(Reading time: 30 - 59 minutes)

மீண்டும் தன் ஊரில் காலடி எடுத்து வைப்போம் என்று அவளுக்கு நம்பிக்கையே இல்லை... ஆனால் எப்படியோ அவள் ஊர் வந்து சேர்ந்துவிட்டாள்...

தன் மகள் செய்த காரியத்தால் ஒரு பக்கம் வருத்தமும், மறுபக்கம் திருமணமும் நின்று, ஊரார் முன் அவமானப்பட்டதில் கோபமும் சேர்ந்த கலவையாக இருந்தனர் அவளது பெற்றோர்கள்... இவளை கண்ட நொடி நிம்மதி பெருமூச்சு விட்டாலும், அடி அடியென்று அடித்து உதைத்துவிட்டார் அவளின் தாயார்..

அதே நேரத்தில் அவர்களின் மகளாகவே அவள் திரும்பி வந்திருக்கிறாளா?? என்ற கேள்வியும் அவர்கள் மனதில் இருந்தது... அதைப்பற்றி அவளிடம் கேட்டப் போது... முழு விவரமாக சொல்லவில்லையென்றாலும், தப்பானவர்களிடம் மாட்டிக் கொண்டு, பின் ஒருவரின் உதவியால் தப்பித்ததையும், அவள் கற்புக்கு எந்த சேதாரமும் இல்லையென்றும் கூறினாள்...

ஆபத்தில் இருந்து மகள் மீண்டு வந்ததுக்கு பெற்றவர்கள் நிம்மதியடைந்தாலும், அவள் செய்த காரியத்துக்கு அவளை திட்டவும் செய்தனர்...

பொதுத் தேர்வில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாள் தாமரை... கல்லூரியில் சேர்ந்து படிப்பதாக கூற, அவள் அன்னையோ கோபப்பட்டார்...

"கல்யாணம் நின்னுப் போயிட்டாலும்... உன்னை காலேஜ்க்கெல்லாம் அனுப்ப நாங்க தயாராயில்லை... நீ விட்டை விட்டு எங்கேயும் போகக் கூடாது...கொஞ்சநாள் போனதும்... திரும்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்.." என்றார்..

"இனி அப்படி எந்த தப்பும் செய்யமாட்டேன்ம்மா... நான் நல்லாப் படிப்பேன்ம்மா..." என்று கெஞ்சினாள்...

அவளின் பெற்றோர்களுக்கும் அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று தான் நினைத்தார்கள்... ஆனால் அவள் செய்த தவறு அவர்கள் மனதை மாற்றியது... ஆனால் பட்டு திருந்தி வந்தவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அவளின் தந்தை நினைத்தார்... தன் மனைவியை சமாதானப்படுத்தி தாமரையை கல்லூரியில் சேர்த்தார்... ஆனால் அவர்கள் இருவரும் அவளை கண்காணித்து கொண்டிருந்தனர்...

தாமரையும் பெற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்படியே நடந்துக் கொண்டாள்... கல்வி ஒன்று மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்று படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினாள்... பெண்கள் கல்லூரியில் தான் அவளை சேர்த்திருந்தனர்... இருந்தும் கூடப் படிக்கும் பெண்களுடன் கூட ஒரு எல்லையோடு தான் பழகினாள்... அவள் திமிர் பிடித்தவள் என்று எல்லோரும் அவளை புறக்கணித்தனர்... காயத்ரி மட்டுமே தாமரையிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்போடு பழகினாள்...

மும்பையில் இருந்து வந்து ஆறு மாதம் சென்றிருக்க, ஒருநாள் கல்லூரியிலிருந்து வரும் வழியில் மனோஜ் அவளைப் பார்க்க வந்தான்... அன்று கஞ்சா கேஸ்ல உன்னைப் பிடிச்சுக் கொடுத்துடுவோம்... இந்த பொண்ணை விட்டிட்டு ஓடிப் போய்டு... என்று அவர்கள் மிரட்டியதால்... தாமரையை விட்டுவிட்டு அவன் ஓடிவிட்டான்... தாமரை இல்லாமல் தனியாக ஊருக்கு வர பயந்தவன் சென்னையிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்...

பின் பெற்றோர்களிடம் போனில் பேசும்போது இவள் ஊருக்கு வந்த செய்தியை அறிந்தாலும்... உடனே ஊருக்குப் போனால் பிரச்சனை வரும் என்று இத்தனை நாள் ஊருக்கு வராமலே இருந்தவன், இப்போது தான் ஊருக்கு வந்தான்... வந்தவன் தாமரையிடம் மன்னிப்பை கோரினான்...

