(Reading time: 14 - 27 minutes)

அமேலியா - 33 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியா நிறுத்தாமல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தாள். கதவைத் திறக்கத்தான் யாரும் முன் வரவில்லை. மீண்டும் ஜன்னல் அருகே ஓடிய அவள், தான் பார்த்த இளம்பெண் தென்படுகிறாளா என்று பார்த்தாள். அவளையும் காணவில்லை.

மெல்ல மெல்ல அமேலியா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். கொந்தளித்த அவள் மனம் தன் தவிப்பை நிறுத்தியது. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து தண்ணீரை குடித்தாள். வெளியில் அவ்வளவு குளிர் சூழ்ந்திருந்த போதும் குளிர் நீரை ஏன் குடித்தோம் என்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

தான் கொண்டு வந்த பையை திறந்து வில்லியம்ஸின் ஆல்பத்தை எடுத்து புகைப்படங்களை திருப்பினாள். ஜன்னலின் வெளியே தான் பார்த்த உருவமும் புகைப்படத்தில் உள்ள பெண்ணின் உருவமும் ஒத்துப்போவது அமேலியாவிற்கு ஆச்சரியமளித்தது.

இவ்வளவு பெரிய ஊரில் அந்த புகைப்படங்கள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படுமா என்று அவள் பலமுறை யோசிச்சிருக்கிறாள். ஆனால், வில்லியம்ஸின் காதலியைக் கண்டது, அமேலியாவின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

கதவு மட்டும் திறந்திருந்தால் அக்கணமே வில்லியம்ஸின் காதலியிடம் புகைப்படங்களும் மோதிரமும் கொடுக்கப்பட்டிருக்கும். விதியின் கண்ணாமூச்சு ஆட்டம் எத்தனை பேரிடம் தான் விளையாடுமோ என நினைத்தாள் அமேலியா.

வில்லியம்ஸின் மோதிரத்தை எடுத்து பார்த்தாள். நிச்சயம் அது அவர்களின் கல்யாண மோதிரம் தான் என புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. தொலைக்காட்சியில் சில படங்களில் கிறிஸ்துவர்கள் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொள்வதை அவள் பார்த்திருக்கிறாள்.

மனதில் எத்தனை ஆசைகளோடு திருமண பந்தத்தில் கலக்க மோதிரத்தை வாங்கியிருப்பார்கள். காதலனின் இறந்த செய்தி அவளுக்கு தெரியுமா?  அவள் முகத்தில் துளியும் மகிழ்ச்சியில்லாமல் சாலையில் சென்றதை அமேலியா நினைவு கூர்ந்தாள். இந்த புகைப்படங்களையும் மோதிரத்தையும் அவளிடம் கொடுத்தால் தன் காதலனை எண்ணி அவள் மனம் மிகவும் துன்பம் கொள்ளும்.

துன்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மானிடர்கள் அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி என்னும் ஒளியை அடையும்போதுதான் தெரியும் அந்த மகிழ்ச்சியும் மற்றொரு துன்பமாக இருக்கும் என்று. பள்ளிப்பருவத்தில் தன் ஆசிரியை கூறியது எவ்வளவு உண்மை பதிந்த வார்த்தைகள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே வாழ்ந்து முடித்து விடுகிறோம். சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணம் செய்தால் இறுதியில் வழி மாறி வந்திருப்பது தெரிகிறது. மீண்டும் செல்ல மனதினில் திடமில்லை, உடலிலும் பலமில்லை. இருந்த இடத்திலேயே அமர்ந்து விடுகிறோம்.

இறைவன் கேலியாக சிரிப்பது காதில் விழுகிறது. எதற்காக தவறான பாதையில் என்னை வழி நடத்தினான் என்ற கேள்வி எழுகிறது. இறைவன் நல்லவனா கெட்டவனா என்ற எண்ணம் உருவாகிறது. அதற்கு விடை தெரியாமலேயே ஆன்மா மேலோகம் சென்றுவிடுகிறது. அதன்பின் சொர்க்கம் நரகம் என்று சொல்கிறார்கள். பார்த்தவர்கள் தான் யாருமில்லை.

பல பல எண்ண ஓட்டங்கள், ஏகப்பட்ட கேள்விகள், விடையை இயற்கையே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட்டாள் அமேலியா.

ஜெஸிகா அலுவலகம் செல்லும் அவசரத்தில் கலைத்து சென்ற பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து வீட்டை சுத்தப்படுத்தினாள் அமேலியா. அடுக்குமாடி குடியிருப்பு அவளுக்கு புதிதான ஒன்று. மாமரமொன்றில் குரங்குகள் வாழ்வது போல இந்த பெரிய கட்டிடத்தில் மனிதர்கள் தங்களுக்கான இடத்தை பிரித்துக்கொண்டு வாழ்வது அமேலியாவிற்கு வேடிக்கையாய் இருந்தது.

அவ்வாறாக யோசித்துக்கொண்டு படுக்கையறையை சுத்தப்படுத்தியபோது எதிர்பாராவிதமாக புகைப்படமொன்றை கீழே தட்டி விட்டாள். அதை எடுத்துப் பார்த்த அமேலியா, ஜெஸிகா, வசந்த் மற்றும் சில நபர்கள் அந்த புகைப்படத்தில் இருப்பதைக் கண்டாள்.

திடீரென அவளது விழிகள் வசந்தை சில நொடிகள் நோக்கின. உடனே அவள் உடல் சில்லிட்டது. தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என அவள் அஞ்சினாள். அந்த சில நொடி பார்வை அவளையறியாமல் அவள் இதயத்தை என்னவோ செய்தது. அவளால் அந்த உணர்வுக்கு பெயர் சூட்டமுடியவில்லை. அவள் நினைவுகள் முழுவதையும் வசந்த் ஆக்கிரமித்தான். தொடக்கத்தில் இருந்து வசந்த் அவளிடம் நடந்து கொண்டது கோர்வையாக அவள் மனதில் நிழலாடின.

ஓவியம் வரைந்து கொடுத்தபோது, வசந்த் பார்த்த பார்வைக்கான அர்த்தம் அமேலியாவிற்கு புரியத் தொடங்கியது போலிருந்தது. விழி மொழி பேசும் என மெல்ல உணரத் தொடங்கினாள் அமேலியா. இறுதியாக ஜெஸிகாவின் வீட்டில் தன்னை கடைசியாக வசந்த் பார்த்த பார்வை அமேலியாவின் இதயத்தில் சொல்லமுடியா வலியை உண்டாக்கியது.

குளிரிலும் அமேலியாவின் முகம் வியர்க்கத் தொடங்கியது. வசந்தை நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்தினாள். தான் தவறு செய்துவிட்டோம், அந்த எண்ணம் திடீரென ஏன் ஏற்பட்டது என்பதை நினைக்க நினைக்க அமேலியாவிற்கு தலையே சுற்றியது.

தான் செய்த தவறுக்கு தரையில் மண்டியிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.