(Reading time: 23 - 45 minutes)

"அது சரிங்க தம்பி.. உங்க சொந்த ஊர் எதுங்க?.. அன்னிக்கு அக்கா வீட்டில பார்த்தபோது கொஞ்சம் சொன்னீங்க.. உங்க பேரண்ட்ஸ் கூட இப்படிச் சமூக நோக்கு உள்ளவங்களா?.. இப்ப எங்க இருக்காங்க?.. உங்களைப் பத்தி சொல்லலாம்னா சொல்லுங்க?.."

"ஆன்ட்டி நீங்க தம்பி தம்பின்னு கூப்பிடுவது சின்ன வயசில் எங்க தாத்தா கூப்பிடுவது போலவே இருக்கு.. இப்போ அவர் உயிரோடு இல்லை.. எங்கப்பாவும் கொஞ்சம் வருஷம் முன்னால் தவறிட்டாங்க.. என்னைப்பத்தி பெரிசா சொல்லற அளவு ஒண்ணுமில்லைங்க.. அம்மா, தம்பி தங்கை இருக்காங்க.. எல்லோரும் வேலூர் பக்கத்தில் வாழையூர் ஒரு சின்ன ஊரில் இருக்காங்க.. கொஞ்சம் நிலம், நீச்சு இருக்கு எங்களுக்கு.. வாழைதோப்பும் இருக்கு.. எங்களது பொதுவாக விவசாயக் குடும்பம்தான்.. ஆனால் இப்போ அவ்வளவா விவசாயம் சரிவரலை.. தம்பி எஞ்சினியரிங்க் முடிச்சிருக்கான்,.. வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்கிறான்.. நான் பணப்பற்றாக்குறையால் தான் இங்க வேலைக்கு வந்திருக்கேன் ஆன்ட்டி.."

பொதுப்படையாகப் பேசினான் சிங்காரவேலன்.

"ஓ.. எங்க தாத்தா ஊரெல்லாம் கூட வேலூர் அந்தப் பக்கம் ராணிப்பேட்டைன்னு சொல்லுவாங்க.. சின்ன வயசில அங்க போனதுதான்.. நாங்களெல்லாம் சென்னைக்கு வந்து வருஷக்கணக்காச்சு.. ஏன் தம்பி நீங்க விவசாயம் பார்க்கலை?.. வாழைத்தோப்புன்னா நல்லா வருமானம் வருமே.. எனக்குச் சரியா தெரியலை.. நீங்களும் அக்ரீதானே படிச்சிருக்கீங்க.."

"ம்.. அப்படிச் சொல்ல முடியாதுங்க.. நான் விவசாயம்தான் படிச்சேன்.. எங்கப்பாவுக்கு அதில பெரும் குறை.. தலை மகன்.. ஏதாவது இஞ்சினியரீங்க் படிச்சி வெளிநாட்டில சம்பாதிப்பேன்னு நினைச்சாங்க.. எனக்கு அதெல்லாம் பிடிக்கலைங்க.. நீங்களே சொல்லுங்க.. நம்ம நாட்டில என்ன இல்லைன்னு இவங்களெல்லாம் எதையோ தேடிகிட்டு ஓடிப் போறாங்க.. பாருங்க என் தம்பிக்கே வெளிநாட்டு மோகம்.. ஓடிட்டான்.. என்னால தடுக்கவா முடியும்?.. அவன் வாழ்க்கை அவன் இஷ்டம் இல்லையா.." என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன்..

"என்ன சொல்ல ஆன்ட்டி.. நான் விவசாயத்தில் மேற்படிப்புகூடக் கோயமுத்தூர் காலேஜ்ல படிச்சேன்.. கொஞ்சம் காலம் படிச்சி முடிச்சி எங்க நிலத்தில் சாகுபடிப் பண்ணலாம்னு நினைச்சி ஆரம்பிச்சேன்.. குடும்பத்தில் சில சிக்கல்கள்.. சிலதெல்லாம் சொல்லமுடியாதவை.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. அப்பா திடீரென்று தவறிட்டாங்க.. அம்மா பாவம்.. கிராமத்துப் பெண்மணி.. நிலைகுலைச்சிப் போயிட்டாங்க.. தம்பியும் படிப்பை முடிக்கும் நேரம்.. தங்கை டிகிரி முடிச்சிட்டா கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சோம்.. எல்லாமே மாறி போச்சு.. நான் குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயம்.." என்றவன் சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த தமயந்திக்கு ஏனோ அவனைக் கண்டு பாவமாக இருந்தது.. அதற்கேற்ப அவன் முகபாவங்களும் வேதனையில் மாறியதோ..