அவனை மன்னிக்கவோ... இல்லை அவனிடம் கோபப்படவோ கூட அவனிடம் பேச அவள் தயாராயில்லை... அவனிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டாள்... அவனும் இரண்டு, மூன்று முறை முயற்சித்துப் பார்த்துவிட்டு பின் விட்டுவிட்டான்...

தாமரையிடம் வந்த மாற்றத்தை கவனித்த, அவளின் பெற்றோர்கள் அவளை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டனர்... மூன்று வருட கல்லூரி படிப்பை முடித்தவள், பின் மேற்படிப்பையும் முடித்து... சென்னையில் உள்ள பெரிய கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாள்... காயத்ரிக்கும் அங்கேயே வேலை கிடைக்க... இருவரும் ஹாஸ்டலில் தங்கியிருந்தனர்..

வேலைக்கு சேர்ந்த பின் முன்போல் இல்லாமல் ஓரளவுக்கு தன்னோடு வேலைப் பார்த்தவர்களோடு நட்புடன் பழக ஆரம்பித்தாள்... பிரகாஷும் அவளோடு தான் வேலைப் பார்க்கிறான்... அவளோடு பழகிய கொஞ்ச நாட்களிலேயே அவளை காதலிக்க ஆரம்பித்துவிட்டான்... முன்போல் அல்லாமல் பிரகாஷ் இவளிடம் பழகும் முறை வித்தியாசமாக தெரியவே... அவனிடம் இருந்து அவள் விலக ஆரம்பித்தாள்...

அவள் இப்படி எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியிருப்பதற்கான காரணத்தை ஒருநாள் காயத்ரி கேட்டபோது தான்... தாமரை முழு விவரத்தையும் தன் தோழியிடம் கூறினாள்... காயத்ரியும் அவள் இப்படியிருப்பதற்கான காரணத்தை புரிந்துக் கொண்டு ஆறுதலாக பேசினாள்...

பிரகாஷ் நேரடியாகவே தாமரையிடம் காதலை வெளிப்படுத்தினான்... ஆனால் அவள் பெற்றவர்களின் விருப்பப்படி தான் தனது திருமணம் என்று கூறிவிட்டாள்... அவனோ தன் பெற்றவர்களோடு தாமரை வீட்டிற்குச் சென்று பெண் கேட்டான்...

ஏற்கனவே தாமரை செய்த காரியத்தால்... திருமணமும் நின்று, ஊரார் முன்னால் அசிங்கப்பட்டதால்.. அவளின் திருமணம் குறித்து கவலைக் கொண்டிருந்தவர்களுக்கு... பிரகாஷை பிடித்திருந்தது... அவனின் குடும்பத்தாரை பார்த்து பேசியதில், இந்த சம்பந்தத்தில் அவர்களுக்கு திருப்தியே...

தங்கள் விருப்பத்தை சொல்லி, மகளிடமும் அவள் விருப்பத்தைக் கேட்ட போது... பிரகாஷிடம் தன் கடந்த காலத்தை கூற வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்... அவள் கூறிய அனைத்தையும் கேட்ட பிரகாஷ்.. அவளை மணக்க சம்மதித்தான்... பின் அவளும் சம்மதிக்க... பெரியவர்கள் அவர்களின் திருமணத்தை நிச்சயம் செய்தனர்...

எப்படியோ சென்றிருக்க வேண்டிய அவள் வாழ்க்கை... யோகி மூலமாக தான் இன்று நல்லப்படியாக இருக்கிறது... இதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பாள்... அவள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் போதெல்லாம் மனதில் யோகிக்கு நன்றி சொல்லிக் கொள்வாள்...

அப்படி யோகியை நினைக்கும் தருணமெல்லாம்... அவருக்கு என்ன ஆனதோ என்ற கவலை பிறக்கும்... அவரை ஒருமுறையாவது பார்க்க முடியாதா..?? என்று நினைப்பாள்... அப்படி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், அவரிடம் ஆசி வாங்க வேண்டும், நன்றி சொல்ல வேண்டும் என்றெல்லாம் சிந்தனை ஓடும்...

அவரை தன் பெற்றவர்கள் ஸ்தானத்தில் வைத்து மனதில் போற்றினாள்... ஏன் அவரை தெய்வமாகவே நினைத்து வழிபட ஆரம்பித்துவிட்டாள்... அவரை கடவுள் எந்த குறையுமில்லாமல் வைத்திருக்க வேண்டும் என்று தினம் தினம் பிரார்த்திப்பாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.