(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 01 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

முத்து இல்லம்

ங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை..

கிளிக்கூட்டம் போல் எங்கள் கூட்டம்தான்..

ஆனந்த பூந்தோட்டம்.. அன்பின் ஆலயம்..

தொலைக்காட்சியில் இந்த பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, யாரும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் எந்த அறிகுறியும் இல்லை.. சிறுவர்கள் ஒருப்பக்கம் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிரத்தையாக அவரவர் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.. அந்த இல்லத்தில் இருக்கும் அலங்காரங்களை பார்த்தால், அங்கு ஏதோ விஷேஷம் நடப்பதை எடுத்துக் காட்டியது..

தாம்பரத்தில் முக்கியப் பகுதியில் உள்ள அந்த இல்லம், ஒரு கிரவுண்ட் நிலத்தில் முக்கால்வாசி பாகத்தில் வீடும், பின்பக்கம் உள்ள மீதி கால்பாகம் கிணறோடு கூடிய தோட்டமும் அமைந்துள்ளது… மொட்டை மாடியில் ஒரு சிறிய பகுதி கூரையால் வேயப்பட்ட அறை உள்ளது.. மீதி இடம் வெட்டவெளியான மொட்டை மாடி..

முத்தழகி அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணி.. 80 வயதை நெருங்கிய அவர், அந்த குடும்பத்துக்கு வழிகாட்டி.. புகழேந்தியின் அன்னை.. புகழேந்தி அந்த குடும்பத்தின் தலைவர், அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியர்.. இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெற இருப்பவர்..

அன்னைக்கு நல்ல மகன், சகோதரிகளுக்கு நல்ல அண்ணன், மனைவிக்கு நல்ல கணவன், பிள்ளைக்களுக்கு நல்ல தந்தை, பேரப்பிள்ளைகளுக்கு நல்ல தாத்தா, மாணவர்களுக்கு நல்ல ஆசான்.. மொத்தத்தில் இந்த நாட்டின் நல்ல குடிமகன் என்று எல்லாப் பாத்திரங்களையும் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார் புகழேந்தி.. அவர் படித்துக் கொண்டிருக்கும் போதே, தந்தை இறந்துவிட்டதால், தாய் மற்றும் சகோதரிகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவருடையதானது.. படித்தப்படியே குடும்ப பொறுப்பையும் ஏற்று, ஒரு பேராசரியராக உயர, அவர் நிறையவே உழைக்க வேண்டியிருந்தது..

புகழேந்தியின் மனைவி பூங்கொடி… ஒரு ஆண்மகன் அனைவருக்கும் நல்லவனாக தெரிய வேண்டுமென்றால், அதற்கு அவனின் மனைவியின் ஒத்துழைப்பும் வேண்டும், பூங்கொடியும் அப்படித்தான்… கணவனின் சொல் கேட்டு, சில சமயம் புகழேந்தி பிரச்சனைகளை கண்டு துவளும் போது தைரியம் சொல்லி, அவரோடு இணைந்து குடும்ப பொறுப்புகளை தானும் சுமந்து, பிள்ளைகளை வளர்ப்பதிலுருந்து குடும்ப உறவுகளை பேணிக் காப்பது வரை புகழேந்தியோடு துணை நின்றவர்..

புகழேந்தி, பூங்கொடி தம்பதியருக்கு இரு பிள்ளைகள்.. மூத்தவள் மலர்கொடிக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.. இளையவன் மகிழ்வேந்தன்(இந்த கதையின் நாயகன்) ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துவிட்டு சொந்தமாக ஒரு சிறிய ரெஸ்ட்டாரன்ட் நடத்தி வருகிறான்.. அவனுக்கு தான் இன்று நிச்சயதார்த்தம்.

புகழேந்தியின் மூத்த சகோதரி கலையரசி.. புகழேந்தியை விட நான்கு வயது சிறியவர்.. புகழேந்தி, பூங்கொடிக்கு திருமணமான ஒரு வருடத்திற்கு பின், ஒரு நல்ல வரன் பார்த்து, புகழேந்தியே அவரின் திருமணத்தை நடத்தி வைத்தார். கலையரசிக்கு இரண்டு மகள்கள்.. மூத்தவள் மணிமொழி ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது, இளையவள் அருள்மொழி பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, மேற்படிப்பிற்காக தயாராகிறாள்..

அருள்மொழி பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவளின் தந்தை இறந்துவிட, இரண்டு பெண் பிள்ளைகளோடு புகுந்த வீட்டு ஆதரவு சரியாக கிடைக்காமல்,  கலையரசி தன் பிறந்த வீட்டிற்கே வந்துவிட, அன்றிலிருந்து கலையரசியும் அவர் பிள்ளைகளும் புகழேந்தியின் பொறுப்பு என்று ஆனார்கள்… இதுவரை எந்த சுணக்கமுமில்லாமல் புகழேந்தி அவர்கள் மூவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாகவே செய்கிறார்..

புகழேந்தியின் இளைய சகோதரி எழிலரசி, கலையரசியை விட இரண்டு வயது சிறியவர்.. கல்யாண வயது வந்தும், அவர் ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவர் திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருந்தது.. கிட்டத்தட்ட திருமணம் ஆகாமலேயே முப்பது வயதைக் கடந்திருக்க, பின் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆயிருந்த கதிரவன், புகழேந்தியோடு ஒன்றாக பணிபுரிந்தவர், அவரின் குணநலன்கள் பிடித்துப் போய், அவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதை தெரிந்து, பின் தன் சகோதரியை புகழேந்தி கதிரவனுக்கு மணமுடித்தார்.. கதிரவன் எழிலரசிக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் தமிழரசு 9 -ம் வகுப்பு படிக்கிறான்.. இளையவன் புவியரசு 6 -ம் வகுப்பு படிக்கிறான்..  இவர்களும் அதே சென்னையிலேயே குரோம்பேட்டையில் வசிக்கின்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.