(Reading time: 22 - 43 minutes)

பிரசவத்திற்கு கூட அவர் அவளை அவள் தாய் வீட்டிற்கு அனுப்பவில்லை. அவர்கள் வீட்டில் சீமந்தம் வழக்கம் இல்லை என்று கூறி வளைகாப்பு மட்டும் நடத்தினர். அதிலும் அவள் பெற்றோரை தவிர யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. இது ராதிகா பெற்றோர் வீட்டில் நடந்து இருந்தால் அவள் உறவினர் எல்லோரும் வந்து இருப்பார்கள். அவள் மாமியார் வீட்டில் என்னும்போது அழைப்பு இல்லாமல் எப்படி போவது என்று வர தயங்கி விட்டார்கள். வந்த ஒன்றிரண்டு பேரிடமும் யாரும் அத்தனை ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவர்கள் உடனே கிளம்பி விட்டனர்.

பிறகு இங்கேயே இருக்கிறோம் என்று ராதிகா பெற்றோர் வேண்டியதை இடவசதி போன்ற காரணங்கள் கூறி மறுத்து அனுப்பி விட்டனர்.

டெலிவரிக்கு அட்மிட் செய்யும்போது கூட சொல்லவில்லை. குழந்தை பிறந்த பின்பே ராதிகா பெற்றோர்களுக்கு கூறினார்கள்.

டெலிவரி போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் , தற்போது ராதிகா மிகபெரிய மன உளைச்சலுக்கு ஆளானாள். அவள் அம்மா அருகில் இல்லாதது, யாரிடமும் மனம் விட்டு பேசாதது எல்லாம் சேர்ந்து எப்போதும் ஒருவித அலைபாயும் மன நிலையிலிருந்தாள்.

இதை கவனித்த பாலாவின் அம்மா, இவளிடம் குழந்தையை கொடுத்தால் ஆபத்து என்று எண்ணி பால் கொடுக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னுடனே வைத்துக் கொண்டார், அது பசிக்கு அழும்போது மட்டுமே எடுத்து வருவார். அது பசி அடங்கி ராதிகா முகம் பார்க்கும் முன் வெடுக்கென்று எடுத்து சென்று விடுவார்.

குழந்தைக்கு அருண் என்று பெயர் வைத்தனர். அந்த வைபவத்தில் குழந்தை கூட ராதிகாவை சற்று நேரம் அமர்ந்து இருக்க விட்டார். பிறகு குழந்தையை தன்னோடு வைத்துக் கொண்டார்.

பாலாவும் ஆபீஸ்லேர்ந்து திரும்பிய பின் தன் குழந்தையோடும், தன் அம்மாவோடும் நேரம் செலவழிப்பானே தவிர, ராதிகாவை கண்டு கொள்ள மாட்டான்.

நாட்கள் செல்ல செல்ல , ராதிகா அந்த வீட்டில் சமையல் அறையை விட்டு வெளியே வருவது இல்லை. அவளின் உடம்பை பார்த்து மருந்து வாங்கி கொடுத்த அவள் புகுந்த வீட்டார், அவள் மனதை பார்க்கவில்லை.

அவளின் குழந்தை வந்தால் கூட, மூன்றாம் நபரின் குழந்தை போல் பார்ப்பாள். அந்த குழந்தைக்கும் அவள் யார் என்று தெரியவில்லை, யாரோ தன் வீட்டில் இருப்பவர் என்று மட்டுமே தெரியும்.

ராதிகாவின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. எழுப்பினால்தான் எழுந்தாள். போய் brush பண்ணு என்றால் மட்டுமே செய்வாள். இதை போல் ஒவ்வொரு வேலையும் இப்படியே செய்ய ஆரம்பிக்க, அவளை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்,

அவர் அவளை டெஸ்ட் செய்து விட்டு , அவளின் தளர்ச்சி மற்றும் நல்ல தூக்கத்திற்கும் மருந்து கொடுத்தனர். ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

சற்று நாள் போராடி பார்த்த பாலாவும், அவன் அம்மாவும் இப்போது அவள் பெற்றோரை அழைத்து அவளை கூட்டி செல்ல சொல்லி விட்டனர். அவளை அங்கே செல்கிறாயா என்று யாரும் கேட்கவும் இல்லை. அவளும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

ராதிகாவின் பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற பின் அவளை அங்குள்ள டாக்டரிடம் காண்பித்தார்.

அவர் நன்றாக அவளை டெஸ்ட் செய்துவிட்டு கூறியது,

“உங்கள் மகளுக்கு தேவை மனநிம்மதியும், சரியான சாப்பாடு மற்றும் உறக்கமும் தான். “

அவள் அம்மா “டாக்டர் அங்கே வேறு ஏதோ சொன்னார்களே?”

“அவர்கள் கொடுத்த ட்ரீட்மென்ட் எல்லாம் சரிதான்.. அவர்கள் உடலிற்கு மட்டும்தான் மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மனதுக்கு அல்ல. அதை சரி செய்யவேண்டியது அவளின் சுற்றம் தான்.” என்றார்.

மேலும் சில ஆலோசனைகள் சொல்லி அவளை பார்த்துக் கொள்ளுமாறு ராதிகாவின் பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

இங்கே வந்த பின்னும் கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்த பெரிய மாற்றமும் அவளிடத்தில் இல்லை. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறினாள்.

டாக்டர் ஆலோசனைப்படி அவளை பேச வைக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. பின் சாப்பிடும் போது என்ன சாப்பிடுவாய், எப்போது தூங்குவாய் என்பது போன்ற சின்ன சின்ன கேள்விகள் மூலம் அவளை புகுந்த வீட்டில்  யாரும் சாப்பிட்டாயா என்று கேட்பதில்லை, சரியாக தூங்குகிறாளா என்று கவனிப்பதில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவளின் குறையை சுட்டிக்காட்டி பேசுவதால் அவள் யாரோடும் பேசுவதில்லை, வெளியே எங்கும் அழைத்து செல்வதில்லை என்று புரிந்தது.

ராதிகாவின் பெற்றோருக்கு மிகுந்த வேதனை ஆகிவிட்டது. தங்களின் தவறால்தான் தங்கள் பெண் இத்தனை கஷ்டம் அனுபவித்து இன்றைக்கு உடம்பில் சதையே இல்லாமல் எலும்பு மட்டுமே கொண்டு இருக்கிறாள்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளின் வேலையை அவளே செய்து கொள்ள ஆரம்பித்து இருந்தாள். அதோடு இங்கே அவள் அம்மா அவளுக்கு சத்தான ஆகாரமும், அதே சமயம் நல்ல உறக்கமும் இருக்குமாறு பார்த்துக் கொண்டதில் உடம்பும் சற்று பார்கிறார் போல் மாறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.