சட்டெனத் தன்னைச் சுதாரித்துக் கொண்ட சிங்காரவேலன்..

"எனக்கு அதில் எந்தச் சிரமமும் இல்லை.. என் குடும்பத்தை நான் தானே எங்க அப்பாவுக்கு அடுத்து பார்த்துக்கணும்.. அதெல்லாம் குறை இல்லை.. ஆனால் மழை சரியா இல்லை.. சாகுபடியே இல்லை.. நிலத்து மேல வேறு எக்கசக்க கடன்.. வேறு வழியில்லாமல் சமாளிக்க முடியாமல் நான் இப்போ சென்னைக்கு வந்திருக்கேன்.. நான் காலேஜ் டேஸ்லேயே இப்படிப் பசுமை புரட்சி இயக்கத்தில மெம்பர் ஆன்ட்டி.. அதான் கொஞ்சம் நம்ம நேரத்தை நல்லபடியா செய்யலாம்னும் ஏதோ என்னாலானதை செய்து கொண்டிருகேன்.." என்று நிறுத்தினான் அதற்கு மேல் தன்னைப்பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்பாமல்..

"ம்.. விவசாயத்தை மொத்தமா நம்பவும் முடிவதில்லை இப்பல்லாம்.. ந்யூஸ்ல காமிக்கிறாங்க.. எத்தனையோ ஏழை விவசாயிகள் விளைச்சல் இல்லைன்னு தற்கொலைக் கூடப் பண்ணிட்டாங்கன்னு.. சிலசமயம் கேட்கவே கஷ்டமாத்தான் இருக்கு.. அரசாங்கம் என்ன செய்யறாங்களோ?.. ஒண்ணும் புரியலை.." தமயந்தியும் ஏதோ பேசத் தொடங்க..

"ம்.. அப்படியில்லை ஆன்ட்டி.. யாரையும் இதில் குற்றம் சொல்ல முடியாது.. அரசாங்கம் எவ்வளவோ நல்ல திட்டங்களைக் கொண்டுதான் வர்றாங்க.. அதை மக்களும் சரியாப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிஞ்சிக்கணும்.. பாருங்க.. இப்போ உங்களை மாதிரி எத்தனைப்பேர் இப்படிச் சமூக நலத்திட்டங்களுக்கு உதவ முன் வருகிறார்கள்.. நீங்களும் இந்தக் காலனி மாதர் சங்க உறுப்பினர்தான்.. உங்களைப் போல உங்க ப்ரெண்ட்செல்லாம் இந்தப் பார்க் அமைக்க முன் வர்றேன்னு சொல்லி இருக்காங்க.. இன்னும் நிறையப் பேர்ப் பலவிதங்களிலும் உதவியும் செய்யறாங்க.. எல்லாவற்றையும் விட, இந்தத் தொகுதி கவுன்சில மகளிர் மன்ற வார்ட் இல்லையா?.. அவங்க முன்னாடி நின்றதால்தான் நமக்கு இந்தத் தரிசில் நிலம் சுலபமாகக் கிடைச்சிருக்கு.. ஒதுக்கப்பட்ட இடத்தை அதையும் பில்டிங் கட்டி விடாமல் இருந்தாங்களே.. அதை நாம் பாராட்டியே தீரணும்.."

"ஆன்ட்டி.. இப்போ ஆல்மோஸ்ட் பாதி வேலை முடிஞ்சாச்சு பாருங்க.. இந்த வாரக் கடைசியில் மரக்கன்றுகளைச் சின்னப் பசங்க மூலம் நடலாம்னு தீர்மானிச்சி இருக்கோம்.. நீங்க உங்க மாதர் சங்கம் மூலம் அதுக்கு அரேன்ஞ் பண்ணா நல்லா இருக்கும்.." என்றான் தயக்கமாக..

"சொல்லிட்டீங்க இல்ல.. நீங்க கவலையே படாதீங்க.. இங்கே கவர்மென்ட் ஸ்கூல் இருக்கு.. அங்கு இருக்கும் பசங்களுக்கு நாங்க நிறைய ஸ்பான்சர் பண்ணுகிறோம் எங்கச் சங்கம் மூலம்.. அந்தப் பிள்ளைகள் சிலரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.