(Reading time: 73 - 145 minutes)

ரி போய்ட்டுவாங்க ரிஷிகா... இன்னைக்கான நோட்ஸ வனிதா,மஹிமா கிட்ட வாங்கிகோங்க.. என்ற இசைவோடு.

அவனுக்கு சரியென்ற தலையசைப்போடும்... தோழிகளின் கேள்விக்கு ஒன்றுமில்லை என்ற தலையசைப்போடும் வெளியேறினாள்.

வெளியேறி கொண்டிருப்பவளையே பார்த்து கொண்டிருந்தனர் கவுதமும்,சாஹித்யனும்.

பாவம்டா.. கவுதமின் குரலில் பரிதாபம் இருந்தது.

கவுதம் உன்னோட கார் சாவி கொடு..

கணபொழுதில் நீட்டியிருந்தான்.. எப்படியாவது இதற்கு முடிவு வந்து விடாதா என்ற எண்ணத்தில்.

அவளின் அருகில் காரை கொண்டு நிறுத்தியவன்... குனிந்து கார் கதவை திறந்தான்.

ஏறு...

ஏன் ஏறனும்?

ஏறுனு சொல்றேன்ல...குரலில் கடுமை வந்திருந்தது.

பயந்து கொண்டு சட்டென்று உள்புகுந்து கொண்டாள்.

அவளின் குழந்தை தனமான செய்கையில் அன்றும் ஈர்க்க பட்டு.. மெலிதாய் புன்னகைத்தான்.

சில நிமிடங்கள் மௌனமாய் கழிய.. அவனே தொடங்கினான்.

ஏன் இப்படி இருக்குற ரிஷிகா...?

ஏனென்று உனக்கு தெரியாதா?..என்ற பார்வை அவளிடம்.

நீண்ட பெரு மூச்சு...

ஆளே மாறிட்ட... 

என்னவோ பல ஆண்டு பழகியவனை போல் அவன் கூறினான்.

மாத்தியவனே நீதானே ...என்ற பார்வை.

ஸ்ஸ்ஸ்... காரை ஓரம் கட்டினான்.

வெளியே சென்று வந்தவன் கையில் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அவளிடம் நீட்டினான்.

கொஞ்சம் தண்ணீர் குடி...

அவள் அதை வாங்கி பருகினாள்.

பின் ஒரு சாக்லேட் கவரை அவளிடம் நீட்டினான். 

என்னவென்பது போல் பார்த்தவளுக்கு...

இது என்னோட ஃபேவரைட் சாக்லேட்... நான் கஷ்டமா இருக்கும்போதும் சந்தோஷமாய் இருக்கும் போதும் சாப்பிடுவேன்.

கஷ்டத்துல இருக்கும் போது இதோட டேஸ்ட் என்னோட கஷ்டத்தை குறைக்குறது போலவும் , அதே சந்தோஷமாய் இருக்கும் போது இதோட டேஸ்ட் என் சந்தோஷத்த இரட்டிப்பாக்குறதை போலவும் தோன்றும். 

இப்போ நீ கூட கஷ்டத்துல இருக்குற மாதிரி தோணுது அதான் வாங்கி வந்தேன்.

நோயை தந்தவனே மருந்துமிட்டான்.

புன்னகைத்தே வாங்கி கொண்டவள் கவரை பிரித்து சிறு கடி கடித்தாள்.

அவன் தந்ததாலா..இல்லை அவன் கூறிய விளக்கத்தாலா..

எதோ ஒன்று அவளின் முகத்தின் கலக்கத்தை கொஞ்சம் விலக்கியது.

அவளின் முக மாறுதலை கவனித்தவனுக்குள் இதம் பிறந்தது.

இது படிக்கற வயசு ரிஷிகா.. இந்த டையத்துல மத்த ஃபீலிங்க்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. படிச்சு முடிச்சு நல்ல வேலை. அப்புறம்...அப்புறம்...ஒரு நொடி தயங்கியவன், 

காலப்போக்கில் எல்லாமே... என்று அவள் பக்கம் திரும்பியவன் திகைத்து நின்றான்.

இது நாள் வரை அவளின் முகத்தில் வெட்கத்தையும், துயரத்தையும் கண்டிருந்தவன்... முதல் முறையாய் கோபத்தை கண்டான்.

சொல்லுங்க .. கால போக்கில மறந்துடுவேன்.அப்படித்தானே

அவன் எதோ கூற வாயெடுக்க, கை அமர்த்தி தடுத்தாள்.

வண்டிய நிறுத்துங்க சார்...

ரிஷிகா....

சொல்றேன்ல...

க்ரீச்சிட்டு நின்றது. காரில் இருந்து இறங்கியவள் அவன் புறம் குனிந்து..

என்னோட உணர்வுகளுக்கு நீங்க கொடுத்த மரியாதைனால என் மனசு நிறைஞ்சிடுச்சு ...

கைல சாக்லேட்ட வாங்குனதால குழந்தைனு நினைச்சிட்டீங்க இல்ல... நல்லது.

திரும்பி பாராமல், நடந்தவள் கடந்து சென்ற ஆட்டோவில் ஏறி கொண்டாள்.

என்னமா,சீக்கிரம் வந்துட்ட?

ஒன்னுமில்லைமா, தலை வலி..

எப்போ பாரு படிப்பு படிப்புனு இருந்தா தலை வலிக்காம என்ன செய்யும். சரி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் அப்புறம் வந்து எழுப்பறேன்.

அறைக்குள் சென்று தாழிட்டு கட்டிலில் விழுந்தாள்.

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெளிவந்தது.

என்ன நினைத்தான் என்னை பற்றி... ? என் காதல் அவனுக்கு வெறும் மாயை போன்று தோன்றிவிட்டதா..? காலம் கடந்தால் மறந்து விடுவேனாமா?... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.