(Reading time: 22 - 43 minutes)

ராதிகா தன் பெற்றோர்களிடம் கூட இப்போது எல்லாம் அதிகம் பேசுவது இல்லை. சொல்ல போனால் அது கூட தன் மாமியார் இஷடப்படும்போதுதான் கொடுக்கிறார். ஆரம்பத்தில் அவள் பெற்றோர் தினமும் அவளிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் மாமியார் அதை குறை போல் கூறி விடவும் , அதற்கு பின் அவர்களும் வாரம் ஒரு முறை என்று பேசுவார்கள் . சில வாரங்களில் அதுவும் இருக்காது.

அவளை எங்கும் அனுப்புவது கிடையாது. அருகில் இருக்கும் கடை, கோவில்களுக்கு கூட அவள் தனியே செல்ல முடியாது. ஏன் என்றால் அவளுக்கு அத்தனை சாமர்த்தியம் கிடையாது என கூறிவிட, பாலாவும் அது சரிதான் என்று எண்ணினான்.

இதை எல்லாம் ராதிகா மனதில் போட்டு அழுத்த ஆரம்பித்து விட்டாள். அதன் விபரீதம் யாருக்கும் புரியவில்லை.

அவள் எக்ஸாம் எழுத அவள் அப்பா வீட்டிற்கு சென்றபோது பாலா உடன் வரவில்லை. அவனுக்கு ஏனோ அந்த சின்ன வீட்டில் தான் எப்படி இருப்பது என்று வர மறுத்து விட்டான். ராதிகா பெற்றோருக்கு வருத்தமே என்றாலும் , கிட்டத்தட்ட ஒருவருடம் சென்று மகளை பார்த்த மகிழ்ச்சியில் அதை பொருட்படுத்தவில்லை.

ராதிகாவின் பெற்றோர் அவளிடம் அவள் வாழ்க்கை பற்றி கேட்ட பொழுது, அவள் எதுவும் சொல்லவில்லை. அதனால் அவர்கள் அவள் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொண்டார்கள்.

அடுத்த வருடம் அவள் அந்த ரெண்டு papers கிளியர் பண்ணிய பிறகு, கொஞ்சம் அவளிற்கான கெடுபிடிகள் குறைந்தது. ஆனால் அவள் நுகதடியால் கட்டப்பட்ட மாடு போல் அவளுக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. அவள் அந்த வீட்டிலேயே சுற்றி கொண்டு இருப்பாள்.

இவள் பாஸ் செய்த பிறகு, பாலா அவளிடம் இனிமேல் நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றான்.

இவள் அவனை என்ன இது என்பது போல் பார்க்க, அவனோ குழந்தை உண்டாகி விட்டால், உன்னால் படிப்பில் concentrate பண்ண முடியாது என்பதால் தான் இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதாக கூறவும், அவளுக்குள் இருந்த உணர்வுகள் அனைத்தும் செத்து விட்டன.

இப்படியுமா மனிதர்கள் என்று வெறுத்துப் போனாள். ஆனால் அதற்கும் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. பாலாவும் அவளிடம் பதில் எதிர்பார்க்கவில்லை.

வாழ்க்கை மேலாக பார்க்கும் போது சாதரணமாக தெரிந்தாலும், அடியில் ஒரு உயிர்ப்பில்லா வாழ்க்கையே என்பதால் அவர்களால் ஒரு உயிரை உருவாக்க முடியவில்லை.

சற்று நாட்கள் சும்மா இருந்த ராதிகா மாமியார் குழந்தை இல்லை என்ற பிரச்சினை கொண்டு அவளை டாக்டர் மாற்றி டாக்டராக அழைத்து சென்றார். இதற்கு இடையில் ராதிகாவை வேலைக்கு செல்ல சொல்லலாம் என்று எண்ணியபோது , ராதிகா தன் சுயபுத்தி என்பதே இல்லாமல், மாமியார், கணவன் சொல்வதை கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தாள். அதாவது தன் வேலைகள் தவிர, ஒரு பொருளை இடம் மாற்றி வைக்க வேண்டும் என்றால் கூட, அதையும் அவர்கள் சொன்னால் மட்டுமே செய்தாள். இதை பார்த்த பாலா இவள் வேலைக்கு லாயக்கு இல்லை என்று விட்டு விட்டான்.

அதற்கு பிறகே அவளை டாக்டரிடம் அழைத்து செல்ல, அவளுக்கு உடல் ரீதியாக பிரச்சினை இல்லை என்று கூறினார். வேண்டும் என்றால் கொஞ்ச நாட்கள் அவளை இடம் மாற்றி அழைத்து செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினார்.

முதலில் அதை அப்படியே விட்ட ராதிகா மாமியார், குழந்தை பற்றி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் , அவர்களை தனியாக எங்காவது அனுப்பி வைக்க எண்ணினார். அந்த சமயத்தில் வடமாநிலதிற்கு மாற்றல் கிடைத்தது பாலாவிற்கு. இதை சாக்காக வைத்து இருவரையும் அனுப்பி வைத்தார்.

பாலா தன் அம்மாவை தனியாக விட மறுத்தான் .. ஆனால் அவரோ டாக்டர் சொன்னதை அவனிடம் கூறி, அதோடு இங்கே தான் தன் அண்ணன் அருகில் வீடு மாற்றிக் கொள்வதாகவும் கூறி அனுப்பினார்.

இரட்டை மனதாக இருந்தாலும் , ஏனோ அவனுக்கு ராதிகாவின் நிலைமை சற்று கவலை கொடுத்தது. அதனாலே இருவருமாக சென்றனர்.

பெரிய மாற்றம் என்று இல்லாவிட்டலும், ராதிகாவின் இயல்பான குணம் அங்கே வெளிவந்தது. யாரும், எதுவும் சொல்லி விடுவார்களோ என்ற பயமில்லாமல் இருந்தாள். பாலாவும் அவ்வப்போது வெளியே அழைத்து போனான். இந்த மாற்றம் மிக பெரிய நல்லதிற்கு அடிப்படையாக இருந்திருக்கும் இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசியிருந்தால். ஆனால் இருவருமே சற்று reserved என்பதால் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை

இங்கே வந்தும் இரண்டு வருடம் சென்று இருக்க, திருமணமாகி கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து தாய்மை அடைந்து இருந்தாள் ராதிகா.

இப்போது அவளை பார்த்துக் கொள்ள என்று பாலாவின் அம்மா வந்துவிட , ராதிகா மீண்டும் தன் ஓட்டிற்குள் சுருங்கி கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.