(Reading time: 37 - 74 minutes)

ங்கிருந்தோ சுவர் கடிகாரம் பன்னிரண்டு மணியை உறுதி செய்ய ஒலியை எழுப்ப, அவனும் எழுந்து அமர்ந்துக்கொண்டான். அவனை விநோதமாக பார்த்தவள், இப்போதேவா தனக்கு அந்த அதிர்ச்சியை தர போகிறான் என்று மனம் பயப்பட துவங்கிவிட்டது. அதே நேரத்தில் கைபேசியும் அழைப்பை துவங்க, அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவள். இப்போ என்ன பண்ண போகிறானோ, எல்லாம் என்னால தான் நான் என்னோட கடந்த காலம்னு மிருதுளா சொன்னதை சொன்னதில இருந்து தான் இந்த மாற்றம். என்ன கண்டிப்பா தப்பா தான் நினைச்சிருப்பான் போல, நான் என்ன பண்ணினேன்னு எனக்கே நியாபகம் இல்லையே ஆண்டவா... என்று மனது மேலும் மேலும் வருந்தியது.

அதே நேரம் வெறுப்பும் அதிகமானது, அதித அன்பு மூளையை மழுக்கிவிடும் போல. காதலித்து அவ்வளவு பெரிய தவறா.. அதுவும் என் நினைவே இல்லாமல்... எப்படி நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அவனால் நினைக்க முடியும் என்று கோவம் தான் அதிகமானது. இதெல்லாம் இவள் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவன் வெளிக்கதவை திறப்பதும் யாரோடோ பேசுவதும் பின்பு சில மணி நேரம் மௌனம் எல்லாம் காதில் விழுந்தது. ஆனால் எழுந்து சென்று பார்க்க தான் கால்கள் தடுமாறியது, அப்படியே அமர்ந்திருந்தாள் மெத்தையில்.

சிறிது நேரத்திலேயே கதவு வரையில் வந்தவன். “சாய்ந்தபடி ரோனி... எழுந்து வா உன்னை அறிமுகம் செய்து வைக்கணும்” என்றான் அழுத்தமாக. அவள் மனம் கொதித்தது என்ன தைரியம் இவனுக்கு.. “எப்படி உங்களால இப்படி நடந்துக்க முடியுது நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை எப்படி நினைக்க முடியுது அதுவும் அவளை இங்கேயே அழைச்சிட்டு வர முடியும்?? என்னை அந்த அளவுக்கா வெறுத்துட்டீங்க... இத்தனை நாள் என்கிட்ட பழகினது எல்லாம் எவ்வளவு போலி... என்னை ஏமாத்தி இருக்கீங்க...”  என்று படபடப்பாக கோவத்தில் பேசியவளுக்கு தன்னையும் மீறி கண்களில் இருந்து அழுகை தான் வந்தது.

இத்தனை நாள் அவள் சோகத்திலும் அழுது பார்க்காததாலோ என்னவோ கொஞ்சம் மனம் இறங்கிவிட அருகில் சென்று அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தவன். “ரோனி நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதை போலவே அவளும் எனக்கு முக்கியம் சொல்ல போனால் அவளால தான் நீயே எனக்கு கிடைச்ச...” என்றதும் சுர்ரென்றது அவளுக்கு, “அப்படி ஒரு பிச்சை...” என்று அவள் சொற்களை முடிப்பதற்குள் வாயை கைகளால் மறித்தவன்... “யோசித்து பேசு ரோனி.. என்கூட வா... உனக்கே புரியும்...” என்று அவளது கைகளை அழுத்தி ஆறுதல் கூறி அழைத்து சென்றான். அவனது செய்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தது. அதே நேரத்தில் அவனை விட்டு பிரிய போவதில்லை என்ற புது நம்பிக்கை அவனது பார்வையின் மூலம் தோன்றிவிட எழுந்து அவனோடு சென்றாள். அவளை முன்னே செல்லவிட்டு பின்னால் வந்தவன் நொடிகளில் அவளது கண்களை துணியினால் கட்டிவிட்டான்.

“ஹே... என்ன பண்றீங்க???” என்று துணியினை கைகளால் தொட்டுபார்த்தவள்... அதை எடுக்க போக... “ரோனி நோ... இப்போ கழட்டாத...” என்று அவளை மேலும் முன்னறைக்கு கூட்டி சென்றான். ஒவ்வொரு அடியும் இதய துடிப்பு அவளுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. நடைபயணம் நின்றுவிட மெல்ல அவளது கண்கட்டினை அவிழ்த்துவிட்டு “இப்போ திறந்து பாரு” என்று காதோரம் கூறினான். ஆனால் படபடப்பு அதிகமாக முன்னே அந்த பெண் நிற்க போகிறாள் என்ற பயத்திலேயே கண்களை திறக்காமல் தலை குனிந்துக்கொண்டாள் “வேண்டா ராஜு...” என்று கூறி பின்னால் திரும்பி போக இருந்தவளை பிடித்து “ரோனி.. என்ன பாரு ஒரு நிமிஷம்...” என்றான்.

கண்களை திறந்தவள் அவனை ஏக்கமாக பார்க்க, “ஏன் என்ன இப்படி துன்புறுத்தி பார்க்குற ராஜு.. என்னால இதை தாங்கிக்க முடியாது உனக்கு இன்னொரு பெண்ணை பிடிச்சிருந்தால்...” என்று துவங்கியவளுக்கு மேலும் சொல்ல முடியவில்லை. அவள் தடுமாற்றத்தை பார்த்தவன் அவள் தோள்களோடு திருப்பி “அங்க பாரு...” என்றான்.

அவள் கண்களுக்கு முன்னால் நபர் இல்லை புகைப்படம் தான் இருந்தது. அவளுடைய புகைப்படம் பற்கள் வரிசையாய் தெரிய கள்ளத்தனம் இல்லாத சிரிப்போடு அவள் புகைப்படம் ஒரு திரையில் தெரிந்தது. அதை சிறிது நேரம் பார்த்தவள் அது தான் இப்போது எடுத்த புகைப்படம் போல இல்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

“இவளை தான் நான் introduce பண்ணனும்னு சொன்னேன்...” என்று அவன் கூறவும் அவள் இப்போது புரியாமல் முழித்தாள். “நீ ஏன் என்னையே introduce பண்ணி வைக்கணும்... இந்த போட்டோ வீட்ல இல்லவே இல்லையே இது எப்பயோ எடுத்த மாதிரி இருக்கு... உனக்கு எப்படி கெடச்சுது... மிருதுளா குடுத்தாளா...” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது கேள்வியினை பொறுமையாய் கேட்டவன்... விளையாடி பார்க்கும் எண்ணத்தோடு “ஹ்ம்ம் அவ்ளோ தான்ப்பா என்னோட வேலை முடிஞ்சிருச்சு நான் introduce பண்றேன்னு மட்டும் தான் சொன்னேன் மீது கதையெல்லாம் உனக்கெதுக்கு” என்று கூறிவிட்டு சிரித்தவண்ணம் போய் அமர்ந்துக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.