(Reading time: 9 - 18 minutes)

அமேலியா - 32 - சிவாஜிதாசன்

Ameliya

மெரிக்காவின் பிரதான விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காலை ஒன்பது மணியைக் கடந்திருந்தாலும் இன்னும் விடியாத பொழுதைக் காட்டிக்கொண்டிருந்தது வானம். கருமேகங்கள் எந்த நேரத்திலும் மழைப் பொழிவைத் தொடங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

வழக்கத்தை விட குளிர்காற்று அன்று சற்று அதிகமாய் இருந்ததால் ஆட்டுத் தோலிலான தடித்த மேலாடையை அணிந்திருந்தான் வசந்த். அவன் கவனம் தொலைக்காட்சியில் நிலைத்திருந்தது.

அமெரிக்க ராணுவம் சதாம் ஹுசைனை மும்முரமாய் தேடிக் கொண்டிருப்பதாக செய்தி வாசிப்பாளர் கூறிக் கொண்டிருந்தார். அங்கு மக்கள் வாழும் பகுதிகளின் நிலைமையை சில நிமிடங்கள் தொகுத்து வழங்கினார்கள். இடிந்த வீடும், வீடில்லாத ஏழைகள் வாழும் பகுதி, அந்த மக்கள் ராணுவத்தினர் மத்தியில் எப்படி வாழ்கிறார்கள், தங்களின் அன்றாட தேவைகளை எப்படி பூர்த்தி செய்கிறார்கள் என அவர்கள் படும் அவலங்களை கண் முன்னே காட்டினார்கள்.

தீவிரவாத தாக்குதலில் மகனை இழந்த பெண்ணொருத்தி கல்லறை அருகே அமர்ந்து கதறி அழுதது வசந்தின் இதயத்தை கனக்கச் செய்தது. ஈராக் மக்களின் துயரமான வாழ்க்கையை பார்த்த வசந்த், தான் எவ்வளவோ அதிஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைத்தான். அது போன்ற கொடிய சூழலில் தான் அமேலியா வாழ்ந்து வந்திருக்கிறாள் என்று எண்ணியபோது அவள் மேல் இருந்த பரிதாபம் வசந்த்திற்கு இன்னும் அதிகமாகியது.

"வசந்த்" மேகலாவின் குரல் அவன் கவனத்தை சிதைத்தது.

"என்ன அக்கா?"

"பலமான யோசனையோடு இருக்க போல" 

"சும்மா ஒரு கதை யோசிச்சிட்டு இருந்தேன்"

"சீக்கிரமா உன் வாழ்க்கையில முன்னேற்றம் வரணும்டா"

"நானும் அதுக்கு தான் அக்கா காத்துட்டு இருக்கேன்"

"நாங்க இல்லைன்ற தைரியத்துல ஓவரா ஊரு சுத்தி உடம்பை கெடுத்துக்காத. நேரத்துக்கு சாப்பிடு"

"சரி அக்கா. இந்தியாவுல எங்க தங்க போறிங்க?"

"ரங்கராஜன் மாமா வீட்டுல தான்"

"அவரா?" வசந்த் அதிர்ச்சியை கக்கினான்.

"ஏண்டா?"

"அப்பாவை விட சாஸ்திரம் சம்பிரதாயம் அதிகம் பார்ப்பாரே. அது மட்டுமில்லாம உலகத்திலயே அவர் மட்டும் தான் குறிக்கோளோட பொறந்த மாதிரியும் மத்தவங்க எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டா மாதிரியும் நினைப்பார்"

"அவரை மாதிரியான ஆளுங்களை தான் அப்பாவுக்கு பிடிக்கும்"

வசந்த் மேற்கொண்டு எதுவும் பேச விருப்பமில்லாமல் அனல் மூச்சை விட்டெறிந்தான்.

"இரண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?" என நாராயணன் அவர்கள் அருகில் வந்தார்.

"எதுவும் இல்லைப்பா. ஒழுங்கா சாப்பிடு, ஊரு சுத்தாதேன்னு சொல்லிட்டு இருக்கேன்"

"ம்.. வசந்த் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா. ஆனா அத இந்த இடத்துல பேசுனா சரியா இருக்குமான்னு தெரியல"

"சொல்லுங்கப்பா"

"உன் எதிர்கால கனவு நிறைவேறும்னு உனக்கு நம்பிக்கையிருக்கா?"

"புரியலப்பா"

"உன் இயக்குனர் கனவை கேக்குறேன்பா"

"எனக்கு நம்பிக்கையிருக்குப்பா. என்னால சாதிக்க முடியும்"

இதெல்லாம் அப்பா எதற்கு கேட்கிறார் என்ற கேள்வியும் வசந்திற்குள் எழுந்தது.

"ரங்கராஜனை பத்தி என்ன நினைக்கிற?"

வசந்த் புதிரான பார்வையை வீசினான். 

"ஏன்பா அவரை பத்தி கேக்குறீங்க?"

"காரணம் இருக்கு பதில் சொல்லு"

"அவரை பத்தி சொல்லனும்னா, கடவுள் மேல நல்ல பக்தி உள்ளவரு. நல்ல எண்ணம் கொண்டவர்"

நாராயணன் புன்னகைத்தார். "சரியா தான் தெரிஞ்சு வச்சிருக்க. அவர் பெண்ணை பத்தி என்ன நினைக்குற?"

வசந்த் அதிர்ந்தான். "எந்த பொண்ணுப்பா?"

"ரங்கராஜன் பொண்ணு தான்பா. அவ பேரு கூட என்னவோ..." என்று தலையை தேய்த்தபடி யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன். "நல்ல பேருப்பா அது. மேகலா, ரங்கராஜன் பொண்ணு பேரு என்ன?"

"சுபலட்சுமி"

"ஆங்! எவ்வளவு அழகான பேரு மங்களகரமா இருக்கு"

"ஆமாப்பா" மேகலா நாராயணனுக்கு ஒத்து ஊதினாள்.

வசந்தின் கண்கள் மேகலாவை நோக்கி கூர்மையாக பாய்ந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.