள் அடங்கிய சாலைக்கு செல்ல குறைந்தது பத்து நிமிடங்களாவது தேவைப்படும். அதற்குள் என்ன நடந்தது என்று சொல்கிறேன்.

இரு தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு அருகே ஒரு கொலை நிகழ்ந்துவிட்டது. இது புறநகர் பகுதியாதலாலும் மிகச் சில குடியிருப்புகளே உள்ளதாலும் கொலையாளிகளுக்கு வசதியாக போய்விட்டது. கலவரத்திற்கு காரணமும் இந்த கொலை தான். இறந்தது ஒரு ஆண். திருமணமாகி இரு மாதங்களே ஆகிறது; அதுவும் காதல் திருமணம். இப்போது புரிகிறதா கொலைக்கான காரணம்? ஆம், இது ஒரு ஆணவக் கொலை.

அந்த ஆணின் குடும்பமும் சொந்தமும் எங்கள் பகுதிக்கு அருகில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறார்கள். எப்போதும் போல அன்றும் அந்த பையன் தன் வேலை முடிந்து இரவு ஒரு மணி போல தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது தான் இது நடந்திருக்கிறது, அதுவும் அவன் வீட்டின் அருகினிலேயே! அது நடு இரவாதலால் எல்லோரும் ஆழ்ந்த தூக்கதில் இருந்திருக்கின்றனர். அவனது அலறல் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துகொண்டிருந்தான். உடனே அள்ளிக்கொண்டு ஓடினர் ஆஸ்பத்திரிக்கு. ஆனால், காப்பாற்றத்தான் முடியவில்லை. அந்த வெறி தான் எங்கள் பகுதியில் இருந்த கடைகளின் மீது காட்டப்பட்டிருக்கிறது. இதில் நாங்கள் நிம்மதி கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் யாரையும் காயப்படுத்தவில்லை (ஆனால் கடைகளை தான் சூரையாடிவிட்டனர்). இறந்த அந்த பையனை கொலை செய்தவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றும் அவர்களை பிடிக்க ஒரு தனிப்படை போலிசார் சென்றுள்ளனர்.

சாலைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். மிக சில கடைகள் மட்டுமே எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தன; அது மட்டும் தான் திறந்தும் இருந்தன. அதில் ஒரு மளிகை கடை இருந்ததால் உள்ளே சென்று தேவையான பொருட்களை வாங்கினேன். திரும்பி வரும்போது மீண்டும் அதே நியாபகம். என்ன தவறு செய்தான் அந்த பையன்? காதலிப்பதைத் தவிர? இதை நினைக்கும்போதே என் நினைவலைகளின் இடுக்கில் எங்கோ மறைந்திருந்தது பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது.

து நான் கல்லூரியில் கடைசியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வகுப்பு மாணவன் ஒருவன் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாய் சொன்னான். அவனை எனக்கு கடந்த மூன்று வருடங்களாக தெரியும்; நல்ல பழக்கமும் கூட. அவனது பல செயல்களைக்கண்டு நான் வியந்ததுண்டு. நல்ல படிப்பாளி, நல்ல மனிதன். அவன் என்னிடம் வந்து இப்படி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு அவனை பிடிக்கும் தான். இப்படிப்பட்ட கணவன் வேண்டுமென்று தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்; நான் மட்டும் எப்படி விதிவிலக்காவேன்? ஆனால், மறுதலிக்க வேண்டிதான் வந்தது. காரணம், சாதி.

அதற்கு பின்பும் என்னை விடாமல் பின்தொடர்ந்து கேட்டான், காதலை ஏற்கச் சொல்லி. நானும் கடைசி வரை ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில், படிப்பு முடிந்ததும், கண்காணாத இடத்திற்கு சென்றுவிட்டான், ‘என் வாழ்வின் இறுதி வரை உன்னை மட்டுமே நேசிப்பேன்’ என்று கடிதம் எழுதிவிட்டு. அன்று நான் அழுதது சொல்லி மாளாது.

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஒரு குக்கிராமத்தில் தான். அங்கு என் தந்தைக்கு பெரும்பெயர். எங்களது ஊரில் அடிக்கடி சில பெண்களோ பையங்களோ இறந்துபோவதுண்டு. அது ஏனென்று அப்போது தெரியவில்லை. எதுவும் புரிந்துகொள்ள முடியாத வயது அது. அதன்பின் பெரியவளானதும் புரிந்தது. அவர்கள் அனைவரின் சாவுக்கும் ஒரே காரணம், காதல். இறந்தவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருந்தனர். ஆண்களின் காதலினால் மானம் போகாதாம், முடிந்தவரை பேசிப்பார்த்து அவர்கள் கேட்கவில்லையென்றால் தான் கொலை, சில நேரங்களில் ஊரை விட்டு துரத்துவதும் நடந்திருக்கிறது. ஆனால், பெண்கள் காதலிப்பது தெரிந்தால் உடனே உயிரை முடித்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பர். அந்த பெண்களின் காதலர்களையும் தீர்த்துக்கட்டிவிடுவர். இதனை தட்டிக்கேட்க யாருமே இல்லை என்பது தான் வேதனை. அன்று முதல் என் மனதில் பதிந்தது காதல் = மரணம்.

அவன் என்னிடம் காதலை கூறியதும் எனக்கு தோன்றியதெல்லாம் ஒன்று தான், பயம். எவ்வளவோ கேட்டான், நாம் யாரும் வர முடியாத இடத்திற்கு போய்விடலாம் என்று. பாவம் அவன், என் வீட்டில் எதிர்ப்பர் என்று மட்டும் தான் தெரிந்தது அவனுக்கு. எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவர் என்பது அறிந்த நான் எப்படி இதற்கு உடன்படுவது? அதனாலேயே மனசுக்குள்ளே பூட்டிவைத்தேன் என் காதலை. இருவரும் மரணிப்பதை விட எங்கள் காதல் மரணிப்பது நல்லதல்லவா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.